இந்திய சம்பிரதாயங்களில் சிவன், ராமன், கிருஷ்ணன் எனும் தெய்வங்களை கற்றோரும், மற்றோரும் தொன்றுதொட்டு வணங்கி வருகின்றனர். ராமனும், கண்ணனும் வரலாற்றுக் கதாநாயகர்களெனில், சிவனோ ஒரு புராண புருஷன் ஆவான். ஆத்திகராயினும், நாத்திகராயினும் இம்முப்பெரும் தெய்வங்களின் கொள்கைகளைக் கடைபிடிப்பதன் மூலம் பெரிதும் பயன்பெறலாம். இதுவே சிவ-ராம-கிருஷ்ணர்களின் தன்மையாகும்.
இந்த தெய்வங்களைக் குறிப்பிடுகையில், அவர்களது தேவிமார்களையும் உள்ளடக்கியே கூறுகிறோம். ஆதலால் இதனை ஓர் ஆண் பேரினவாதம் என்று பொருள் கொள்ளலாகாது. சக்தி இல்லையேல் சிவனில்லை. ராமனிருக்கும் இடத்தில்தான் சீதையும் இருக்கிறாள். கண்ணனைப் பற்றி நினைக்கையிலேயே ராதை, ருக்மிணி, சத்யபாமை முதலானவர்களை நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில், சிவனை கௌரிசங்கரன் என்றும், ராமனை சீதாராமன் என்றும், கிருஷ்ணனை ராதாகிருஷ்ணன் என்றும் நமது சம்பிரதாயங்களில் தேவிமார்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேவிமார்களைக் குறிப்பிட்டே அவர்தமது பிரபுக்களை வழங்குகிறோம்.
இத்தத்வ த்ரயங்கள் – அதாவது, இம்மூன்று தெய்வீக சாரங்களும் – மூவேறு நிலைகளில் நின்று வரையறைகளை வகுக்கிறார்கள். ஒரு தனிமனிதனின் இலக்கை சிவன் பிரதிபலிக்கிறான். குடும்ப வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கவேண்டிய நற்பண்புகளை ராமன் எடுத்துக் காட்டுகிறான். நாம் சமுதாயத்தில் எவ்விதம் வாழ வேண்டும் என்பதனைக் கண்ணன் போதிக்கிறான். இவ்வாறு இம்மூவருமே மூவேறு நிலைகளில் நின்று நமக்கு முன்மாதிரிகளாய் திகழ்கின்றனர். எவ்வாறு நாம் நமது வாழ்வில் தனிநபராகவும் சமுதாயப் பிரஜையாகவும் வெவ்வேறு அங்கங்கள் வகிக்கிறோமோ, அவ்வாறே நாம் கண்ணனிடத்தில் ராமனையும், சிவனிடத்தில் கண்ணனையும், ராமனிடத்தில் சிவனையும் காணலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இம்மூன்று தெய்வங்களின் தலையாய பண்புகளை பின்பற்றி பயன்பெறுவதை பரிசீலிக்கலாம்.
இம்மூவரைப் பற்றின பற்பல நூல்கள் வெளிவந்துள்ளபோதிலும், மிகச் சில நூல்களே இவர்களது பண்புகளை அழகாகப் பதிவு செய்கின்றன. காளிதாசனின் குமாரசம்பவத்தில் சிவனது நிறைவான தன்மையையும், வால்மீகி இராமாயணத்தில் ராமனது பரிபூரணமான பண்பையும், வியாசரது மகாபாரதத்தில் கண்ணனது உண்மை சரித்திரத்தையும் காணலாம்.
சிவன்
முடிவில் நமது அடைக்கலம் நாமே. தனியாக வந்தோம், தனியாகவே செல்வோம். நம்மை நாமாகவே வளர்த்துக்கொள்ள வேண்டும். உலகை மாற்றுவதற்கு முன், நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இதுவே சிவன் நமக்கு கற்பிக்கும் பாடமாகும். சிவன் பிறப்பிறப்பைக் கடந்தவன்; தியானம் மற்றும் நர்த்தனம் ஆகிய இரண்டின் வடிவமுமாவார். அவர் சிந்தித்து மகிழ்வுறுகிறார், தியானித்து நர்த்தனமும் ஆடுகிறார். என்ன ஒரு முரணான தன்மை!
சிவனைப் பற்றின குறிப்புக்கள் வேதத்திலேயே இடம்பெற்றுள்ளன. ரிக்வேதத்தின் ருத்திரனே யஜுர்வேதத்தின் சிவனாவான். அவன் பிரகாசமான வடிவமும், களையான முகமும் கொண்டவராக வர்ணிக்கப் படுகிறான். அவன் குணப்படுத்தும் திறன் கொண்டவன். உடல் நலனையும் அளித்து, அதனை நாசம் செய்யும் சக்தியையும் பெற்றவன். அவன் எல்லாவற்றையும் அறிந்த பண்டிதன். அவனே மகத்தான மகாதேவன். இமயமலைவாசி.
லிங்க வழிபாட்டைப் பற்றின பல தவறான கருத்துக்கள் நிலவி வருகின்றன. சிவன் ஒரு ‘லிங்க-சொரூபி’, அதாவது அவன் லிங்க உருவில் வெளிப்படுகிறான். ‘லிங்கம்’ என்பதன் வேர்ச்சொல் ली श्लेषणे (லீ ஷ்லேஷணே), அதாவது ‘ஒட்டிக்கொள்வது’ என்று பொருள்படும். लीयते (லீயதே) என்றால் ‘கரைவது’ அல்லது ‘லயிப்பது’ என்று பொருள்படும். அதனால்தான் நாம் लीयते इति लिङ्गम् (கரைவதால் அது லிங்கம்) எனவும் लयनाल्लिङ्गम् (லயிப்பதால் அது லிங்கம்) எனவும் வழங்குகிறோம். அடிப்படையில் ஒன்றை நேரடியாக சித்தரிக்க முடியாதபோது அதனை லிங்க வடிவில் சித்தரிக்கிறோம். பிரம்ம தத்வத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாததால் நாம் அதனை லிங்கம் கொண்டு குறிப்பிடுகிறோம். பொருள் நிலையில் (‘அதிபூதம்’) அது படைப்பின் சின்னமாகவும், நம்பிக்கை நிலையில் (‘அதிதைவம்’) சிவனாகவும், ஆத்ம நிலையில் (‘அத்யாத்மா’) அது படைத்தழிக்கும் சக்தியுள்ளதாகவும் கருதப்படுகின்றது.
இப்போது நாம் ‘சிவன்’ எனும் பெயரை எடுத்துக் கொள்வோம். शिव என்றால் ‘மங்களகரமான’ எனப் பொருள்படும். அவன் ஆனந்தத்தின் கடவுள். ஆனால் சிவன் உக்கிரக் கடவுளும்கூட. சிவன், சம்பு, மயஸ்கரன் எனும் சாந்தமான பெயர்கள்கொண்டு வழங்குகிறபோதிலும், உக்ரன், ருத்ரன், பீமன் எனும் பயமுறுத்துகிற பெயர்களைக்கொண்டும் நாம் அவனை வழங்குகிறோம். ஆனால் சிவனோ அனுகூலம் பிரதிகூலம் இவற்றிற்கெல்லாம் அப்பார்பட்டவன். அவன் பெயர்-பண்புகளை எல்லாங்கடந்தவன். மென்மை-முரட்டுத்தனம், அமைதி-கலவரம் போன்ற எதிர்மறையான தன்மைகளை நாம் நமக்குள்ளும் காண்கிறோம் அல்லவா? இது நமது பன்முகத்தன்மையையே எடுத்துக்காட்டுகிறது. சிவனைப் பின்பற்றுவதன்மூலம் இவ்வெதிர்மறை குணங்களைக் கடந்துவிட்டால் நாமும் இவ்விருகூறுகளிலிருந்தும் வெளிவந்து விடலாம் என்பதனை நாம் புரிந்துகொள்ளலாம்.
சிவனை ‘அழிப்பவன்’ என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது உண்மைக்கு புரம்பான ஒரு கருத்து. அவன் அனைத்தையும் புதுப்பிப்பதற்காக கலைக்கிற – ‘லயிக்க வைக்கும் தெய்வம்’ ஆவான். இது அழிவன்று, மாறாக புதிய படைப்பிற்காக மேற்கொள்ளப்படுகிற ஒரு கலைப்புச் செயலே ஆகும். ஒன்றைக் கலைக்கும்போது அது அழிவதில்லை; மாறாக அது புலப்படாமல் போகிறது. அது ஒரு புது வடிவம் எடுத்துக் கொள்கிறது. இவ்வாறே படைப்புச் சுழற்சி அரங்கேறுகிறது. சிவன் தன்னிறைவுக்கான கடவுள் ஆவான். ஒருவன் மனநிறைவு பெற்றுவிட்டால் அவன் பிறர் மதிப்பீட்டிற்காக ஏங்குவதில்லை. உலகம் தன் நடத்தைகளை அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.
பற்பல புராணங்களிலும், ஆகமங்களிலும் சிவனைப் பற்றிய வர்ணனைகள் பல உள்ளன. சிவன் பல நிறத்தவர் என்றும், பற்பல தன்மைகள் கொண்டவன் என்றும் அவனை வர்ணிக்கின்றன. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் அவன் வெள்ளை நிறத்தவன் என்றும் அமைதியே உருவெடுத்தவன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, ஏனெனில் உலக நடத்தைகள் எவையும் அவனை பாதிப்பதில்லை.
சிவனின் உருவைக் காண்கையில், பல குறியீடுகள் நமக்குக் கிடைக்கின்றன. தலையிலிருந்து துவங்குகையில், அவனை ‘வ்யோம-கேசன்’ என்கிறோம். இது வானமே அவனது தலைமுடி என்பதற்கான குறியீடு. ‘சப்தம்’ (சத்தம், சொல்) ஆகாயத்தோடு தொடர்புள்ளது. மேலும், அவனது படர்ந்த கேசம் மொழியின் குறியீடாகும். சிவனைப் பொருத்தவரையில், மொழியே பாண்டித்தியத்திற்கான அடையாளம். ஞானமே உருவெடுத்தவனாய் அவன் விளங்குவதால், அவன் கூறுவது அனைத்துமே புனிதத்துவம் பெற்றுவிடுகின்றன. ஆனால் தேங்கிக்கிடக்கும் ஞானம் பாழாகிவிடக்கூடும். ஆதலால், அவனது தலையிலிருந்து கிளம்பிப் பெருகுகிற கங்காப் பிரவாகம் அவன் எல்லாம் அறிந்தவன் என்பதற்கான குறியீடு. ஆதலால், கங்காதரன் என்றும் அழைக்கப்படுகிற சிவன் ஞானத்தின் அடையாளமாய் விளங்குகிறான்.
சிவன் பிறைநிலவை தலையில் சுமப்பதால் அவனை சந்திரசேகரன் என்றும் அழைக்கிறோம். பொதுவாக நிலவானது தேய்ந்து வளர்கிறது. ஆனால் சிவனின் தலையிலுள்ள நிலவோ ஒரேபோல் உள்ளது; என்றும் இளமையாயுள்ளது. அது வளர்ந்து வந்தாலும், அது முதுமை எய்துவதில்லை. அமாவாசை இருட்டைப்போல அறிவின்மையின் சின்னமாகவோ அல்லது பௌர்ணமி முழு நிலவின் வெளிச்சத்தைப்போல எல்லாமறிந்த அகந்தையின் சின்னமாகவோ அது காணப்படுவதில்லை. அகந்தை அகற்றப்பட வேண்டும் என்பதனை உணர்த்தத்தானோ என்னவோ அழகிய பௌர்ணமியன்று சந்திர கிரஹணம் ஏற்படுகின்றது. அதேபோல், அமாவாசையன்று சூரிய க்ரஹணம் ஏற்பட்டு சூரியனே இருட்டடிக்கப்படுகின்றது; அறிவின்மை என்றும் ஆபத்திலேயே முடியும். சிவனின் தலையிலுள்ள பிறைநிலவு மெத்தனமின்றி மேலும், மேலும் கற்றுக்கொண்டு முன்னேறுவதற்கான ‘ஞானோபாசனத்தின்’ சின்னம். நிலவானது சாந்தம், நீர், ‘ஸ்திதி’ ஆகியவற்றின் சின்னமாகும். மேலும் நிலவு ஆனந்தத்தின் சின்னமும்கூட. ஞானமில்லாமல் ஆனந்தமேது?
சற்றே கீழிறங்கிவருகையிலே சிவனது நெற்றிக் கண்ணைக் காண்கிறோம். இது கோபம், நெருப்பு, ‘லயம்’ ஆகியவற்றின் சின்னமாகும். இதனாலேயே நாம் சிவனை த்ரிநேத்திரன் என்றும் விரூபாக்ஷன் என்றும் அழைக்கிறோம். நிலவின் குளிர்ச்சியையும், நெற்றிக்கண்ணின் வெப்பத்தையும் நாம் எவ்வாறு ஒரே இடத்தில் காண முடியும்? இது நமக்கு வியப்பளிக்கலாம். ஆனால் இது நமக்கேகூட நடக்கக்கூடிய ஒன்றே – ஒரு நொடியில் சாந்தமாகவும், அடுத்த நொடியில் ஆக்ரோஷத்துடனும் நாமே கூட நடந்துகொள்கிறோம் அல்லவா? சாந்தமும் தேவை, கோபமும் தேவை. தவிப்போ பலவீனமோ ஒரு நாளும் நன்மையைக் குறிப்பதில்லை. நமக்கு பலம், அதிகாரம், கோபம், சாந்தம் இவ்வனைத்துமே தேவையான பண்புகளாகும். அதனால்தானோ என்னவோ நமது சம்பிரதாயங்களில் நாம் நீர் (‘ஆப’), நெருப்பு (‘அக்னி’) ஆகிய இருவேறு குறியீடுகளையுமே ஞானத்தின் குறியீடுகளாக வழங்கி வருகிறோம். அறிவியலிலுங்கூட கணிதம் போன்ற கடின அறிவியல், உளவியல் போன்ற இலகு அறிவியல் என்று இரு பிரிவுகள் உள்ளன. ‘ஞானநேத்ரம்’ எனப்படுகிற நெற்றிக்கண், விழிப்புணர்வு மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றிற்கான குறியீடாகும். தமது இரு கண்களால் சிவன் அண்டவெளியையும், மூன்றாம் கண்ணினால் காலத்தையும் கடக்கிறார். அண்டவெளி முப்பரிமாணம் கொண்டது, காலம் – இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் – என முப்பிரிவுகளாலானது; தமிழில் பிறவினைகள் என்றும், சமஸ்கிருதத்தில் ‘காரகங்கள்’ என்றும் வழங்கப்படுகிற கர்தா, காரியம், காரணம், வழங்குதல், நீக்கல், ஆதரித்தல் (இவை முறையே வேற்றுமை உருபுகளான பெயர், ஐ, ஆல், கு, இன், கண் என்பனவற்றைக் குறிக்கும்) ஆகியவற்றை ஒத்த இக்கால-வெளியின் ஆறு அம்சங்களையும் சிவன் நன்கு உணர்ந்துள்ளான். அதனால் இவ்வுலகை ஆளும் சிவனே விஸ்வேஸ்வரன், அவனே விஸ்வநாதன்.
அவனது தொண்டையிலுள்ள இருண்ட நிற விஷத்தால் சிவனை விஷகண்டன் என்றும் நீலகண்டன் என்றும் அழைப்பதுண்டு. அது சிவனது சுய கட்டுப்பாட்டின் குறியீடாகும். சிவனுக்கு தீயவைகள் ஒன்றும் புதிதல்ல; அவன் அவற்றை விழுங்கி அவற்றுக்கப்பால் கடந்து சென்றுவிட்டான். பிறைநிலவினால் பேரானந்தமோ, விஷப் பாம்புகளினால் பெரும்பீதியோ அவனுக்கு ஏற்படுவதில்லை. அவன் பாம்புகளை ஆபரணங்களாய் தரித்துக்கொண்டு விளங்கும் நாகபூஷணன் ஆவான். அவன் தலையில் சூடி நிற்கிற கங்கையால் புனிதமடைந்துவிட்டதாக எண்ணி களிப்புருவதுமில்லை, எலும்புக்கூட்டினை பிச்சை பாத்திரமாக ஏந்தி நிற்கிறோமே என்றெண்ணி அவமானம் கொள்வதுமில்லை. இடுகாட்டிலுள்ள சாம்பலைப் பூசிக்கொண்டு அழுக்காகத் திரிவதால் அவனுக்கு பதற்றமுமில்லை; கௌரி தேவியை ஆலிங்கனம் செய்து கொண்டுவிட்டதால் அவனுக்கு எவ்வித பகட்டுமில்லை. விருப்பு-வெறுப்புக்களைக் கடந்தவனாய் அவன் என்றும் நிலைபெற்று விளங்குகிறான். இதனை இவ்வரிகள் நமக்கு ஆழமாய் உணர்த்துகின்றன:
भीतिर्नास्ति भुजङ्गपुङ्गवविषात्प्रीतिर्न चन्द्रामृता-
न्नाशौचं च कपालदामलुलनात्शौचं न गङ्गाजलात्।
नोद्वेगश्चितभस्मना न च सुखं गौरीस्तनालिङ्गना-
दात्मारामतया हिताहितसमः स्वस्थो हरः पातु वः॥
தொடரும்...
இந்த கட்டுரைத் தொடர் ‘ஷதாவதானி’ டாக்டர் ஆர். கணேஷ் அவர்கள் 2009இல் பெங்களூருவில் உள்ள கோகலே பொது விவகாரங்கள் நிறுவனத்தில் (Gokhale Institute of Public Affairs) நிகழ்த்திய கன்னட விரிவுரைகளின் ஹரி இரவிக்குமாரது ஆங்கிலத் தழுவலின் அடிப்படையில் எழுதப்பட்டது. ஆங்கில கட்டுரையை நீங்கள் இங்கே காணலாம்.
இதில் இடம்பெற்றுள்ள இராமாயணக் குறிப்புகள் அனைத்தும் வித்வான் ரங்கநாத ஷர்மாவினது எட்டு தொகுதிகளாலான அவ்விதிகாசத்தின் கன்னட மொழிபெயர்ப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளன (இது பெங்களூருவிலுள்ள ராமாயண பிரகாஷா ஸமிதியின் வெளியீடு).
டாக்டர் வி. விஜயலக்ஷ்மி மற்றும் டாக்டர் எம். வி. இரவிக்குமார் அவர்களது விரிவான கருத்தாய்வுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.