மேலும் தற்போதுள்ள நமது பண்டிதர்கள் புத்த மற்றும் ஜைன மத தத்துவங்களையும் கற்க முன்வர வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். வேதத்தை அடிப்படையாக கொள்ளாத இதுபோன்ற மதங்களை நான் கற்கச் சொல்வது புதுமைக்காக அல்ல. ஒரு காலத்தில் புறக்கோட்பாடுகளாக கருதப்பட்ட சாங்கியத்தையும் வைசேஷிகத்தையும் கூட நமது பண்டைய புலவர்கள் கற்றுத்தேர்ந்தனர். சங்கரர் முன்னதை போலி-பாரம்பரியக் கொள்கையெனவும், பின்னதை அறை-சூனியவாதம் என்றும் கருதிவந்தார்.[1] அப்படி இருந்தும்கூட, இவற்றை உன்னிப்பாக பயின்றனர். மேலும் மரபு வழாத தர்சனங்களுள் இவை இடம் பெறவும் செய்தன. வாசஸ்பதி என்கிற புகழ்பெற்ற வேதாந்தி சாங்கியத்தை பற்றியும், அதன் மற்றொரு அங்கமான யோகம் பற்றியும் உரை இயற்றினார். இப்படி அனைத்தையும் கற்றுத் தேறுகிற பாண்டித்தியமும் மேலும் அதனுடன் கூட அமைகிற பரந்த ஞானமுமே இப்போது நமக்குத் தேவை. பழைய பண்டிதர்கள் புத்தமும் ஜைனமும் பயின்றனர் எனினும், அவர்களது அணுகுமுறை சரியானதாக அமைந்திருக்கவில்லை. உதாரணத்துக்கு உதாயனர் போன்ற பல மேதைகள்கூட இவற்றை கண்டனத்துக்கு உட்படுத்தி உள்ளார்.[2] இது ஏனென்றால் புத்தர்களும் ஜைனர்களும் வேதத்தை கடுமையாக எதிர்த்து வந்தனர். ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் வாழ்ந்துவரும் நாம் இதனை ஒரு வித்தியாசமான கண்ணோட்டம் கொண்டுஅணுக முடியும். மேலும், வேதத்தின்பாலுள்ள நமது தற்போதைய கண்ணோட்டமும் மாற்றம் பெற்றிருக்கிறது என்பதே நிதர்சனம். அவ்விரு சமயங்களிலும் இடம்பெற்றுள்ள இலக்கியமும் பிற கோட்பாடுகளும் பல இடங்களில் உச்சத்தை தொட்டிருக்கிறது என்றே கூற வேண்டும். நளினத்திலோ நயத்திலோ, நுட்பத்திலோ அறிவார்ந்த ஆழ்ந்த எண்ணங்களிலோ, இவ்விரு சமயங்களும் ஹிந்து மதத்தைக் காட்டிலும் எந்தவிதத்திலும் பின்தங்கிவிடவில்லை. உதாரணத்துக்கு, நாம் குமாரிலாவிலிருந்து பிரபாசந்திராவிற்கு நகரும்போதோ, கௌடபாதாவிலிருந்து நாகார்ஜுனாவிற்கு நகரும்போதோ நமக்கு எவ்வித நிலைமாற்றமும் ஏற்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், புத்த ஜைன மதக் கோட்பாடுகளுக்கும் நமது மத கோட்பாடுகளுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. உதாரணத்துக்கு, அவர்களும் யோக சாதனையிலும், கர்மத்திலும் அதனுடன் கூடவருகிற மறுபிறப்புக் கோட்பாட்டிலும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இவ்வனைத்திற்கும் மேலாக, இவ்வனைத்து மதங்களும் முன்வைக்கும் சித்தாந்தம் வெவ்வேறாயினும், இவற்றின் நோக்கு ஒன்றானதே. தற்போதுள்ள பண்டிதர்கள் பலரும் இவ்விரு மதங்களையும் கற்று வருகின்றனர் என்பதை நான் அறிவேன். நான் இது குறித்து இங்கே பேசியதன் காரணம், இவற்றை முறையாகவும், இன்னும் பரவலாகவும், அனுதாபத்தோடும் அணுக வேண்டும் என்பதே எனது உள்ளக்கிடக்கை ஆகும்.
சமஸ்கிருதம் பயில்வது அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றே என்றே நான் இது வரையில் கருதி இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக தற்போது ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களில் நவீன கலாச்சாரத்தை முன்வைத்து ஒரு சாராரும், வட்டார மொழியை முன்வைத்து மற்றொரு சாராரும் சமஸ்கிருதம் பயில்வது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். சமஸ்கிருத மொழியை முன்வைப்பவர்கள் நவீன கலாச்சாரத்தை புறந்தள்ளிவிடவோ அல்லது தாய்மொழியை வளர்ப்பதற்கு தடை கூறுவதோ இல்லை என்பதை பெரும்பாலும் இவ்விமர்சகர்கள் அனைவரும் மறந்துவிடுகின்றனர். பிற மொழிகளை அடையாளங்காணும் அதே நேரத்தில் சமஸ்கிருதத்தை மறந்துவிடக்கூடாது என்பதே இவர்கள் கருத்து. இன்னும் சொல்லப்போனால், சமஸ்கிருதம் பயில்வது நம் எதிர்காலத்துக்கு நல்லது என்பதே இவர்களது கருத்து. தற்போது நிலவிவரும் கருத்து வேறுபாட்டை காணும்போது, சமஸ்கிருதம் பயில்வதால் நாம் அடையக்கூடிய பயன் குறித்து அறிய வேண்டியதும் இங்கு அவசியமாகிறது. சமஸ்கிருதத்தின் பழைமை, செழுமை, அசல்தன்மை, பன்மை தன்மை குறித்தெல்லாம் நான் இப்போது பேசப்போவதில்லை. மொழியியலிலும், வெவ்வேறு கலாச்சாரங்களின் புராணங்களை ஒப்பிட்டு பார்க்கவும் சமஸ்கிருத மொழி ஏதுவாய் விளங்கியதால் கிட்டிய பற்பல நன்மைகள் குறித்தோகூட நான் இப்போது பேசப்போவதில்லை. இந்தியர்கள் மட்டுமல்லாது பிற நாட்டினரும் இம்மொழியை கற்க வேண்டும் என்பதையே இது மேலும் உறுதி செய்கிறது. இந்தியர்களாகிய நமக்கு இம்மொழியால் என்ன பயன்? நமது பண்டைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கண்டறிய இம்மொழி ஏதுவாகிறது. இம்மொழியில் இடம்பெறும் தத்துவ பத்திகள் மட்டுமல்லாது இம்மொழியின் அனைத்து அங்கங்களும் அக்கலாச்சாரத்தின் ஆன்மாவை பிரதிபலிக்கிறது. இதில் இடம்பெறும் வெவ்வேறு இதிகாசங்களும் புராணங்களும் சிறந்த எடுத்துக்காட்டுகளை முன்னிறுத்தி, நம் நடைமுறை பயன்பாட்டுக்கு உதவுவதால் நம்வாழ்வை மெருகேற்றுகின்றன. கவிதை மற்றும் நாடகமும்கூட இதையே செய்கின்றன என்றபோதிலும், இவை நுண்கலைகள் ஆனதால் மறைமுகமாக இன்னும் ஆழமாக நமக்கு நன்மை பயக்குகின்றன. நிச்சயமாக, ஒரு கொள்கையை தெளிவாக புரிந்துகொள்ள அதனால் பயன்பெற்றவர்களையோ அல்லது அதனை தீவிரமாக பின்பற்றுபவர்களையோ நோக்குவதன்மூலம் உணரலாம்; இருப்பினும் வரலாற்றால் பற்பல மாற்றங்களை எதிர்கொண்ட ஒரு தேசத்தில் இதுபோன்றோரை மட்டுமே நம்பி இருக்க முடியாது. இம்முயற்சி தோல்வியுறும்போது நாம் அந்நாட்டின் இலக்கியங்களை கருத்தில் கொள்வது அவசியமாகிறது. இந்தியா தற்போது இந்நிலையில்தான் இருக்கிறது. பல தேசவிரோத, மதவாத சக்திகள் இயங்கிவரும் இக்காலகட்டத்தில் ஒரு இந்தியனது அடையாளம் தெளிவற்றோ தொலைந்தோ விடக்கூடும். இவ்வடையாளம் நம் அனைவரையும் இணைக்கும் பாலமாக-சுமார் 2500 ஆண்டுகளாக வேதகாலம் தொட்டு இருந்து வருகிறது. இதன் தொன்மையே இந்திய சமுதாயத்திலும், நிறுவனங்களிலும் இதன் செல்வாக்கை எடுத்துக் காட்டுகின்றது; மேலும், எதிர்காலம் என்பது கடந்தகாலத்தை அஸ்திவாரமாகக் கொண்டு அமைய வேண்டும் என்பது நிஜமானால், நாம் நமது வரலாற்றை அறியாமல் இழந்து விடக்கூடாது. நமது அடையாளத்தை புரிந்துகொள்வதற்கும், அதன் மதிப்பீட்டை உணர்வதற்கும் நமது இலக்கியங்களை, குறிப்பாக சம்ஸ்கிருத நூல்களை புரட்டிப் பார்ப்பதே நிரந்தர தீர்வாக அமையும். இதனாலேயே நாம் இம்மொழியை கற்பதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
வெறும் வரலாற்று விபத்துக்களை புரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாமல், இயல்பிலேயே அதனை பின்பற்றி இவ்வடையாளத்தை பெறுவதும் இன்றியமையாதது. நாம் முன்பே சொன்னதுபோல, வேதகாலந்தொட்டு இது இருந்து வருகிறது. ஆனால் வேதகாலத்தின் பல நூற்றாண்டுகால போதுமான ஆராய்ச்சிக்கும், செயலாக்கத்திற்கும் உட்படுத்தப்பட்ட பின்பே இது நடைமுறைக்கு வந்தது. வேத இலக்கியங்களை அலசுகையிலே இவ்வேட்கை தெள்ளத்தெளிவாக புலப்படும். ஒரு குறிப்பிட்ட உபநிஷத்திலிருந்து[3] இங்கு உவமை காட்டுகிறேன். அக்காலத்திலும் மூதாதையர்களிடமிருந்து பெற்ற ஞானத்தை பாதுகாப்பாக அடுத்த தலைமுறையினருக்கு சென்று சேர்ப்பதில் பெரும் கவனம் செலுத்தி வந்தனர் ஆசிரியர்கள். இருப்பினும், வாழ்க்கையின் குறிக்கோளை சென்றடைய பற்பல வித்தியாசமான வழிமுறைகளை போதித்தனர்-ஒரு சிலர் நற்பண்புகளையும், எண்ணம்-சொல்-செயல் ஆகிய kāraṇa-traya-sārūpyam ஒத்து அமைவதையும்; வேறு சிலர் தானம் மற்றும் நிதானம் ஆகியவற்றை கடைபிடிப்பதையும்; மற்றும் சிலர் அனைத்து நல்லொழுக்கங்களை கடைபிடிப்பதுடன் சடங்குகளை சரிவர செய்வதையும் போதித்தனர். இந்நெடுநாளைய வேட்கை வேதத்தின் முந்தைய ‘பூர்வகாண்டமாகவும்’, பிந்தைய ‘உத்தரகாண்டமாகவும்’ இரு அங்கங்களாக உருவெடுத்தது. உத்தர காண்டமாகிய உபநிஷத்துக்கள் போதித்த தத்துவங்களே இந்திய அடையாளமாக நிலைபெற்றது. எனினும், அதன் தனித்துவம் பூர்வ காண்டத்துடன் அதனை ஒப்பிடும்போதுதான் நன்கு புலனாகும். வேதாந்தத்தின் சிஷ்யர்களை கீதைக்குப்பின் பெரிதும் கவர்ந்த ‘கடோபநிஷத்’ உத்தரகாண்டத்தின் அத்தியாவசிய தன்மையையும், பூர்வ காண்டத்திலிருந்து அது வேறுபாடும் தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது; இதையே அடிப்படையாகக்கொண்டு நான் மேலும் என் உரையைத் தொடர்கிறேன்.
தொடரும்...
மொழிபெயர்ப்பு: ஸ்ரீபிரியா ஸ்ரீநிவாசன்
This is the second part of a three-part Tamil translation of Prof. M Hiriyanna's "The Value of Sanskrit Learning and Culture" from his anthology Popular Essays in Indian Philosophy. Thanks to Shankar Venkataraman for his thorough review and valuable inputs.
அடிக்குறிப்புகள்
[1] Vedānta-sūtra 2.1.1–2; 2.2.18 உரையைக் காண்க.
[2] Cf. Ātma-tattva-viveka, pp. 126–27.
[3] Taittirīyopaniṣad 1.9.