ஒரு பாலகனுக்கு உபநயனம் நடத்த தகுந்த வயது குறித்த கோட்பாடுகள் வித்தியாசப்படுவதைக் காண்கிறோம்(அந்த பாலகனை ‘vaṭu’ என்றழைக்கின்றனர்).[1] இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவ்வயது கருத்தாக்கத்திலிருந்து கணிக்கப்படுகிறது என்பதே.[2] குழந்தையின் வயதைக் கணிக்கும் வழக்கம் பாரத தேசத்தில் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
பிராம்மணனாயின் எட்டு வயதில்(கண்டிப்பாக பதினாறு வயதுக்குள்) உபநயனமும், க்ஷத்திரியனாயின் பதினோறு வயதில்(கண்டிப்பாக இருபத்திரண்டு வயதுக்குள்) உபநயனமும், வைஷ்யனாயின் பன்னிரண்டு வயதில்(கண்டிப்பாக இருபத்துநான்கு வயதுக்குள்) உபநயனமும் நடைபெற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.[3]
பிராம்மணர்களுக்கு வேதங்களைப் பயில்வதே பிரதானமாகக் கருதப்பட்டதால் அவர்கள் இக்கல்வியை இளம் வயதிலேயே தொடங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. க்ஷத்திரியர்கள் தமது கவனத்தை ஆட்சிபுரிவதிலும், வைஷ்யர்கள் தமது கவனத்தை வியாபாரத்திலும் செலுத்திவந்த படியால் கல்வி கற்பதற்கான வயது அவர்களுக்குப் பின்தள்ளப்பட்டது. முழுமையான கல்வி அறிவைப் பெறவே இவ்விருவரும் வேதம்பயின்றனரே அன்றி, இவர்களைப் பொருத்தமட்டில் வேதம் கற்பது பிரதான இலக்கல்ல. உதாரணத்துக்கு, தற்காலத்தில் 'டிப்லோமா' பயின்றுவரும் மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் கல்லூரியில் சேர்வதைப்போல என்று வைத்துக்கொள்ளலாம். அவர்கள் சொற்திறனைவிட செயற்திறனையே பிரதானமாகக் கருதினர்.
நிலையான ஒரே வயதிற்கு பதில் வயது வரம்பை வைத்துக்கொள்வதே சாலச்சிறந்தது, ஏனெனில் ஒவ்வொரு குழந்தைக்கும் பாடம் பயில்வதற்கான முதிர்ச்சி வெவ்வேறு வயதில் ஏற்படுகிறது. குழந்தைக்கு கல்வியில் நாட்டமுள்ளதா என்பதும், இனி வரப்போகும் பத்து-பன்னிரண்டு ஆண்டுகளுக்கு அவன் கல்வியில் தொடர்ந்து ஈடுபட சித்தமாய் இருப்பானா என்பதுமே கருத்தில் கொள்ளப்பட்டன.
உபநயனம் நடத்த நல்ல நேரம்[4]
உபநயனம் நல்ல நேரத்தில் நடைபெறுவது அத்தியாவசியமானது. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் தவிர்த்த ஒரு சுபதினம் இதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிராம்மணர்களுக்கு வசந்த காலம், க்ஷத்திரியர்களுக்கு கோடை காலம், வைஷ்யர்களுக்கு இலையுதிர்காலம் என வெவ்வேறு வர்ணத்தாருக்கு வெவ்வேறு பருவங்கள் ஒதுக்கப்பட்டன.[5] வெவ்வேறு வர்ணத்தவரின் குணம் மற்றும் தொழிலை மனதில் வைத்தே ஒருவேளை இவ்வாறு குறிக்கப்பட்டிருக்கலாம்.
பிராம்மணர்களின் மிதமான, சீரான வாழ்க்கை முறையை குறிப்பது அதிக வெப்பமாயும் குளிர்ச்சியாயும் இல்லாத மிதமான பருவமான வசந்தகாலம்.
க்ஷத்திரியர்களின் வீரதீர செயல்களைக் குறிக்கும் வெப்பமான கோடைகாலம்; மேலும் இக்காலத்தில் அவர்களுக்கு வெளியில் சென்று விளையாடுவதோ போர்புரிவதோ சிரமமாக உள்ளது.
மழை காலத்துக்குப் பிறகு வரும் இலையுதிர் காலத்தில்தான் வைஷ்யர்கள் மீண்டும் தொழில் தொடங்குகின்றனர். அதனால் இக்காலம் அவர்களது தொழில் மற்றும் வளமைக்கான குறியீடு.
சுக்ல பக்ஷத்திலும், சுப நக்ஷத்திரத்திலும்(பிரதானமான விண்மீன் தொகுதி;மொத்தம் இருபத்தேழு உள்ளன) உபநயனம் அரங்கேறியது, அதிலும் குறிப்பாக ஆண்பாலில் அமைந்த நக்ஷத்திரத்திலேயே நடைபெற்றது.[6]
அறிவுக்கூர்மையைக் குறிக்கும் விதமாக, மத சடங்குகள் அனைத்தும் 'பிரகாசமான அரைத் திங்களான' சுக்ல பக்ஷத்திலேயே நடைபெற்றன.
குருவைத் தேர்ந்தெடுப்பது[7]
உபநயனத்தின் பிரதான நோக்கம் அறிவு மற்றும் குணத்தின் வளர்ச்சி என்பதால், ஆகச் சிறந்த குருவை தேர்ந்தெடுக்கவே சிறுவனது பெற்றோர் விரும்பினர். குருவுக்கே அறிவு முதிர்ச்சியும், நன்னடத்தையும் இல்லாவிடில், அவர் எப்படி பிறரை வழிநடத்த முடியும்?
நல்ல குருவைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி சில நீதி போதகர்கள் பின்வருமாறு எழுதியுள்ளனர்:
"ஏதும் அறியாத மூடன் குருவானால், அம்மாணவன் இருளிலிருந்து மேலும் இருளையே சென்றடைகிறான். அதனால் நன்கு படித்த, நல்ல குடும்பத்தை சேர்ந்த, சுயகட்டுப்பாடுடைய ஒருவரையே குருவாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்."[8]
"நன்கு படித்த, நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, தவவலிமை பெற்ற, நன்னடத்தையுடைய பிராம்மணர் ஒருவரே மாணவனுக்கு பாடத்தை துவக்கிவைக்க வேண்டும்."[9]
"நிலையற்ற ஒருவரை குருவாக தேர்ந்தெடுக்கக் கூடாது, ஏனெனில் கரைபடிந்த கரங்களை இரத்தத்தால் சுத்தம் செய்ய முடியாது."[10]
"வேதத்தில் பற்றுடைய, நல்ல குடும்பத்தை சேர்ந்த, யக்ஞங்கள் நடத்துவதைக் கடமையாகக்கொண்ட, தான் பயில்விக்கும் வேத சாகைக்கு முக்கியத்துவம் வழங்கும், சோர்வில்லாத, தூய பிராம்மணனே ஆசிரியராவதற்குத் தகுதிபெற்றவன்."[11]
"ஒரு ஆசாரியனானவன் நேர்மையானவனாக, தைரியமானவனாக, திறமையானவனாக, அனைத்து உயிர்களிடத்தும் இரக்கமுள்ளவனாக, பரம்பொருளில் நம்பிக்கை உடையவனாக, வேதத்தில் தேர்ந்தவனாக, நன்னடத்தை உடையவனாக இருத்தல் வேண்டும்."[12]
அக்காலத்து கல்வி முறையில், குரு மிகவும் முக்கியமானவர். வேதங்களும், வேதாங்கங்களும்(வேதங்களை நன்றாய் புரிந்துகொள்ள உதவிய துணை பாடங்கள்) முக்கிய பாடதிட்டங்களாக விளங்கின.[13] வாய்மொழியாகக் கற்றுத் தரப்பட்டு, நினைவில் கொள்ளப்பட்டது. அனைவருக்கும் ஏற்றாற்போல் வளைந்துகொடுக்கும் தன்மையோடும் அது இருந்தது.
ஆசாரியருக்கான தகுதி குறித்தும், பிரம்மசாரி ஆக விரும்பும் மாணவனுக்கான தகுதி குறித்தும் நமது தர்ம சாஸ்திரங்களில் போதுமான அளவு கூறப்பட்டுள்ளது.
மேலும், குரு தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் அந்த பிரம்மசாரி மாணவனை ஏற்றுக்கொண்டதும், கல்விக்கான பெற்றோரது கடமை நிறைவுறுகிறது(தந்தையே அவனது குருவாக இல்லாத பட்சத்தில்). அம்மாணவனுக்கான பொறுப்பு முழுவதையும் அவனது குரு ஏற்றுக்கொண்டார்.
தொடரும்...
இக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது “Upanayana – A Gentle Introduction” என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.
திரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ஶ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அடிக்குறிப்புகள்
[1] HDS, pp. 274-76 மற்றும் HS, pp. 117-20
[2] Āpastamba-gṛhya-sūtra 10.2, Śāṅkhyāyana-gṛhya-sūtra 2.1, Baudhyāna-gṛhya-sūtra 2.5.2, Bhāradvāja-gṛhya-sūtra 1.1, Gobhila-gṛhya-sūtra 2.10.1, Yājñavalkya-smṛti 1.14, மற்றும் Āpastamba-dharma-sūtra 1.1.1.19 ஆகியவற்றைக் காண்க
[3] Pāraskara-gṛhya-sūtra 2.2, Āśvalāyana-gṛhya-sūtra 1.19, Śāṅkhāyana-gṛhya-sūtra 2.1, Baudhāyana-gṛhya-sūtra 2.5, Āpastamba-gṛhya-sūtra 11, Gobhila-gṛhya-sūtra 2.10, Manu-smṛti 2.36, மற்றும் Yājñavalkya-smṛti 1.11 ஆகியவற்றைக் காண்க
[4] HDS, p. 276 மற்றும் HS, pp. 127-28
[5] Vasante brāhmaṇamupanayati grīṣme rājanyaṃ śaradi vaiśyaṃ... – Baudhāyana-gṛhya-sūtra 11.5.6; மேலும், Āpastamba-dharma-sūtra 1.1.1.19 மற்றும் Hiraṇyakeśi-gṛhya-sūtra 1.1 ஆகியவற்றைக் காண்க
[6] Hiraṇyakeśi-gṛhya-sūtra (1.1.5, Sacred Books of the East, Volume 30, p. 137) மற்றும் Bhāradvāja-gṛhya-sūtra 1.1 (‘Āpūryamāṇapakṣe puṇye nakṣatre viśeṣeṇa puṃnāmadheye’) ஆகியவற்றைக் காண்க
[7] HS, pp. 125-26
[8] Tamaso vā eṣa tamaḥ praviśati yamavidvānupanayate yaścāvidvāniti hi brāhmaṇam. Tasminnabhijanavidyāsamudetaṃ samāhitaṃ saṃskartāramīpset. Tasmiṃścaiva vidyā karmāntamavipratipanne dharmebhyaḥ. – Āpastamba-dharma-sūtra 1.1.1.11-13
[9] Kumārasyopanayanaṃ śrutābhijanavṛtavān. Tapasā dhūtaniḥśeṣapāpmā kuryāddvijottama. – Śaunaka
[10] Na yajayed vṛttihīna vṛṇuyācca na taṃ gurum. Nahi majjākarau digdhau rudhireṇa viśudhyataḥ. – Hārita
[11] Vedaikaniṣṭhaṃ dharmajñaṃ kulīnaṃ śrotriyaṃ śucam. Svaśākhāyāmanālasyaṃ vipraṃ kartāramīpsitam. – Vyāsa
[12] Satyavāk dhṛtimān dakṣaḥ sarvabhūtadayāparaḥ. Āstiko vedanirataḥ śucirācārya ucyate. Vedādhyāpanasampanno vṛttimān vijitendriyaḥ. Dakṣotsāhī yathāvṛtaḥ jīvanehastu vṛttimān. – Yama
[13] ஆறு வேதாங்கங்கள் ஆவன - i. Sikṣa (ஒலிப்பு, ஒலியியல்), ii. Vyākaraṇa (இலக்கணம்), iii.Chandas (யாப்பு, கவி நடை), iv. Nirukta (சொற்பொருள் பிறப்பியல்), v. Jyautiṣa (ஜோதிடம், வானியல்), மற்றும் vi. Kalpa (சடங்குகள், வழிபாட்டு முறை, நெறிமுறைகள், சமூகவியல், அரசியல், மரபுகள், வழிபாடு, முதலானவை)