உபநயனத்திற்கான ஏற்பாடுகள்[1]
உபநயனம் நடைபெற ஒரு śālā (விதானம், கூடாரம்) அமைக்கப்படுகிறது.[2]
உபநயனத்துக்கு முன் புராண நிகழ்ச்சிகள் சில நடைபெறுகின்றன. விநாயகனை வணங்கியபின், ஸ்ரீ, லக்ஷ்மி, திருதி (Dhṛtī), மேதா, புஷ்டி, ஸ்ரத்தா (Śraddhā), மற்றும் சரஸ்வதி முதலான தேவிமார்களை வழிபடுகிறார்கள்.[3] பொதுவாக, இதோடுகூட உதக சாந்தி மந்திரங்களும் ஓதப்படுகின்றன.
ஒரு சில இடங்களில், வடுவுக்கு மஞ்சளும் பூசப்படுகின்றது. இதன்பிறகு அவன் அந்த ராத்திரி பொழுதை அமைதியாக கழிக்க வேண்டும். இதனை அவனது இரண்டாம் பிறப்பைக் குறிக்கும் அடையாளமாகவும் கொள்ளலாம் – கர்பப்பையில் கருவின் நிலையை மஞ்சள் கலவையும், கர்பப்பையில் கருவின் மௌனத்தை இரவில் அவனது அமைதி நிலையும் குறிக்கின்றன.
மாத்ருபோஜனம் – தாயுடன் அவனது கடைசி உணவு[4]
தனது தாயுடன் அமர்ந்து கடைசியாக ஒரு முறை உபநயனத்தன்று காலையில் அந்த 'வடு' உணவருந்துகிறான்.[5] உபநயனத்தின் பிறகு ஒரு பிரம்மசாரி அவனது குருவுடன் சென்று விடுவான் என்பதால், இந்த சடங்கு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கொள்ளப்பட்டது. மீண்டும் அவனது இல்லத்துக்கு சென்று அவனது அன்னையால் தயாரிக்கப்பட்ட உணவை அவன் சாப்பிட வெகு நாட்கள் ஆகும்.
கவலையின்றி ஆனந்தமாய் துள்ளித்திரிந்த மழலைப்பருவத்தின் முடிவை உணர்த்த இச்சடங்கு நடத்தப்படுகிறது. இந்த தருணத்திலிருந்து அம்மாணவன் ஒழுக்கத்தோடு பாடம் பயில வேண்டும். மகனுக்கும் அன்னைக்குமான உணர்ச்சிமிகு தருணம் இது.
சிலவிடங்களில் அச்சிறுவனோடு வேறு சில பிரம்மசாரி மாணவர்களையும் உணவருந்த அழைக்கின்றார்கள்.
ஸ்நானம் – குளியல் சடங்கு[6]
மாத்ருபோஜனத்துக்குப் பிறகு, வடுவை அவனது பெற்றோர் ஹோம குண்டத்தில் (நாற்புறமும் செங்கல்லால் சூழப்பட்ட சதுரமான இடம்) அக்னி எரிந்துகொண்டிருக்கும் கூடாரத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்கள்.[7] அதன்பின் அவனுக்கு க்ஷவரம் செய்யப்படுகிறது. முன்பெல்லாம் ஆசாரியரே சீடனுக்கு க்ஷவரம் செய்வார்.[8] நாளடைவில், அக்குடும்ப நாவிதன் இதனை செய்யலானான். க்ஷவரமானதும் வடுவை குளிப்பாட்டுகிறார்கள். உடலை மட்டுமல்லாமல் மனத்தையும் தூய்மை படுத்துவதால், மத சடங்குகளில் குளியல் அத்தியாவசியமானதாக கருதப்பட்டது.
வடுவுக்கான உடுப்பு[9]
குளித்தபின் அவனுக்கு kaupīna (அரைத்துணி, கோவணம்) அணிவிக்கிறார்கள். அவன் உடலளவிலும், நடத்தையிலும் சமூக நல்லொழுக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஆசாரியரை அணுகி தன்னை மாணவனாக சேர்த்துக் கொள்ளுமாறு விண்ணப்பிக்கிறான். அவன், "நான் இங்கு மாணவனாக சேர்வதற்கு வந்துள்ளேன். எனக்கு பிரம்மசாரி ஆக வேண்டும்!"[10], என்கிறான். அவனை ஏற்றுக்கொண்டதும் ஆசாரியர், “பிரஹஸ்பதி எவ்வாறு இந்திரனுக்கு அமரத்துவம் எனும் ஆடையை அணிவித்தாரோ, அவ்வாறு நான் உனக்கு நீண்ட ஆயுள், சக்தி மற்றும் தேஜஸ் ஆகியவற்றை வேண்டி இவ்வாடையை அணிவிக்கிறேன்!”[11], என்று கூறி அவனுக்கு இரு ஆடைகளை வழங்குகிறார் – ஒன்று கீழுடலுக்கானது (vāsas), மற்றொன்று மேலுடலுக்கானது (உத்தரீயம்).[12]
மட சடங்கில் ஈடுபட்டுள்ள ஒருவர் கட்டாயம் தனது மேலுடலை போர்த்தி இருக்க வேண்டும் என்பது சாஸ்திர விதி. வடுவின் ஆன்மீக வாழ்வின் முதற்கட்டமான இச்சடங்கில் அணிவிக்கப்படும் உத்தரீயமும் அதனை குறிப்பதைப்போலவே அமைந்துள்ளது.
முன் காலங்களில் மான் தோலை (ajina) மேலாடையாக அணிவித்தனர். இது ஞான ஒளியையும், புத்திக்கூர்மையையும் சித்தரிக்கிறது.[13] பண்டைய ரிஷிகளைப் போல தானும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை எந்நேரமும் நினைவில் கொள்ள அம்மாணவன் இதனை அணிந்திருந்தான்.
காட்டுவாசிகளான ஆதிகாலத்து இந்தியர்கள் பொதுவாக மான் தோலையே அணிந்தனர். விவசாயமும், நெசவும் தோன்றியபின் பஞ்சாடைகளை அணியத் துவங்கினர்.[14] மான்தோல் இனி தேவைப்படாத போதிலும், அதன் பழமை அதற்கு ஒரு புனிதத் தன்மையை வழங்கியது.
வரைத்த பழமைவாதத்தின் சின்னமான இந்த மான் தோலை அணிவது இன்றுங்கூட சில சம்பிரதாயங்களில் தொடர்கின்றது (சில சமூகங்களில் உபநயனத்தின்போது, ‘அஜினம்’ அல்லது ‘கிருஷ்ணாஜினம்’ (கரு மானின் தோல்) ஆகியவற்றின் ஒரு சிறு பாகத்தை சிறுவனின் பூணூலுடன் இணைத்துவிடுகிறார்கள்).
Mekhalā-bandhana – இடுப்பு வளையம் அணிவித்தல்[15]
ஆசாரியர், "நான் வார் அணிவிக்கிறேன்; தீய சொற்களை விலக்கி, அது அனைவரையும் தூய்மை படுத்தட்டும்; தங்கையைப்போன்ற புனிதமான மேகலை என்னும் இந்த தேவதை பிராண (உள் மூச்சு) சக்தியையும், அபான (வெளி மூச்சு) சக்தியையும், வீரியத்தையும் ஆடையாக அணிந்திருப்பவள்"[16], என்றோ "நன்றாய் உடை அணிந்திருக்கும் மாணவனே, இங்கே வா! இப்போது பிறக்கப்போகிறவன் வெற்றிகாணட்டும்! ஞான த்ருஷ்டி வாய்ந்த கவிஞர்கள் தேவதைகளில் தமது சிந்தையை லயிக்கச் செய்து, இவனை போற்றட்டும்!"[17] என்று கூறியோ அல்லது மௌனமாகவோ[18] மாணவனது இடுப்பைச்சுற்றி மேகலையை அணிவிக்கிறார்.
பொதுவாக மேகலை புல்லாலானது (muñja என்கிற புல்லை அநேகமாக பயன்படுத்தியதால் இச்சடங்கை mauñjī-bandhana என்றும் அழைத்து வந்தனர்); சிறுவனது வர்ணத்தைப் பொருத்து வெவ்வேறு புல்வகைகள் பயன்படுத்தப்பட்டன. அரைத்துணியை (kaupīna) நழுவாமல் காக்க மேகலை உதவினாலும், இது மற்றொரு அடையாளத்தைக் குறிக்கவும் பயன்படுகிறது. மூன்று கயிறுகளால் ஆனதால், மூன்று வேதங்களால் அம்மாணவன் சூழப்பட்டுள்ளான் என்பதைக் குறிக்க இது உதவுகிறது.[19]
தொடரும்...
இக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது “Upanayana – A Gentle Introduction” என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.
திரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ஶ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அடிக்குறிப்புகள்
[1] HS, பக்கம் 128
[2] Pañcasu bahiḥśālāyāṃ vivāhe cūḍākaraṇopanayane keśānte sīmantonnayana iti – Pāraskara-gṛhya-sūtra 1.4.2
[3] எனினும் இதனை கிருஹ்ய சூத்திரங்களில் காண முடிவதில்லை. ஒருவேளை அதற்குப் பின்னர் ஏற்பட்டதாக இருக்கலாம்
[4] HS, பக்கம் 128
[5] Saṃskāra-ratnamālā போன்ற பின்னர் தோன்றிய நூல்களில் இது வர்ணிக்கப்பட்டுள்ளது
[6] HS, பக்கம் 129
[7]சடங்கு துவங்குவதற்குமுன் பிராம்மணர்களுக்கு போஜனம் வழங்கி அவர்களது நல்லாசியைப் பெற வேண்டும் என சில நூல்கள் விதிக்கின்றன. Āpastamba-gṛhya-sūtra 10.5, Baudhāyana-gṛhya-sūtra 2.5.7 மற்றும் Pāraskara-gṛhya-sūtra 2.2 ஆகியவற்றைக் காண்க
[8] Āpastamba-gṛhya-sūtra 10.6-8உக்கான Sudarśanaவின் கருத்தைக் காண்க
[9] HDS, pp. 278-79 மற்றும் HS, pp. 129-30, 134
[10] Paścādagneravasthāpya brahmacaryamāgāmiti vācayati brahmacāryasānīti ca – Pāraskara-gṛhya-sūtra 2.2.6
[11] Athainaṃ vāsaḥ paridhāpayati yenendrāya bṛhaspatirvāsaḥ paryadadhādamṛtaṃ tena tvā paridadhāmyāyuṣe dīrghāyutvāya balāya varcasa iti – Pāraskara-gṛhya-sūtra 2.2.7
[12] இது நவீன காலத்து பள்ளிச் சீருடையைப் போன்றது. Vāsas மற்றும் உத்தரீயத்துக்கான பொருட்கள் குறித்த விரிவான விவாதங்கள் பல நடைபெற்றன. வெவ்வேறு வர்ணத்தைச் சேர்ந்த பாலகர்களுக்கு பல்வேறு வகையிலான பொருட்களையும்(சணல், ஆளி, மான் தோல், புலி தோல், கம்பளி, பருத்தி, ஆடு தோல், முதலியன), வெவ்வேறு நிறங்களையும் சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. vāsas மற்றும் உத்தரீயத்துக்கான கோட்பாடுகள் புராதனமானவை. Āpastamba-dharma-sūtra 1.1.3.9-10யில் பிராம்மணர்களுக்கான பத்தியில் – ‘Brahmavṛddhimicchannajinānyeva vasīta kṣatravṛddhimicchanvastrāṇyevobhayavṛddhimicchannubhayamiti hi brāhmaṇam. Ajinaṃ tvevottaraṃ dhārayet' – என வருகிறது. மேலும், Bhāradvāja-gṛhya-sūtra 1.1 (‘Yadajinaṃ dhārayedbrahmavarcasavadvāso dhārayetkṣatraṃ vardhayedubhayaṃ dhāryamubhayorvṛddhyā iti vijñāyate’) மற்றும் Gopatha-brāhmaṇa 1.2.4 (‘Na tāntavaṃ vasīta yastāntavaṃ vaste kṣatraṃ vardhate na brahma tasmāttāntavaṃ na vasīta brahma vardhatāṃ mā kṣatramiti’) ஆகியவற்றையும் காண்க
[13] Gopatha-brāhmaṇa 1.2.1-8
[14] ஆதி காலங்களில்கூட, மான் தோலுக்கு பதிலாக பருத்தி ஆடை பயன்படத்தப்பட்டதாக தெரிய வருகிறது. இத்துணியை பிரம்மசாரியின் இல்லத்தில் சடங்குக்கு சற்று முன்னதாக தயாரிக்க வேண்டும் என்று Baudhāyana-gṛhya-sūtra மற்றும் Āpastamba-gṛhya-sūtra ஆகியவை கூறுகின்றன (‘Vāsaḥ sadyaḥ kṛttotam’ – Baudhāyana-gṛhya-sūtra 2.5.11, Āpastamba-gṛhya-sūtra 11.16)
[15] HDS, பக்கம் 280 மற்றும் HS, பக்கம் 131
[16] Mekhalāṃ badhnīte. Iyaṃ duruktam paribādhamānā varṇaṃ pavitraṃ punatī ma āgāt. Prāṇāpānābhyāṃ balamādadhānā svasā devī subhagā mekhaleyamiti. – Pāraskara-gṛhya-sūtra 2.2.8
[17] Yuvāsuvāsāḥ parivīta āgātsa u śreyānbhavati jāyamānaḥ. Taṃ dhīrāsaḥ kavaya unnayanti svādhyo manasā devayanta iti vā. – Pāraskara-gṛhya-sūtra 2.2.9
[18] Tūṣṇīṃ vā. – Pāraskara-gṛhya-sūtra 2.2.10
[19] Vedatrayeṇāvṛto’hamiti manyet sa dvijaḥ. – Āśvalāyana quoted in Vīra-mitrodaya Saṃskāraprakāśa, Vol. 1, பக்கம் 432