பிரம்மசாரி தர்மம்-மாணவனுக்கான விதிமுறைகள்[1]
பிரம்மசாரி அக்னியைச் சுற்றி வலம்வந்து ஆஹுதி அளித்ததும், "நீ ஒரு மாணவன். நீர் அருந்து. அமைதியைக் கடைபிடி. சமித்தை அக்னியில் இடு..."[2] என்றெல்லாம் ஆசாரியர் மாணவனுக்கான விதிமுறைகளை அவனுக்கு போதிக்கிறார். "நீரைப் பருகு. சந்தேகமில்லாமல், நீரே அம்ருதம்! நீ இந்த அம்ருதத்தைப் பருகு! உன் கடமையைச் செய். சந்தேகமில்லாமல், கடமையே வீரியம். வீரியத்துடன் இரு! அக்னியில் சமித்தை இடு. உன் மனதில் ஞான விளக்கை ஏற்று. தூங்காதே, மரணிக்காதே!", என்று அறிவுறுத்துகிறார்.[3]
எல்லா பிரம்மச்சாரிகளுக்கும் சில விதிமுறைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளது-இவற்றில் குறுகிய காலத்துக்கானவை சில, மாணவ பருவம் முழுவதும் பின்பற்ற வேண்டியவை சில. உதாரணத்துக்கு, உபநயனம் ஆனதும் முதல் மூன்று நாட்களுக்கோ அல்லது சில சமயங்களில் ஒரு வருடத்துக்கோகூட ஒரு சில உணவுகளை உண்ண தடை உள்ளது; ஆனால் ஒரு பிரம்மசாரி தரையில் உறங்க வேண்டும், குருவுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்பது போன்ற விதிகள் அவனது மாணவப் பருவம் முற்றுக்குமானது.
சாவித்திரி உபதேசம்-புனித காயத்ரி மந்திரத்தை ஓதுவித்தல்[4]
உபநயனம் ஆனதும் ஒரு பிரம்மசாரிக்கு அவனது குரு புனிதமான காயத்ரி மந்திரத்தை[5] ஒரு வருட காலத்திலோ, ஆறு மாத காலத்திலோ, இருபத்து நான்கு நாட்களிலோ, பன்னிரண்டு நாட்களிலோ, உபநயனமான மூன்று நாட்களிலோ, அல்லது மந்திரத்தை சரியாக உச்சரிக்கத் தெரிந்த மாணவனாயின் உபநயனத்தன்றே மந்திரம் முழுவதையுமோ ஓதுவிக்கிறார்.
முன்பே கூறியிருந்ததைப்போல, குரு அக்னிக்கு வலது புறம் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்க, பிரம்மசாரி மாணவன் குருவை நோக்கி அமர்ந்திருக்கிறான். சாவித்திரிக்கு உகந்த மந்திரத்தை ஓதுவிக்குமாறு அவன் குருவை வேண்டுகிறான். அதன்பின் மாணவனின் முகம்பார்த்து அவனது குரு, முதலில் ஒரு பாதத்தையும் (வரி), பின் இரண்டு பாதங்களாகவும், முடிவில் வரி முழுவதுமாக ஓதுவிக்கிறார்.
Tat saviturvareṇyaṃ. Bhargo devasya dhīmahi. Dhiyo yo naḥ pracodayāt என்கிற பிரபலமான காயத்ரி மந்திரம் Ṛgveda-saṃhitā 3.62.10யில் இடம்பெறுகிறது. பிறவேதங்களிலும் இம்மந்திரம் இடம்பெற்றுள்ளது. இது சூரியனை வணங்குவதற்கான மந்திரம். இந்த மந்திரத்தை மாணவனுக்கு போதிப்பதென்பது அவனது இரண்டாம் ஆன்மீகப் பிறப்பின் குறியீடு.[6]
பல கோடி இந்துக்களால் ஒவ்வொரு நாளும் ஜபிக்கப்படுகிற சுமார் ஆறாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காயத்ரி மந்திரமானது விசுவாமித்திரர் எனும் மகரிஷியால் வழங்கப்பட்டது. Ṛgveda-saṃhitāயின் மூன்றாவது புத்தகத்தில் இடம்பெறும் கவிதைகள் பெரும்பாலும் இவருடையதே ஆகும்.
காயத்ரி என்கிற கவிநடையில் இது அமைந்து விளங்கியதால் இது காயத்ரி மந்திரம் என்ற பெயர் பெற்றது. ஒவ்வொரு வரிக்கும் எட்டு அக்ஷரங்கள் (அசைகள்) வீதம், மூன்று வரிகள் கொண்ட கவிநடை இது. சுவாரசியமாக, 'காயத்ரி' எனும் சொல் ‘gāyantaṃ trāyate iti gāyatrī’, அதாவது 'தம்மை உச்சரிப்பவரை காத்து ரக்ஷிப்பதே காயத்ரி'-என்பதிலிருந்து உருவானது. ஆகையால், காயத்ரி எனும் கவிநடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மந்திரங்கள் இருப்பினும், காயத்ரி மந்திரம் என்பது கீழ்கண்ட வரிகளையே குறிக்கும்:
தத் ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந்ஃ ப்ரசோதயாத்
tat saviturvareṇyam
bhargo devasya dhīmahi
dhiyo yo naḥ pracodayāt
சமஸ்கிருதத்தில், ஒவ்வொரு வார்த்தைக்கும் வெவ்வேறு பொருளுள்ளது. அதனால் ஒரு வார்த்தை எந்த சூழலில் உச்சரிக்கப் படுகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்:
tat = அது
savituḥ = சூரியன்; 'அனுமதிப்பவன்', 'ஊக்குவிப்பவன்', உயிர் கொடுப்பவன்' என்கிற அர்த்தத்தில் வருகிறது.
vareṇyam = சிறந்த, தலைசிறந்த, உயர் மரியாதைக்குரிய.
bhargaḥ = ஒளி, காந்தி, பிரகாசம்
devasya = கடவுளுடைய, தலைவனுடைய, தேவனுடைய
dhīmahi = (நாம்) தியானிக்கிறோம், (நாம்) நினைக்கிறோம்
dhiyaḥ = அறிவாற்றல், ஞானம், மனம், நினைவு
yaḥ = யார் ஒருவன், அவன் ஒருவன்
naḥ = எங்களுக்கென, எங்களுக்காக
pracodayāt = (அவர்) எழச்சியூட்டி, ஊக்கமளித்து, தூண்டி, அதிகாரம் (வழங்கட்டும்)
இதில் முதல் வரியில் எட்டிற்கு பதில் ஏழு அசைகளே வருகின்றன: tat-sa-vi-tu-rva-re-ṇyam; அதனால் இதற்கு முன் நாம் ஓம் என்கிற அக்ஷரத்தை உச்சரிக்கிறோம், அல்லது tat-sa-vi-tu-rva-re-ṇi-yam என்கிறோம்.
இதனை இப்போது ஒரு வாக்கியமாக உருவாக்கலாம். எவன் ஒருவன் (yaḥ) நமது (naḥ) மனதை (dhiyaḥ) தூண்டிவிடுகிறானோ (pracodayāt) – சூரியனாகிற (savituḥ), இறைனின் (devasya) அந்த மகத்தான (vareṇyaṃ) ஒளியை (bhargaḥ) நாம் தியானிக்கிறோம் (dhīmahi).
இதனை எளிமையான தமிழ் நடையில் கூறுவதாயின்:
"சூரிய தேவனின்
மகத்தான ஒளியை நினைத்து தியானிப்போம்
அவன் நமது உள்ளத்தைத் தூண்டிவிடட்டும்"
என்றாகிறது.
யஜுர் வேதத்திலும் இதே காயத்ரி மந்திரம் வருகிறது.ஆனால், oṃ bhūrbhuvassuvaḥ என்கிற கூடுதலான வரி அதில் இடம்பெற்றுள்ளது.
om = பரம்பொருளாகிற பிரம்மத்தைக் குறிக்கிற ஒற்றை அசை
bhūḥ = பூமி
bhuvaḥ = வளிமண்டலம்
suvaḥ = வானம், சொர்க்கம்
நம்மைவிட உயர்வான மூன்று உயிர் கோளங்களின் நினைவு இவ்வரியை உச்சரிப்பதனால் நமக்கு வருகிறது.
நம் மனதைத் தூண்டி, நமக்கு அதிகாரம் வழங்குகிற பரம்பொருளின் உருவான சூரியனை வழிபடுவதே காயத்ரி மந்திரம். எவ்வாறு அதிகாலை சூரிய வெளிச்சம் நம்மை தட்டி எழுப்புகிறதோ, அவ்வாறே நமது அறிவை தட்டி எழுப்புமாறு நாம் பரம்பொருளைப் பிரார்த்திக்கிறோம். உண்மையில், நமது உள்வலிமைக்கான வழிபாடு இது.
ஹோமம்-புனிதமான அக்னியின் வழிபாடு[7]
பிரம்மசாரிக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்ததும், அக்னி மூட்டி சமித்தை (விறகுக் கட்டைகளை) அதனில் இடும் சடங்கு நடைபெறுகிறது.[8] தூய அக்னி என்பது வாழ்க்கை, ஒளி இவற்றின் சின்னம். அக்னியை சுற்றியுள்ள நிலத்தைத் துடைத்து மாணவன், "புகழ்பெற்ற அக்னியே! என்னைப் புகழடையச் செய்! நீ எவ்வாறு புகழ் ஈட்டினாயோ, அவ்வாறே என்னையும் புகழ்பெறச் செய்! தேவர்களின் பொக்கிஷமான யக்ஞத்தை நீ காத்து ரக்ஷிப்பதைப் போல மனிதர்களின் பொக்கிஷமான வேதத்தை நான் காத்து ரக்ஷிக்கும்படி செய்!", என்று கூறுகிறான்.[9]
சமித்தை அக்னிக்கு காணிக்கை இடும்போது அந்த பிரம்மசாரி, "நான் அக்னிக்கு சமித்தைக் கொண்டு வந்திருக்கிறேன், உயர்ந்த ஜாதவேதனுக்கு நான் விறகுக் கட்டையைக் கொண்டு வந்திருக்கிறேன்! எவ்வாறு விறகுக் கட்டைகளால் நீ வளர்ந்து வருகிறாயோ, அவ்வாறு வாழ்க்கை, நுண்ணறிவு, ஒளிர்வு, வாரிசு, கால்நடை, தூய மிளிர்வு போன்றவற்றால் நானும் வளர்கிறேன்...நிறைவான நுண்ணறிவுடனும், ஒரு நாளும் நான் கற்றதை மறக்காமலும் இருக்க வேண்டும்; பெருமையையும் மங்கலத்தையும் நான் பெற்று விளங்க வேண்டும்; உணவை அனுபவிக்க வேண்டும். ஸ்வாஹா!”, என்று கூறுகிறான்.[10]
பிக்ஷை-பிச்சை ஏந்தி நிற்பது[11]
அதன்பின் அந்த பிரம்மசாரி அனைவரிடமும் சென்று கை ஏந்தி நிற்க வேண்டும்-இதனை பிக்ஷை (பிச்சை) என்கிறோம். அவனது மாணவப் பிராயத்தின் துவக்கமாக இது கருதப்படுகிறது.
உபநயனத்தன்று தம்மைத் தட்டிக் கழிக்காத அவனது தாய் மற்றும் பிற உறவினர்களிடம் மட்டுமே கை ஏந்துகிறான்.[12] பிச்சை எடுக்கையில், பொதுவாக, "அன்னையே, எனக்கு பிச்சை இடுங்கள்!”[13], என்கிற வாக்கியத்தை உச்சரிக்கிறான். சமூகத்தின் தயவில் தாம் வாழ்ந்து வருவதையும், கிருஹஸ்தனானதும் தம்மால் இயன்ற நல்லவற்றை செய்து பொறுப்பான குடிமகனாக விளங்க வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ளவே இச்சடங்கு செய்யப்படுகிறது.
தண்டத்தை பிரம்மசாரிக்கு அவனது ஆசாரியர் வழங்கியபின் ஒரு பாத்திரத்தை அவன் கையில் கொடுத்து, "வெளியில் சென்று பிச்சை எடு", எனக் கூறுகிறார். முதலில் அவனது தாயிடமிருந்தும், அவனுக்கு பரிச்சயமானவர்களிடமிருந்தும் பெற்றுவரச் செய்கிறார். அவற்றைப் பெற்று வந்ததும் தமது ஆசாரியரிடத்தில் சென்று, "இவைதான் நான் பெற்று வந்தவை", என்று காட்டுகிறான். அதற்கு அவன் ஆசாரியர், "இவை நன்றானவை!", என பதிலுரைக்கிறார்.[14]
பிச்சை எடுத்து கிடைக்கப்பெற்ற உணவு தூய்மையானதாக கருதப்படுகிறது.[15] பிரம்மசாரியானவன் பல வீடுகளுக்கு சென்று உணவு திரட்ட வேண்டும். மேலும், சிரார்த்த போஜனத்தைத் (பித்ருக்களுக்கு மரியாதை செய்வதற்காக வழங்கப்படும் மதிய உணவு) தவிர்த்து பிற நேரங்களில் எப்போதும் ஒரே வீட்டுக்கே சென்று வரக் கூடாது.[16]
Tri-rātra-vrata – மூன்று நாள் விரதம்[17]
உபநயனமான பிரம்மசாரி Tri-rātra-vrata என்கிற விரதத்தை மூன்று நாட்களுக்கு அனுஷ்டிக்க வேண்டும்.[18] பன்னிரண்டு நாட்களுக்கோ அல்லது ஒரு வருடத்துக்கோகூட இவ்வனுஷ்டானங்களை அவன் மேற்கொள்ளக்கூடும். கடுமையான ஒழுக்க நெறிகள் நிறைந்த மாணவப் பருவத்துக்கான துவக்கமிது. உணவில் உப்பு, மது, மாமிசம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பகலில் உரங்கக் கூடாது. இரவில் வெறுந்தரையில் மாத்திரமே உரங்கலாம்.
Medhājanana – அறிவுப் பெருக்கம்[19]
உபநயனமான நான்காம் நாளன்று Medhājanana நடைபெறுகிறது. இச்சடங்கை செய்வதன்மூலம் மாணவனுக்கு வேதங்களை கற்கும் தகுதி ஏற்படுகிறது என்று கொள்ளப்பட்டது. புத்திக்கூர்மை வேண்டியும், நினைவாற்றலைப் பெருக்கவும் இறைவனை பிரார்த்திக்கும் சடங்கு இது.[20]
இடதிலிருந்து வலமாகமூன்று முறை பலாச மரத்தை (பலாச மரம் அங்கில்லாத பட்சத்தில் குசப்புல்லை) சுற்றி குடத்திலிருந்து தண்ணீர் தளிக்கச் செய்து, குரு அம்மாணவனை, "புகழ்பெற்றவரே! தாங்கள் புகழ்பெற்றவர்! தாங்கள் புகழ்பெற்று விளங்குவதைப்போலவே என்னையும் புகழடையச் செய்யுங்கள்! தேவர்களுக்கு அருமையான யக்ஞத்தைக் காத்து ரக்ஷிப்பவர் தாமே; அதுபோல மனிதர்களுக்கு அருமையான வேதங்களை நான் காத்து ரக்ஷிக்கும்படி செய்ய வேண்டும்!", என கூறச் செய்கிறார்.[21]
"சூரியனிலிருந்து தோன்றி, இவ்வுலகை காத்து நிற்பவளே மேதா! வாழ்வில் வெற்றி காண விரும்புபவர் திறமையை வளர்த்துக்கொள்ள இவளை வணங்க வேண்டும்", என பண்டைக்கால ஆசிரியர் ஒருவர் கூறுகிறார்.[22]
தொடரும்...
இக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது “Upanayana – A Gentle Introduction” என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.
திரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ஶ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அடிக்குறிப்புகள்
[1] HDS, பக்கம் 304 மற்றும் HS, பக்கம் 137
[2] ...brahmacāryasyapośāna karma kuru mā divā suṣupthā vācaṃ yaccha samidhamādhehyapośāneti. – Pāraskara-gṛhya-sūtra 2.3.2
[3] Śatapatha-brāhmaṇa 12.5.4கைக் காண்க
[4] HDS, pp. 300-2 மற்றும் HS, pp. 137-38
[5] Athā’smai sāvitrīmamanvāhottarato’gneḥ pratyaṅmukhāyopaviṣṭāyopasannāya samīkṣamāṇāya samīkṣitāya. – Pāraskara-gṛhya-sūtra 2.3.3
[6] ...tatrāsya mātā sāvitrī pitā tvācārya ucyate. – Manu-smṛti 2.170
[7] HS, பக்கம் 138
[8] Pāraskara-gṛhya-sūtra 2.4.1-8
[9] Pāṇinā’gniṃ parisamūhati agne suśravaḥ suśravasaṃ mā kuru yathā tvamagne suśravaḥ suśravā asyevaṃ māṃ suśravaḥ sauśravasaṃ kuru yathā tvamagne devānāṃ yajñasya nidhipā asyevamahaṃ manuṣyāṇāṃ vedasya nidhipo bhūyāsamiti. – Pāraskara-gṛhya-sūtra 2.4.2
[10] Pradakṣiṇamagniṃ paryukṣyottiṣṭhantsamidhamādadhāti agnaye samidhamahārṣa bṛhate jātavedase. Yathā tvamagne samidhā samidhyasa evamahamāyuṣā medhayā varccasā prajayā paśubhirbrahmavarcasena samindhe jīvaputro mamācāryo medhāvyahamasā-nyanirākāriṣṇuryaśasvī tejasvī brahmavarcasyannādo bhūyāsaṃ svāheti. – Pāraskara-gṛhya-sūtra 2.4.3
[11]HDS, pp. 308-11 மற்றும் HS, பக்கம் 139
[12] Āśvalāyana-gṛhya-sūtra 1.22.7-8
[13] ‘Bhavati bhikṣāṃ dehi,’ என்று கூறி ஒரு பிராம்மண மாணவன் பிச்சை கேட்க வேண்டும் என்றும், ‘bhikṣāṃ bhavati dehi,’என்று கூறி ஒரு க்ஷத்திரிய மாணவன் பிச்சை கேட்க வேண்டும் என்றும், ‘dehi bhikṣāṃ bhavati’என்று கூறி ஒரு வைஷ்ய மாணவன் பிச்சை கேட்க வேண்டும் என்றும் Baudhāyana-gṛhya-sūtra 2.5.47-53 கூறுகிறது
[14] Hiraṇyakeśi-gṛhya-sūtra (Sacred Books of the East, Vol. 30, பக்கம். 157)
[15] Manu-smṛti 2.189, Baudhāyana-dharma-sūtra 1.5.56 மற்றும் Yājñavalkya-smṛti 1.187
[16] Manu-smṛti 2.188-89 மற்றும் Yājñavalkya-smṛti 1.32
[17] HS, பக்கம் 139
[18] Ata ūrdhvamakṣāra alavaṇa āśī brahmacāryadaḥ śāyī trirātraṃ dvādaśarātraṃ saṃvatsarma vā. – Āśvalāyana-gṛhya-sūtra 1.22.19
[19] HDS, pp. 305-6 மற்றும் HS, பக்கம் 140
[20] Āśvalāyana-gṛhya-sūtra 1.22.18-19 மற்றும் Bhāradvāja-gṛhya-sūtra 1.10 ஆகியவற்றைக் காண்க
[21] Suśravāḥ என்ற சொல்லுக்கு இரு பொருட்கள் உள்ளன என்று டாக்டர் கானேஅவர்கள் கூறுகிறார்-'புகழ்பெற்றவன்' மற்றும் 'நன்றாகக் கேட்கிறவன்' (அதாவது குரு ஓதுகிற வேதத்தை கேட்டு நன்றாக அதனை பயில்பவன்). இது Āpastamba-mantra-pāṭha 2.5.1யிலும் இது வருகின்றது(ஆனால் Āpastamba-gṛhya-sūtra 11.14கில் தண்டத்தை கையில் ஏந்துவதற்கான மந்திரமாக இது வருகிறது)
[22] Yā sāvitrī jagaddhātrī saiva medhā svarūpiṇī. Mevā prasiddhaye pūjyā vidyāsiddhimabhīpsitā. – Vīra-mitrodaya Saṃskāraprakāśa, Vol. 1, பக்கம் 440யில் Śaunaka எடுத்துக்காட்டுகிறார்