நம் வாழ்வில் மாற்றமொன்றே மாறாதது.
உடலளவில், உணர்ச்சிப் பெருக்கத்தில், மன ரீதியில், பிறரோடு உறவைப் பேணுவதில், சமூக அந்தஸ்தில் – இன்னும் வாழ்வின் பற்பல நிலைகளிலும் நமது நிலைபாடு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மாறிக்கொண்டே வருகிறது.
இது ஒரு முடிவற்ற, தொடர் மாற்றம் எனினும், வாழ்வின் பல ‘கட்டங்களை’ நம்மால் உணர முடிகிறது. உதாரணத்துக்கு, படிப்பை எடுத்துக் கொள்ளலாம். தினமொறு புதுப்பாடம் பயில்கிறோம். எனினும், ‘ஆரம்ப பள்ளி’, ‘நடுநிலைப் பள்ளி’, ‘உயர்நிலை பள்ளி’ என்றெல்லாம் நாம் வகை பிரிக்கிறோம். பள்ளியிலிருந்து கல்லூரிக்கு செல்வது ஒரு கட்டம், அதன்பின் பட்டம் பெறுவது, வேலை வாய்ப்பு, வேலையில் அதிகாரச் செல்வாக்கு என்பனவற்றை வெவ்வேறு கட்டங்களாக வரையறுத்துக் கொள்கிறோம். இல்வாழ்க்கையில், தனிமனித அந்தஸ்திலிருந்து மணவாழ்வில் அடியெடுத்து வைப்பது ஒரு கட்டம். அதற்கடுத்த கட்டம் பிள்ளைப்பேறு.
‘மாணாக்கன்’, ‘அலுவலகப் பணியாளன்’, ‘விவாகம்’, ‘மக்கட்பேறு’, ‘குழந்தைகள் மேற்படிப்பு’, ‘சமூக வாழ்விலிருந்து ஓய்வு’ என நம் வாழ்நாள் முழுவதையும் படிப்படியாக வரையறுத்துக் கொள்கிறோம். ஒரு கலைஞன், அவன் வாழ்நாளின் வெவ்வேறு காலகட்டங்களில் தான் செய்த படைப்புக்களை முன்னிறுத்தியே தனது வாழ்வைக் காட்சிப்படுத்திப் பார்க்கிறான். ஒரு ஓட்டப்பந்தயக் காரர், தான் வாங்கிய பதக்கங்களையே தம் வாழ்க்கைக் குறியீடாக கருதுகிறார். மனித வாழ்வின் முக்கியத் தருணங்களை நிர்ணயிக்கும் பழக்கம் புராதனமானது. உலகின் பண்டைய கலாச்சாரங்களில் இது பிரதிபலிக்கிறது.
உலகின் பண்டைய நாகரிகங்களில் ஒன்றானது ‘சனாதன தர்மம்’ என அனைவராலும் போற்றப்படுகிற இந்தியர்களின் பண்டைய கலாச்சார பாரம்பரியம்.
‘என்றென்றைக்குமான வாழ்க்கைப் பாதை’ எனவும் ‘காலவரையறையற்ற வாழ்க்கை தத்துவம்’ எனவும் இதற்குப் பொருள் கூறலாம். எளிமைக்காக இதனை இந்து நாகரிகம் எனக் கொள்ளலாம். இந்நாகரிகத்தின் மிகப் பழமையான படைப்பு ‘ருக்வேத ஸம்ஹிதை’ (Ṛgveda-saṃhitā). நாமறிந்தவரையில், இதுவே உலகின் பழம்பெறும் படைப்பும்கூட. இதிலுள்ள சில பகுதிகள் ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவை!
சுமார் மூன்றிலிருந்து நான்காயிரம் ஆண்டு கால வரநிலையில் வேதங்கள் எனும் ஒரு ஞான மார்க்கம் உருவெடுத்தது. பல்வேறு ரிஷிகளும் (ṛṣi), ரிஷிகைகளும் (ṛṣikā) சமஸ்கிருதத்தில் இவற்றைப் படைத்தார்கள். வேதங்களின் நிறைவு பாகமே உபநிடதங்கள் (Upaniṣad). வேதங்கள் மட்டுமன்றி, பல்வேறு பாடதிட்டங்களும் இடம்பெற்றிருந்தன; அவையாவன – அர்த்த சாஸ்திரம் / arthaśāstra (அரசியல் மற்றும் பொருளாதாரம்), ஆயுர்வேதம் / āyurveda (சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்), கந்தர்வவேதம் / gāndharva-veda (கலை), காம சாஸ்திரம் / kāmaśāstra (வாழ்வை கலைநயமாக அனுபவித்தல்), ஸ்தாபத்யவேதம் / sthāpatyaveda (கட்டடவியல்), ஷிக்ஷை / śikṣā (ஒலிப்பியல்), வியாகரணம் / vyākaraṇa (இலக்கணம்), சந்தசு / chandas (யாப்பிலக்கணம்), நிருக்தம் / nirukta (வார்த்தைகளின் மூலம்), கல்பம் / kalpa (சடங்குகள், கோட்பாடுகள், சமூக விதிகள் மற்றும் கலாச்சார பழக்க வழக்கங்கள்)[1], ஜ்யோதிஷம் / jyautiṣa (ஜோதிடம் மற்றும் வானியல்), இதிகாசம் / itihāsa (வரலாறு மற்றும் காவிய இலக்கியம்), புராணம் / purāṇa (தெய்வங்கள், ரிஷிகள், அரசர்கள் போன்றோரின் குடும்பம் பற்றின பழங்கதைகள் மற்றும் படைப்பு பற்றின கதைகள்; எளிதில் கிட்டக் கூடியவை), தர்சனம் / darśana (தத்துவம் சார்ந்த பாடசாலைகள்). இவற்றுள் வேதங்களை ஷ்ருதி / śruti (கேட்டுப் பயில்பவை) என்றும் பிறவற்றை ஸ்ம்ருதி / smṛti (நினைவில் கொள்ளப்பட்டவை)[2] என்றும் வழங்கலாம்.
ஆதி காலங்களில் வாழ்க்கையே சவாலாக இருந்து வந்தது. உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை ஈட்டுவதேகூட சிரமமாக இருந்து வந்த நாட்கள் அவை. இதனால்தான் நம் முன்னோர்கள் வாழ்க்கைக்கு பெரும் மதிப்பளித்து வந்தனர். நமது ரிஷி/ரிஷிகைகளை பொருத்தவரை வாழ்க்கை புனிதமானது – புனிதமான ஒன்றைக் கொண்டாட வேண்டுமல்லவா! ‘நமக்கு இவ்வனைத்தையும் அளித்த சக்திகளை மறந்துவிடாமல், நாம் பெற்ற இவ்வனைத்தையும் கருத்தில்கொண்டு மகிழ்ச்சி கொள்ள வேண்டும்’ என்பதே அந்நாட்களது தீர்க்கதரிசிகளின் சிந்தனையாக இருந்தது.
பூமி, நெருப்பு, நீர், காற்று போன்ற ‘பூதங்களை’ நாம் இன்று பெரிதும் கருத்தில் கொள்வதில்லை. ஆனால் நமது மூதாதையர்களை பொருத்தவரையில் இவை மதிப்பிற்குரிய பொக்கிஷங்களாகவே விளங்கின. ஏனெனில் அந்நாட்களில் பூமியின் எல்லா பிரதேசங்களும் வாழத் தகுந்தவைகளாக அமைந்திருக்கவில்லை; காற்றின் போக்கும் கணிக்கும்படியானதாக இருக்கவில்லை; குடிநீர் எந்நேரமும் கிடைத்திருக்கவில்லை. நெருப்பு-மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்பு. நெருப்பு ஒரே நேரத்தில் வெப்பத்தையும், வெளிச்சத்தையும் தந்துவிடுவதால், அதனை அவர்கள் வரமெனக் கருதினார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்பே அவர்களால் பஞ்ச பூதங்களையும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். கண்டிப்பாக, இயற்கைக்கு எதிரான ஒரு பெரிய போராட்டமாகவே இது அவர்களுக்கு இருந்திருக்கும். ஆனால் அக்காலத்து ரிஷி/ரிஷிகைகளோ இயற்கையை எதிரியாக பாவிக்கவில்லை. ஒரு பக்கத்தில் சீற்றத்தோடும், மறு பக்கத்தில் ஜீவாதாரமாகவும் இயற்கை விளங்குவதாக அவர்களுக்குப்பட்டது. இயற்கையை கட்டி அடைத்து அதனை வெல்வதைக்காட்டிலும், இயற்கையின் குழந்தைகளாகவே வாழப் பழகிக் கொண்டனர் நமது மூதாதையர்கள். அதனால் இயற்கையை அவர்கள் போற்றி வணங்கினர். ‘நெருப்பு’ அவர்களுக்கு ‘அக்னி’ தேவனானது. அதனை வணங்குவதோடு, பிற தேவதைகளுக்கு காணிக்கையிடும் வாயிலாகவும் அதனைப் பயன்படுத்தினர். சூரியன் ‘ஸவித்ற்’ (‘Savitṛ’) என்கிற தேவனானது. ‘மாதரிஷ்வ’ (‘Mātariśva’) என்று காற்றைப் போற்றி வணங்கினர். விறகுக்கட்டை அக்னிக்கு எரிபொருளான ஸமித் / samidh ஆனது. இவ்வாறு நன்றிக்கடன் மற்றும் உணர்ச்சிப் பெருக்கம் எனும் இருவகைத் தொடர்பு பேணி இயற்கையை தெய்வமாகப் போற்றி வணங்கினர். சூரியன் அவர்களது தந்தையானான், நதிகள் அவர்களது தமக்கைகளாயின; பூமி அவர்களுக்குத் தாயானாள், காற்று அவர்களுக்கு சகோதரனானது. எண்ணற்ற சேர்க்கைகள் கொண்ட இந்த வாழ்க்கையை அவர்கள் கொண்டாடிக் களிப்புற்றனர்.
வாழ்க்கை முழுவதுமே புனிதமானதுதான்; கொண்டாடப்பட வேண்டியதுதான். எனினும் ஆசை, வலி, மனச்சோர்வு, பொறாமை போன்ற பல்வகை உளைச்சல்களுக்கு மத்தியில் இவ்வாழ்வை கொண்டாடி மகிழ்வதென்பது சாத்தியமற்றுப் போய்விடுகிறது. இவ்விதமிருக்க, ஒருவரது வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களைத் தேர்ந்தெடுத்து சமூக/கலாச்சார ரீதியில் அவற்றுக்கு அங்கீகாரம் வழங்குவதன்மூலம், சுற்றத்தாருடன் கூடி இணைந்து கொண்டாட அதுவே நல்ல சந்தர்ப்பமாக அமைந்து விடுகின்றது. இதுபோன்ற வாழ்வின் முக்கியமான கட்டங்கள் யாவை?
தொடரும்...
இக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது "Upanayana – A Gentle Introduction" என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.
அடிக்குறிப்புகள்
[1] ‘கல்பம்’ என்கிற சொல் ‘கல்பந்தே வா அனேன வேதா:’ (‘Kalpante vā anena vedāḥ’) என்பதிலிருந்து பிறந்தது – வேதங்களை சரியாக புரிந்துகொள்ள இது உதவுகிறது, வேதங்களை சரிவர செயல்படுத்த இது வழிவகுக்கிறது. இவற்றுள் இடம்பெற்றுள்ள பகுதிகளில் பெரும்பாலும் தெளிவான, சுருக்கமான, முதுமொழி வகையை சார்ந்த சூத்திர / sūtra பாணியே கையாளப்பட்டுள்ளது. நால்வகை கல்பங்களாவன – i. தர்ம சூத்திரம் / dharma-sūtra (சமூக அமைப்பை ஒத்தமைந்த சடங்கு – சம்பிரதாயங்களும், கடமைகளும்), ii. க்ருஹ்ய சூத்திரம் / gṛhya-sūtra (இல்லறத்துக்கான சடங்குகள் மற்றும் கடமைகள்), iii. ஷ்ரௌத சூத்திரம் / śrauta-sūtra (வேதங்களை வணங்கி வழிபடுதலும், அதற்கான கோட்பாடுகளும்), மற்றும் iv. சுல்ப சூத்திரம் / śulba-sūtra (யக்ஞ பீடத்தை அமைப்பதற்கான விவரங்கள்).
[2] பொதுவாக, ஷ்ருதி (śruti) என்பது வேதத்தையும், ஸ்ம்ருதி (smṛti) என்பது பிற படைப்புக்களையும் குறிக்கின்றன. இருப்பினும், கல்பத்தில் ஸ்ம்ருதி என்பது சட்டம், ஆட்சி, சமூகம், பாரம்பரியம் உள்ளிட்ட பல்வகைக்குமான விரிவான கோட்பாடுகள் அமைந்த ஒரு தொகுப்பு. கல்பத்தின் தர்ம சூத்திரத்தையும், க்ருஹ்ய சூத்திரத்தையும் உள்ளடக்கியதே ஸ்ம்ருதிகளாகும். மனு-ஸ்ம்ருதி (Manu-smṛti), யாக்ஞவல்க்ய-ஸ்ம்ருதி (Yājñavalkya-smṛti), பராஷர-ஸ்ம்ருதி (Parāśara-smṛti) என கிட்டத்தட்ட நாற்பது ஸ்ம்ருதிகள் உள்ளன.