ஸம்ஹிதைகளில் உபநயனம்
கிருஹ்ய சூத்திரங்களில் குறிக்கப்படும் உபநயனத்துக்கான அம்சங்களை ரிக் வேத ஸம்ஹிதையிலேயே நம்மால் காண முடிகிறது.[1] பலி பீடமான யூப ஸ்தம்பத்தை (yūpa-stambha) இளைஞனாகப் போற்றுகிறார்கள் – “மேகலை அணிந்து அழகாய் அலங்கரிக்கப்பட்ட பாலகன் இதோ வருகிறான் (மேகலை அணிந்த பாலகனை ரசானுபாவமாக யூப ஸ்தம்பத்தோடு இங்கே ஒப்பிடுகிறார்கள்); இப்பிறப்பால் உயர்நிலை அடைகிறான்; தேவதைகளை வணங்கி வழிபடும் ரிஷிகள், பெரும் மகிழ்ச்சிகொண்டு அவனை வளரச் செய்கின்றனர்.”[2]
ஒரு ஆன்மீக மாணவனை குறிப்பதற்கு ‘பிரம்மசரிய’ (‘brahmacarya’) என்ற வார்த்தை ரிக் வேதத்திலே இரு முறை வருகின்றது.[3] மேலும், சற்றுமுன்னர் உபநயனமான ஒரு மாணவனைப் பற்றின குறிப்பும் இதில் உள்ளது.[4]
அதர்வ வேதத்தில் பிரம்மசாரி மற்றும் பிரம்மசரிய மார்க்கத்தை மிக உயர்வாகப் போற்றி ஒரு சூக்தமே இடம்பெற்றுள்ளது.[5] உபநயன சடங்கிற்கான பல விவரங்களை இங்கிருந்து நம்மால் பெற முடிகிறது. வேதம் பயில வந்த மாணவனை ‘பிரம்மசாரி’ என்றும், அவனது குருவை ‘ஆசாரியர்’ என்றும் அழைத்தனர். அந்த சூக்தத்தின் சாராம்சம் இதோ[6] – “தனது மகிமையால் ஒரு பிரம்மசாரி இரு உலகங்களிலும் சஞ்சரிக்கிறான்;அவன் சாதிப்பதற்கு ஏதுவாக கடவுளர்களும் அவனைக் காத்து ரக்ஷிக்கின்றனர்;குருவை தனது சிரத்தையால் பூரிக்கச் செய்கிறான்.”[7] மேலும், “ஒரு பிரம்மசாரியை கருவைப்போல அவனது குரு தன்னிடத்தே பேணுகிறார்,”[8] என்று கூறப்பட்டுள்ளது. இதற்கடுத்த வரியில், சொர்க்கமும் பூமியும் பிரம்மசாரியின் சமித்துக் கட்டைகள் எனவும், அவன் தனது சமித்துக் கட்டைகள் மற்றும் மேகலை ஆகியவற்றை பயன்படுத்தி கடுமையாக தவம் புரிந்து, அதன்மூலம் இவ்வுலகை நிறையச் செய்கிறான் எனவும் கூறப்பட்டுள்ளது.[9] அவன் க்ஷவரம் செய்து கொள்ளாத முகத்துடன், கருத்த மான்தோல் அணிந்திருப்பான் என்று மேலும் இங்கு கூறப்பட்டுள்ளது. [10] பரந்த பூமியையும், ஆகாயத்தையும் பிச்சை எடுத்து முதன்முதலில் அந்த பிரம்மசாரி பெறுகிறான் எனக் கருதப்பட்டது.[11] மேலும் அவன் சமித்துக் கட்டைகளை அக்னியில் இடுகிறான் என்றும், அக்னி இல்லாத பட்சத்தில் அவைகளை சூரியன், சந்திரன், காற்று, அல்லது நீரில் இடுகிறான் என்றும் கூறப்பட்டுள்ளது.[12] “பிரம்மசாரி மற்றும் உபநயனம் பற்றின பல அம்சங்களை இந்த பத்திகளிலே நம்மால் காண முடிகிறது(அதாவது, அஜின (ajina), மேகலை (mekhalā), சமித்துக் கட்டைகளை காணிக்கை இடுவது, பிச்சை, கடின உழைப்பு, கட்டுப்பாடு போன்றவை)[13],” என டாக்டர் கானே அவர்கள் கூறுகிறார். ஒருவேளை ஸம்ஹிதை காலத்தைக் காட்டிலும் சூத்திர காலத்தில் சிறு வயதிலேயே ஒரு பாலகனுக்கு உபநயனம் நடைபெறும் வழக்கம் இருந்திருக்கலாம்.[14]
பிராஹ்மணங்களில் உபநயனம்
பிராஹ்மண காலத்தில் உபநயனம் என்பது ஒரு விஸ்தீரணமான சடங்காகவே அரங்கேறியது.[15] இதுவே பின்னர் தோன்றிய கிருஹ்ய சூத்திரங்களுக்கும் முன்மாதிரியாக அமைந்தது.[16]
பிரம்மசாரிகளின் வாழ்க்கை முறை பற்றின பல விவரங்கள் ஷதபத பிராஹ்மணத்தில் (Śatapatha-brāhmaṇa)[17] வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் வந்த கிருஹ்ய சூத்திரங்களிலும் இவை இடம்பெற்றுள்ளதை நம்மால் காண முடிகிறது.[18] அதன் சாராம்சம் இதோ – ஆசாரியரிடத்தில் ஒரு பாலகன் சென்று, “நான் பிரம்மசரிய விரதத்தை அனுஷ்டிக்க விரும்புகிறேன்” என்றும் “நான் பிரம்மசாரி ஆக வேண்டும்” என்றும் கேட்டுக் கொள்கிறான். அந்த ஆசாரியர் அவனை, “உன் பெயர் என்ன?”, என்று வினவுகிறார். அதன்பின் அவனை அவருக்கருகில் அழைக்கிறார் (upanayati). அவன் கரங்களைப் பற்றி, “நீ இந்திரனுக்கான பிரம்மசாரி;அக்னி உனது குரு, நான் உனது குரு[19], ராகவனே![20]” என்று கூறுகிறார். அதன்பின் அந்த மாணவனை பஞ்ச பூதங்களின் கட்டுப்பாட்டில் விடுகிறார். மேலும் அவனுக்கு, “நீர் அருந்து. குருவின் இல்லரத்தில் பணியாற்று, சமித்துக் கட்டைகளை அக்னியில் இடு. பகலில் உறங்காதே,” என்று கட்டளை இடுகிறார். சாவித்திரி மந்திரத்தை அவன் மீண்டும் ஓதுகிறான். அந்நாட்களில் பிரம்மசாரியாக அம்மாணவன் சேர்ந்து ஒரு வருடமானதும், அதன்பின் வந்த காலங்களில் ஆறு மாதம் நிறைவடைந்ததும், நாளடைவில் இருபத்து நான்கு நாட்கள்-பன்னிரண்டு நாட்கள்-மூன்று நாட்களானதும் இம்மந்திரம் ஓதப்பட்டு வந்தது; இருப்பினும் உபநயனம் ஆன தருவாயில் இம்மந்திரத்தை கட்டாயம் ஓத வேண்டும்; மந்திரத்தின் முதல் பாதத்தை அவனுக்கு அவன் குரு முதலில் போதிக்கிறார், அதன் பின் மந்திரத்தின் ஒரு பாதியையும், அதற்குப்பின் மந்திரத்தை முற்றிலுமாகவும் அவனுக்கு போதிக்கிறார்.[21] காயத்ரி மந்திரத்தை மாணவனுக்கு போதித்தபின் மூன்று நாட்களுக்கு அவனது குரு அகத்தூய்மையை கடைபிடிக்கிறார்.
மாணவனானதும் ஒரு பிரம்மசாரி அவனில் நான்கின் ஒரு பங்கை அக்னிக்கும், மரண தேவனுக்கும், ஆசாரியருக்கும், தனக்குமாக அர்ப்பணிக்கிறான்.[22] சமித்துக் கட்டைகளை அக்னிக்குக் காணிக்கை இடுவதன்மூலம் அந்த கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான்.[23] பிச்சை எடுப்பதன்மூலம் இரண்டாவதான மரண தேவனின் கட்டிலிருந்து விடுபடுகிறான்.[24] ஆசாரியரின் இல்லத்தில் பணியாற்றுவதன்மூலம் அக்கட்டிலிருந்து விடுபடுகிறான்.[25] தன்னிடமிருந்து அவை பறிக்கப்படலாம் என்றெண்ணி, ஒரு பிரம்மசாரி மாணவன் தனது குருவையும், அவரது இல்லத்தையும், அவரது கால்நடைகளையும் பாதுகாக்கிறான்.[26] ஸமாவர்த்தனம் ஆன ஒரு பிரம்மசாரி மாணவன், பிச்சை எடுப்பதை நிறுத்திவிடுகிறான்.[27]
உபநிஷத்துக்களில் உபநயனம்
உபநிஷத் காலத்தில் அநேகமாக நான்கு வித ஆஸ்ரமங்களும் நிறுவப்பட்டிருக்கலாம். அதனால் மாணவப் பருவத்துக்கான பிரம்மசரியமும் அவ்வந்தஸ்தை எட்டிவிட்டது. மிக உயரிய ஞானத்தைப் பெறுவதற்குமேகூட குருவின் அவசியம் உணரப்பட்டது.[28] இக்காலகட்டத்தில்கூட உபநயனம் குருவிடம் சென்று ஒரு மாணவன் சேர்வதற்கான சடங்காகவே இருந்து வந்தது. ஆனால், அனைவருக்கும் இதை செய்து கொள்வதற்கு அனுமதி இல்லை. குருவின் ஒரு சில முன்நிபந்தனைகளை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். நம்பிக்கை அற்றோருக்கும், பொல்லாதவருக்கும், தீயவருக்கும் ஞானத்தை போதிக்கக் கூடாது என்று ஒரு பிரபல வரி ஒன்றுள்ளது.[29]
ஆனேகமாக அச்சமயத்தில் ஒரு பிரம்மசாரி தனது குருவின் இல்லரத்தில் இலவசமாகவே உண்டும்,வசித்தும் வந்திருக்கலாம்;[30] அதற்கு ஈடாக குருவுக்கு ஒத்தாசையாக அவரது தேவைகளை பூர்த்தி செய்வது, அவரது கால்நடைகளை பராமரிப்பது, உணவு வேண்டி பிச்சை எடுப்பது போன்ற சில வேலைகளை செய்து வந்திருப்பான்.[31] குரு மிகவும் மரியாதைக்குரியவர் ஆனார். குருவை பக்தி சிரத்தையோடு நடத்தும் மாணவனுக்கே மகோன்னதமான ஞானம் பெறும் தகுதி உள்ளது என்று கருதப்பட்டது.[32]
பொதுவாக பன்னிரண்டு வயதில் தொடங்கி இருபத்து நான்கு வயதுவரை ஒரு மாணவன் பயின்று வந்தான்.[33] இருப்பினும் அவரவரது ஆசைக்கும், திறமைக்கும் ஏற்ப இந்த வயது வரம்பு மாறுபடும். ஒவ்வொரு முறை ஒரு புதிய குருவை சென்றடையும்போதும் அம்மாணவனுக்கு உபநயனம் நடைபெறும்.[34] இதன்மூலம் அப்போது இச்சடங்கு எளிமையாகவே நடந்திருக்கக்கூடும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.
உபநிஷத்துக்களை படிக்கும்போது மாணவனாக சேர விரும்புபவன் குருவிடம் சமித்துக் கட்டைகளை எடுத்துச் செல்கிறான் என்பது புலப்படுகிறது. பிரம்மசரிய மார்க்கத்தை தனக்கு போதிக்குமாறு அவரிடத்தில் வேண்டிக் கொள்கிறான்.[35] குருவுக்கு தான் பணிவிடை செய்யத் தயாராக உள்ளதாக அவரிடம் கூறுகிறான்.[36] உபநயனத்தின்போது ஒரு சில சடங்குகள் அப்போதும் அரங்கேறின. கிருஹஸ்தர்களும் வேதம் பயில்விப்பவர்களுமான பிராசீனஷால ஔபமன்யவர் (Prācīnaśāla Aupamanyava) மற்றும் மேலும் நான்கு நபர்கள் சிறிய பாலகர்களைப் போல் கையில் எரிபொருளுடன் அஸ்வபதி கேகயரை (Aśvapati Kekaya) சென்றடைந்தபோது ‘அவர் (Aśvapati Kekaya) அவர்களுக்கு உபநயனம் செய்விக்காமலேயே பாடம் நடத்தத் துவங்குகிறார்.’[37] சத்யகாம ஜாபாலர் (Satyakāma Jābāla) தமது கோத்திரத்தைப் பற்றின உண்மை விவரங்களைக் கூறி கௌதம ஹாரித்ருமதரை (Gautama Hāridrumata) வணங்கியதும் அவர், “அன்புள்ள பாலகனே, சமித்துக் கட்டைகளை எடுத்து வா, நான் உனக்கு கல்வியைத் துவங்கி வைக்கிறேன்! நீ உண்மை பிறழாதவன்,” என்று கூறுகிறார்.[38]
இதற்கு முன்பான காலகட்டங்களில் எல்லாம் வெறும் வார்த்தைகளைக் கொண்டே குருவை வணங்கி மாணவர்கள் அவரிடம் சேர்ந்து கொண்டனர்(அதாவது, எவ்வித சடங்குகளும் அப்போதெல்லாம் நடைபெறவில்லை).[39] மிகவும் பழைய காலங்களில் ஒருவேளை தந்தையே அவரது மகனுக்குப் பயிற்சி அளித்திருக்கலாம்.[40] ஆனால் தைத்தரிய ஸம்ஹிதை (Taittirīya-saṃhitā) காலத்திலிருந்து, ஒரு மாணவன் குருவிடம் சேர்ந்து, அவரது இல்லத்திலேயே வசிக்கலானான். கைதேர்ந்த தத்துவவாதியான உத்தாலக ஆருணி (Uddālaka Āruṇi) தனது மகனான ஸ்வேதகேதுவை (Śvetaketu) குருவிடம் சென்று வேதம் பயிலுமாறு உபதேசிக்கிறார்.[41] சொல்லப்போனால், பிரம்மசரிய ஆஸ்ரமத்தைப் பின்பற்றுபவர் ‘குருவின் இல்லத்தில் பிரம்மசாரியாக வாழ்ந்து, தனது ஆயுள் முடியும்வரை உடல்வருந்த அங்கே பணியாற்ற வேண்டும்’ என்றுகூட கூறப்பட்டுள்ளது.[42]
உபநிஷத் காலத்தில் சீடனது கோத்திரத்தை குரு தெரிந்துகொண்டு அப்பெயரிலேயே அவனை அழைக்கிறார் எனத் தெரிய வருகிறது.[43] பொதுவாக ஒரு பிரம்மசாரி, உணவுக்காக பிச்சை எடுத்தும்[44], குரு வளர்க்கும் அக்னியை பராமரித்தும்[45], அவரது கால்நடைகளை பராமரித்தும்[46] வாழ்ந்து வந்தான்.
தொடரும்...
இக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது “Upanayana – A Gentle Introduction” என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.
திரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ஶ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அடிக்குறிப்புகள்
[1] Yuvā suvāsāḥ parivīta āgāt sa u śreyān bhavati jāyamānaḥ. Taṃ dhīrāsaḥ kavaya unnayanti svādhyo manasā devayantaḥ. – Ṛgveda-saṃhitā 3.8.4. இவ்விடத்தில் ‘unnayanti’ க்கும் உபநயனத்துக்குமான வேர்ச்சொல் ஒன்றே.
Āśvalāyana-gṛhya-sūtra 1.19.8—‘Alaṅkṛtaṃ kumāraṃ...ahatena vāsasā saṃvītaṃ...’—பாலகன் புது ஆடை ஆபரணங்கள் அணிந்திருக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது
[2] HDS, பக்கம் 269
[3] Ṛgveda-saṃhitā 10.109.5
[4] Ṛgveda-saṃhitā 3.8.4-5
[5] Atharvaveda-saṃhitā 11.7.1-26
[6] HDS, பக்கம். 270
[7] Brahmacārīṣṇaṃścarati rodasī ubhe tasmin devāḥ saṃmanaso bhavanti. Sa dādhāra pṛthivīṃ divaṃ ca sa ācāryaṃ tapasā piparti. – Atharvaveda-saṃhitā 11.7.1
[8] Ācārya upanayamāno brahmacāriṇaṃ kṛṇute garbham antaḥ. Taṃ rātrīstisra udare bibharti taṃ jātaṃ draṣṭum abhisaṃyanti devāḥ. – Atharvaveda-saṃhitā 11.7.3
[9] Iyaṃ samit pṛthivī dyaurdvitīyotāntarikṣaṃ samidhā pṛṇāti. Brahmacārī samidhā mekhalayā śrameṇa lokāṃstapasā piparti. – Atharvaveda-saṃhitā 11.7.4
[10] Brahmacāryeti samidhā samiddhaḥ kārṣṇaṃ vasāno dīkṣito dīrghaśmaśruḥ. Sa sadya eti pūrvasmāduttaraṃ samudraṃ lokāntsaṃgṛbhya muhurācarikrat. – Atharvaveda-saṃhitā 11.7.6
[11] Imāṃ bhūmiṃ pṛthivīṃ brahmacārī bhikṣām ā jabhāra prathamo divaṃ ca. Te kṛtvā samidhāvupāste tayorārpitā bhuvanāni viśvā. – Atharvaveda-saṃhitā 11.5.9
[12] Agnau sūrye candramasi mātariśvan brahmacāryapsu samidham ā dadhāti. Tāsām arcīṃṣi pṛthagabhre caranti tāsām ājyaṃ puruṣo varṣam āpaḥ. – Atharvaveda-saṃhitā 11.7.13
[13] HDS, பக்கம் 270
[14] Ibid.
[15] Śatapatha-brāhmaṇa 1.2.1-8 யைக் காண்க
[16] உதாரணத்துக்கு, Pāraskara-gṛhya-sūtra 2.2.5வைப் பார்க்கவும்
[17] Śatapatha-brāhmaṇa 11.5.4.1-17
[18] HDS, பக்கம் 271
[19] இந்திரனை முதலாசானாகக் கருதினர்; ஒருவேளை இந்திரியங்களான கர்மேந்திரியங்களும் (கைகள், கால்கள், வாய், மல-ஜல துவாரங்கள்), ஞானேந்திரியங்களும் (கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, தோல்) சரியான நிலையில் இருக்க வேண்டும் என்பதை இது குறிப்பதாகக் கொள்ளலாம். அக்னி அவனது இரண்டாம் ஆசான்; சிறுவன் தனது உணர்ச்சிகளை ஞானம் எனும் தீயில் இட வேண்டும் என்பதை குறிப்பதாகவும் இதனைக் கொள்ளலாம். அவனது குரு மூன்றாம் இடத்தையே பிடித்தார்.
[20]குரு மாணவனை அவன் பெயர்கொண்டு அழைக்கிறார்; இந்த கட்டுரையில் ராகவன் என்ற பெயரைப் பயன்படுத்தி இருக்கிறேன்.
[21] Brahmacaryamāgāmityāha... brahmacāryasānītyāha... Athainamāha ko nāmāsīti ...athāsya hastaṃ gṛhṇāti. Indrasya brahmacāryasi agnirācāryastavāhamācāryastavāsāviti. ...athainaṃ bhūtebhyaḥ paridadāti. ...adbhyastvauṣadhībhyaḥ paridadāmīti. ...apo’śā netyamṛtaṃ...karma kuru... samidhamādhehīti... mā śuṣupthā iti. ...athāsmai sāvitrīmanvāha. Tāṃ ha smaitāṃ purā saṃvatsare’nvāhuḥ... Atha ṣaṭsu māseṣu... Atha caturviṃśatyahe... Atha dvādaśāhe... Atha tryahe. ...tadapi ślokaṃ gāyanti. Ācāryo garbhī...brāhmaṇa iti. Sadyo ha tvāva brāhmaṇāyānubrūyādāgneyo vai brāhmaṇaḥ. ...tāṃ vai pacco’nvāha... athārdharcaśo... atha kṛtsnāmeko... Tadāhuḥ. – Śatapatha-brāhmaṇa 11.5.4.1-17
[22] Caturdhā bhūtāni praviśati agnim padā mṛtyūm padācāryam padātmanyevāsya caturthaḥ pādaḥ pariśiṣyate. – Śatapatha-brāhmaṇa 11.3.3.3
[23] Sa yadagnaye samidhamāharati ya evāsyāgnau pādastameva tena parikrīṇāti... – Śatapatha-brāhmaṇa 11.3.3.4
[24] Atha yadātmānaṃ daridrīkṛtyeva ahrīrbhūtvā bhikṣate ya evāsya mṛtyau pādastameva tena parikrīṇāti... – Śatapatha-brāhmaṇa 11.3.3.5
[25] Atha yadācāryavacasaṃ karoti yadācāryāya karma karoti ya evāsyācārye pādastameva tena parikrīṇāti... – Śatapatha-brāhmaṇa 11.3.3.6
[26] Tasmādbrahmacāriṇa ācāryaṃ gopāyanti. Gṛhānpaśūnnenno’paharāniti. – Śatapatha-brāhmaṇa 3.6.2.15
[27] Gopatha-brāhmaṇa 2.3 மற்றும் Baudhāyana-dharma-sūtra 1.2.53
[28] Ācāryastu te gatiṃ vaktā...– Chāndogyopaniṣad 4.14.1
[29] Etadguhyatamaṃ nāputrāya nāśiṣyāya nāśāntāya kīrtayediti ananyabhaktāya sarvaguṇasampannāya dadyāt. – Maitrāyaṇyupaniṣad 6.29
[30] ஒரு மாணவனை ‘ācāryakulavāsin’ என்றோ ‘antevāsin’ என்றோ அழைத்துவந்தனர் (Chāndogyopaniṣad 3.2.5, 4.10.1 ஆகியவற்றைக் காண்க)
[31] Chāndogyopaniṣad 4.3.5
[32] Yasya deve parā bhaktiryathā deve tathā gurau. Tasyaite kathitā hyarthāḥ prakāśante mahātmanaḥ prakāśante mahātmanaḥ. – Śvetāśvataropaniṣad 6.23
[33]Chāndogyopaniṣad 4.1.2; Chāndogyopaniṣad 2.23.1, 4.10.1, 6.1.2 ஆகியவற்றையும் காண்க
[34] Chāndogyopaniṣad 4.1.2
[35] ‘Brahmacarya’ என்கிற வார்த்தை Kaṭhopaniṣad 1.1.15, Muṇḍakopaniṣad 2.1.7, Chāndogyopaniṣad 6.1.1 ஆகியவற்றிலும், இன்னும் பிற உபநிஷத்துக்களிலும் வருகின்றது
[36] Bṛhadāraṇyakopaniṣad 6.2.1; Chāndogyopaniṣad 5.6, 4.5.5, 5.11.7; Maitrāyaṇyupaniṣad 1.2.12 ஆகியவற்றைக் காண்க
[37] ...te ha samitpāṇayaḥ pūrvāhṇe praticakramire tānhānupanīyaivaitaduvāca – Chāndogyopaniṣad 5.11.7
[38] ...samidhaṃ somyāharopa tvā neṣye na satyādagā iti – Chāndogyopaniṣad 4.4.5
[39] Upaimyahaṃ bhavantamiti vācā ha smaiva pūrva upayanti sa hopāyanakīrtyovāsa – Bṛhadāraṇyakopaniṣad 6.2.7
[40] Bṛhadāraṇyakopaniṣad 6.2.1 யைக் காண்க – ‘Anuśiṣṭonvasi pitretyomiti hovāca.’ Yājñavalkyasmṛti 1.15 பற்றின வர்ணனையில் Viśvarūpa, ‘Gurugrahaṇaṃ tu mukhyaṃ piturupanetṛtvamiti. Tathā ca śrutiḥ. Tasmātputramanuśiṣṭaṃ lokasyamāhuriti. Ācāryopanayanaṃ tu brāhmaṇasyānukalpaḥ’ என்கிறார்
[41] Śvetaketurhāruṇeya āsa taṃ ha pitovāca śvetaketo vasa brahmacaryaṃ... Sa ha dvādaśa varṣa upetya caturviṃśativarṣaḥ sarvānvedānadhītya mahāmanā anūcānamānī stabdha eyāya taṃ ha pitovāca. Śvetaketo... uta tamādeśamaprākṣyaḥ yenāśrutaṃ śrutaṃ bhavati. – Chāndogyopaniṣad 6.1.1-3
[42] Chāndogyopaniṣad 2.23.1. இது naiṣṭikabrahmacārin யைக் குறிக்கிறது
[43] ...hovāca kiṃgotro nu somyāsīti... – Chāndogyopaniṣad 4.4.4
[44] Chāndogyopaniṣad 4.3.5
[45] Chāndogyopaniṣad 4.10.1-2
[46] Chāndogyopaniṣad 4.4.5