அக்ரூரர் கோகுலத்துக்கு வந்து கிருஷ்ணனை 'தனுர்யாகத்துக்கு' அழைத்துச்செல்ல வருகையில், அவன் தனது வளர்ப்புத் தாய்-தந்தையரான யசோதை-நந்தகோபரிடமிருந்து விடைபெற்றுச் செல்கிறான். அவனது சகோதரனான பலராமனும் அவனுடன் கூடச்செல்கிறான். மதுரா நகருக்குள் பிரவேசிக்கையிலே அவ்விருவரும் அரண்மனை சலவைக்காரனை சந்திக்கின்றனர். கண்ணனும், பலராமனும் அரச குடும்ப விருந்தினராயினும், அவர்கள் அச்சலவைக்காரனிடத்தில் புத்தாடைகளைக் கேட்கையில், அவன் அவ்விருவரையும் கௌரவக் குரைச்சலாக நடத்திவிடுகிறான். கிருஷ்ணன் உடனடியாக அவனை எதிர்த்து நிற்கிறான். எவராயினும் அவனுக்குக் கவலையில்லை. தப்பைத் தட்டிக்கேட்பதென்பது ஒரு உயர்ந்த பண்பாடு. அதிலும் ஜனநாயகத்தில் கண்காணிப்பு அவசியம் தேவை என்பர். கிருஷ்ணனும் அதன்படியே இங்கு நடந்துகொண்டான்.
சலவைக்காரன் போன்ற குரூரர்களை கொடூரமாய் சிக்ஷித்த அதே வேளையில், கிருஷ்ணன் சாதுக்களை ரக்ஷிக்கவும் செய்தான். இந்த மதுரா-பிரவேச அத்தியாயத்திலே, அவன் அரண்மனையில் பணியாற்றிய ஒரு கூனியின் முதுகைத் தொட்டு நிமிர்த்தியதாக வருகிறது. எல்லாவிடங்களிலும் கூனை நிமிர்த்துவதென்பதே கிருஷ்ணனது கொள்கையாகப் படுகிறது. "இது சரியில்லை, அது சரியில்லை", எனக் குறைகூறுவதை விட்டுவிட்டு நாமாகவே அனைத்தையும் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். இப்பண்பு கண்ணனிடம் இருந்தது.
தனது சிறந்த மல்யுத்த வீரர்களான மல்லர்களை அனுப்பி கம்சன் கண்ணனைக் கொன்று வீழ்த்துமாறு கட்டளையிட்டான். அவர்களையும் கிருஷ்ணன் வதம் செய்தான். சலவைக்காரன், குவலயாபீடம் எனும் யானை, மல்லர்கள் இவ்வனைவரையும் கொன்று வீழ்த்தி, 'தனுர்யாகத்தில்' வில்லை முறித்த பின்பு ஒரு நொடி கூட தாமதிக்காமல் கிருஷ்ணன் கம்சனைக் கொன்று வீழ்த்தினான். இதுநாள்வரை தங்களை இம்சித்து வந்த கம்சனிடமிருந்து மக்களை விடுவித்து அவர்கள் மனதில் இடம்பெற்றான் கண்ணன். இரும்பு சூடாக இருக்கையில்தான் அடிக்க வேண்டும்; அதேபோலவே தன் பக்கம்தான் மக்கள் இருக்கின்றனர் என்றுணர்ந்ததுமே கிருஷ்ணன் கொடிய கம்சனை வதம் செய்தான்.
கிருஷ்ணனை பலதரப்பட்ட மக்களும் எவ்வாறு பார்த்து வந்தனர் என்பதைப் பற்றி பாகவதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
அரங்கிற்குள் கிருஷ்ணன் தன் சகோதரனுடன் பிரவேசிக்கையில், அவன்
மல்லர்களுக்கு பேரிடி போலவும், ஆண்களுக்கு நாயகன் போலவும்,
பெண்களுக்கு மன்மதனைப் போலவும், ஆயர்களுக்கு உறவினர் போலவும்;
அரசர்களுக்கு தண்டனையாளன் போலவும், தன் பெற்றோருக்கு குழந்தை போலவும்,
போஜ மன்னன் கம்சனுக்கு காலன் போலவும்;
கல்லாதவர்களுக்கு உயர் சக்தி போலவும்,
யோகிகளுக்கு உன்னத உண்மை போலவும்,
விருஷ்னிக்களுக்கு பெருந்தெய்வம் போலவும் காட்சி அளித்தான்.
मल्लानाम् अशनिः नृणां नरवरः स्त्रीणां स्मरो मूर्तिमान्
गोपानां स्वजनोऽसतां क्षितिभुजां शास्ता स्वपित्रोः शिशुः।
मृत्युर्भोजपतेर्विराडविदुषां तत्त्वं परं योगिनां
वृष्णीनां परदेवतेति विदितो रङ्गं गतः साग्रजः॥
பாகவத புராணம் 10.43.17
அவன் தனி ஆளாகவே நின்று போஜ தேசத்தினர் அனைவரையும் விடுவித்தான். ஆனால் எவரெவரெல்லாம் அவனை நாயகனாகவும் தெய்வமாகவும் கொண்டாடினார்களோ, அவர்களே ஜராசந்தன் தாக்குகையில் கண்ணனை நிந்தித்தார்கள். அவர்களுள் முதியவர்களில் ஒருவரான விகத்ரூ என்பவர், "கம்சனது கொடிய ஆட்சியிலாவது நாம் அனைவரும் உயிருடன் இருந்தோம். ஆனால் இப்போதோ நாம் அனைவரும் இறந்துவிடுவோம் போல இருக்கிறது!", என்று கூறினார். மக்களின் நினைவுத்திறன் எல்லாம் கொஞ்ச காலத்திற்குத்தான்! கிருஷ்ணனுக்கு இதனால் மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டி வந்தது. ஆனால் அதற்காக ஒன்றும் அவன் மனம் தளரவில்லை. அவன் தொடர்ந்து தன் பாதையில் சென்றுகொண்டுதான் இருந்தான்.
இவ்விதிகாசத்தின் பலவிடங்களில் கிருஷ்ணன் பலரது நடத்தையைக் கண்டித்ததாக வருகிறது. துரியோதனனையும், திருதிராஷ்டிரனையும் குறைகூறும் அதே வேளையில், அவன் யுதிஷ்டிரனையும், அர்ஜுனனையும் கண்டிக்கவும் செய்கிறான். சமூகத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சிலர் மாத்திரம்தான் தீயவர்கள் என அவன் ஒருநாளும் குறிப்பிட்டதில்லை. ஏனெனில் சமூகத்திற்கென தனித்த அடையாளம் ஒன்றும் கிடையாது. அவ்வப்போதுள்ள மக்கள் எவ்வாரெல்லாம் நடந்து கொள்கிறார்களோ, அதுபோலவே அப்போதுள்ள சமூகமும் நடந்துகொள்ளும்.
அவன் வடமதுரைக்குள் முதன்முதலில் பிரவேசித்து யாதவர்களை ஒன்று திரட்டுகையில்தான், அவனது பெற்ற தாய்-தகப்பனையும் முதன்முதலாகக் காண்கிறான். அவர்கள் அவன் பிறந்ததுமே அவனை வேறிடத்திற்கு அனுப்பி வைத்ததர்காக அவர்களைக் கடிந்துகொள்ளவோ அல்லது பெற்ற தாயின் அரவணைப்பு கிடைக்காததால் அவளை கோபித்துக்கொள்ளவோ இல்லை.
கண்ணனை கர்ணனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரே சூழ்நிலையை இவ்விருவரும் வித்தியாசமாகக் கையாள்கிறார்கள். தனது தாயார் தான் பிறக்கும்போதே தன்னைக் கைவிட்டுவிட்டதாக கர்ணன் எப்போதும் குறைகூறிக்கொண்டிருக்கிறான். ஆனால் கண்ணனோ இந்நிகழ்வை தனது வாழ்வின் ஒரு அங்கமாக பாவித்து அதனை அப்படியே ஏற்கவும் செய்கிறான். இவ்விரு சூழலிலும் நல்லெண்ணத்துடன்தான் அக்குழந்தைகளது தாய்மார்கள் அவர்களை விட்டுப்பிரிந்தனர். குழந்தை பிறந்த விஷயம் கம்சனுக்குத் தெரிந்தால் அவன் அதனைக் கொன்றுவிடுவானே என்று பயந்த வசுதேவர்-தேவகியும், தான் கன்னியாக இருக்கும்போதே குழந்தை பிறந்துவிட்டதால் குழந்தைக்கு தகப்பன் யார் எனக் கேள்வி எழுப்பி அவனை அனைவரும் கேலி செய்வார்களே என்று அஞ்சிய குந்தியும் தத்தமது குழந்தைகளை பிறந்த உடனே வேறிடத்துக்கு அனுப்பி வைத்தனர். கர்ணனை வேறெவரேனும் வளர்த்தால் அவன் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று எண்ணினாள் குந்தி. குழந்தையை எடுத்து வளர்ப்பவர்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை சுமந்து வருவதால் அதனை கவனமாக வளர்த்துவருவர் என்கிற நம்பிக்கையில், அவனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் பலவற்றையும் அணிவித்து பத்திரமாக வழி அனுப்பினாள். கர்ணன் ஏன் இதை எண்ணும்போதெல்லாம் கொந்தளித்தான் எனில் அவன் ஒரு சுயநலவாதி. பொதுநலத்தில் அக்கறை இல்லாதவன். அவனுக்கு தர்மத்தையும் சமூகத்தையும்விட, துரியோதனனும் அவனது நட்புமே பெரிதாகப்பட்டது.
கிருஷ்ணனது சிந்தனையே வேறாக இருந்தது. இவர்களிருவரும்தான் எனது தாய்-தந்தையரா? இவ்வுலகில் உள்ள ஆன்றோர் அனைவருமே எனக்கு தாய்-தந்தையர். என்னைவிட வயதில் சிறிய அனைவருமே எனது சகோதர-சகோதரிகள். இதுவே கண்ணனது எண்ணமாக இருந்தது. அவன் உலகோடு ஒன்றி அளவளாவி வந்தான். அவனது அன்பு எல்லையற்றது. உபநிஷதங்களில் வரும் பிரபல வரியான "பூர்ணமதஹ் பூர்ணமிதம்..." என்பது போல எல்லையற்ற அன்பு நிறைந்ததே அவனது வாழ்க்கை.
இதில் ஆச்சரியப்படுவதற்கான மற்றொரு விஷயம் என்னவென்றால் சிறிய பாலகனாக இருந்தபோதே கண்ணன் யாருடைய வழிகாட்டுதலும் இன்றி இந்த உலகளாவிய சிந்தனையை தானாகவே வளர்த்துக் கொண்டான்.
இன்னும் சொல்லப்போனால், சமூக நலனைப் பற்றின ஆழமான அக்கறை காரணமாக அவன் தனது படிப்பையோ வேலையையோகூட உயர்த்திக்கொள்ள பிரயத்தனப் படவில்லை. அவனது தகுதிக்குறிப்பை உயர்த்திக் கொள்வதிலெல்லாம் அவனுக்கு அக்கறை இல்லை.
ராமனுக்கு முறையான கல்வி கிட்டியது. ஆனால் கிருஷ்ணனோ இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கற்றுக்கொண்டான். கண்ணனிடத்தில் தொலைநோக்குப்பார்வை இருந்தது. அனைத்துக்கும் பின்னணியிலிருக்கும் தத்துவர்த்தங்களை அவன் நன்கு புரிந்து வைத்திருந்தான். பொது வாழ்வில் ஈடுபடும் ஒருவருக்கு நிபுணத்துவத்தைவிட தொலைநோக்கே தேவையான பண்பு. குறிப்பிட்ட ஒரு பாடத்தில் மட்டும் தேர்ந்து விளங்குபவர் ஒரு நல்ல ஆசிரியராக ஆகலாமே அன்றி அவரால் ஒரு சிறந்த தலைவராகவோ அல்லது மக்கள் பிரதிநிதியாகவோ ஆகிவிட முடியாது. அனைத்தையும் கிருஷ்ணன் அறுபத்து நான்கு நாட்களுக்குள் கற்றுத்தேர்ந்தான் என்று கூறுவதுண்டு. உண்மையில் அனைத்தையும் கற்றுத்தேர பல மாதங்கள் பிடிக்கலாம். எனினும் இவ்வாக்கியத்தின் உண்மைப் பொருள் கண்ணன் அனைவற்றுக்குள்ளும் பொதிந்துகிடக்கும் தத்துவார்த்தங்களை நன்றாய் புரிந்து வைத்திருந்தான் என்பதே. அவனுக்கு அவற்றின் புள்ளிவிவர குறிப்புக்கள் பற்றி எல்லாம் கவலை இல்லை. மனு சொல்கிறார்,
படிக்காதவர்களைவிட படித்தவர் சிறந்தவர்,
படித்தவரைவிட அதனை ஞாபகம் வைத்திருப்பவர் சிறந்தவர்,
ஞாபகம் வைத்திருப்பவரைவிட அதன் அர்த்தம் அறிந்து வைத்திருப்பவர் சிறந்தவர்,
அர்த்தம் அறிந்து வைத்திருப்பவரைவிட அதனைப் பயிற்சி செய்பவர் ஆகச்சிறந்தவர்.
अज्ञेभ्यो ग्रन्थिनः श्रेष्ठा
ग्रन्थिभ्यो धारिणो वराः।
धारिभ्यो ज्ञानिनः श्रेष्ठा
ज्ञानिभ्यो व्यवसायिनः॥
மனுஸ்ம்ருதி 12.103
ஒரு மக்கள் பிரதிநிதிக்கு பொது ஞானமே தேவை. அவன் சின்னஞ்சிறிய விவரங்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்கத் தேவை இல்லை; அவன் சாதிப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.
கிருஷ்ணனது பற்றின்மையும் சுயநலமின்மையும் அவனை பொது வாழ்வையும் தாண்டி உயர்த்திப் பிடிக்கிறது. 'பகவத்கீதை'யின் 'விபூதியோக' அத்தியாயத்தில் கண்ணன் தன்னை சிறப்பான அனைத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்கிறான். நல்லதோ, கெட்டதோ எதுவாயினும், எவை எல்லாம் உயர்வாக கருதப்படுகின்றனவோ அவை எல்லாவற்றோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். பொது வாழ்வில் ஈடுபடும் ஒருவர் நல்லவற்றையும், தீயவற்றையும் உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ள வேண்டும்; புனித நீரிலும் அவருக்கு நீந்தத் தெரிந்திருக்க வேண்டும், சாக்கடையையும் கடந்துசெல்லத் தெரிந்திருக்க வேண்டும். அதுவே கிருஷ்ணன் பின்பற்றிவந்த பாதையும்கூட.
ராமன் அனைவரிடத்தும் மரியாதையும், அன்பும் வைத்திருந்தாலும் அவன் யாருடனும் அன்னியோனியமாகப் பழகியதாகத் தெரியவில்லை. மக்களும் அவனிடத்தில் உரிமை கொண்டாடியதாகத் தெரியவில்லை. சொல்வன்மைமிக்க, சிவனது பேரொளியைப் பெற்றுவிளங்கிய ஹனுமானிடத்தில்கூட ராமன் நேராகப் பேசவில்லை என்று 'ஆடமோடிகலதே' என்கிற சாருகேசி ராக கீர்த்தனையில் தியாகராஜர் கூறுகிறார். ஹனுமானைப் பற்றி லட்சுமணனிடத்தில் புகழ்ந்து பேசியபின், ராமன் லட்சுமணனை ஹனுமானிடத்தில் பேசச் சொல்கிறார். ஆனால் கண்ணனோ அப்படிப்பட்டவனல்ல. அவன் அனைவரோடும் நட்பு பாராட்டுகிறான். இருப்பினும் எவ்வித பந்தத்துக்கும் கட்டுப்படாமல் இருக்கிறான். அவனுக்கு அனைவரைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். சாண்டீபனி முனிவரிடம் அவன் ரிக் வேதப் பயிற்சிக்கு சென்றான். குசேலன் சாம வேதத்தில் பயிற்சிபெற வந்திருந்தான். வெவ்வேறு வகுப்பறையில் இருப்பினும் இவ்விருவரும் நல்ல நண்பர்களாகப் பழகி வந்தனர். ஒரு சமூகப் பிரதிநிதியானவருக்கு சமூகத்திலுள்ள அனைவருடனும் பழகத் தெரிந்திருக்க வேண்டும்.
குறிப்பிட்ட இலக்கை நோக்கிப் பயணிக்கும் ஒரு சமூகத் தலைவனுக்கு மக்களை திரட்டி, அவர்களை அதைநோக்கி ஊக்குவிக்கத் தெரிந்திருக்கவும் வேண்டும். இது அத்தியாவசியமானது. குடும்ப வாழ்வில் ஊக்குவிப்பது என்பது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் ஒடுங்கிவிடுகிறது. உதாரணத்துக்கு பெற்றோர் தம் பிள்ளைகளை முதலில் சிறிது காலம்வரை கடினமாக உழைக்கும்படி ஊக்குவப்படுத்திவிட்டாலே போதுமானது. நெடுநாள்வரை அவர்களை ஊக்குவிக்கவேண்டிய தேவை எழுவதில்லை. ஆனால் ஒரு சமூகமோ இதுபோல இயங்குவதில்லை. குடும்ப இயக்கத்திற்கு செயற்கையாகப்படுவது, ஒரு சமூக இயக்கத்திற்கு அவசியத் தேவையாகிவிடுகிறது. கற்பனை மற்றும் கோஷங்கள் நிறைந்த பொது மேடைப் பேச்சுக்கள் வெற்றியளிக்கக்கூடும். ஆனால் இவற்றை குடும்ப வாழ்வில் பயன்படுத்துவது பொருந்திவராது. மேடைப் பேச்சுக்களில் சம்பிரதாயமாக பேசுவதுபோலல்லாமல், வீடுகளில் சாதாரண மொழிவழக்கே பழகப்பட்டு வருகின்றது.
ராமாயணத்தில் ராமன் எந்த ஒரு தனிப்பட்ட நபரையோ அல்லது சமூகத்தாரையோ ஊக்குவிப்பதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் லட்சுமணன்தான் ராமனை, “उत्साहो बलवान् आर्य नास्ति उत्साहात्परं बलम्” (கிஷ்கிந்தாகாண்டம் 1.121) எனக்கூறி ஊக்குவிக்கின்றான். ஆனால் கிருஷ்ணனோ பற்பல தருணங்களில் எழுச்சியூட்டும் வார்த்தைகளைப் பேசுகின்றான். பகவத்கீதையே இதற்கான சிறந்த உதாரணம் ஆகும்.
தன்னைசுற்றி நிலவிவரும் பிரச்சனைகளை தீர்த்துவைக்க கண்ணன் தன்னால் ஆனவரை பிரயத்தனப் படுகின்றான். ஜராசந்தனுக்கு எதிராக யாதவர்களை ஒன்றுதிரட்டியபின்பும் தோல்வியைத் தழுவுகிறான். ராமாயணத்திலோ, ராமன் அவ்வளவாகத் தோல்வியுற்றதாகத் தெரியவில்லை. சிவனுக்கோ தோல்வி என்பதே இருந்ததாகத் தெரியவில்லை. இதற்கான காரணம் எளிதானது. தனிப்பட்ட ஒரு நபர், தமது வரையறைகளை நன்குணர்ந்து அதற்குட்பட்டே செயல்படுகின்றார். அதனால் விளைவுகளையும் ஓரளவுக்கு அவரால் ஊகித்து நடக்க முடிகிறது. குடும்பத்தில் இவ்வரையறையை நிர்ணயிப்பது ஓரளவுக்கு கடினமாகிவிடுகிறது. ஆனால், சமூகத்திலோ இது இன்னும் சிக்கலகிவிடுகிறது. உதாரணத்துக்கு ஒரு தனி மனிதனால் ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்று வீடுகள்வரையோ எளிதாகக் கட்டிவிட முடியும். அதில் எவ்வளவு தப்பு நிகழ்ந்துவிடப் போகிறது? ஆனால் ஒரு ஒப்பந்ததாரரோ நூறு அல்லது ஆயிரம் வளாகங்களைக் கட்டுகிறார். தவறு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதில் அதிகம் உள்ளது. எப்போதுமே பெரிய அளவிலான இயக்கங்களில் தவறு நேர்ந்துவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.
ஜராசந்தனை முதல்முறை கண்ணன் அடித்துத் துரத்தியபின் அவன் இரண்டாம் முறையும் திரும்ப வந்தான். இரண்டாம் முறை துரத்தப்பட்டபின் மீண்டும் மூன்றாவது முறையாக ஜராசந்தன் கிருஷ்ணனை தாக்க வந்தான். இது இனி வழிக்காகாது எனகண்ணன் உணர்ந்துகொண்டான். மேலும் யாதவர்களும் கண்ணனை நோக்கி, "உன்னால்தான் ஜராசந்தன் எங்களைத் தாக்குகிறான்", எனக் கூறி முறையிட்டனர். பொது வாழ்வில் ஈடுபடும் ஒரு தலைவனுக்கு மக்களது எண்ண ஓட்டம் நன்கு புலப்பட வேண்டும். இனியும் ஜராசந்தனது அட்டூழியங்களை தம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மக்கள் முனகத் தொடங்கியதும், கண்ணன் தானே முன்வந்து நாட்டைவிட்டு வெளியேறினான். அதற்குப்பின் மீண்டும் ஜராசந்தனால் தாக்கப்பட்ட யாதவர்கள் கண்ணனிடம் திரும்ப அடைக்கலம் புகுந்தார்கள். கண்ணன் மறுபேச்சு பேசாமல் அவர்களுக்கு உதவி புரிந்தான். சமூகத்தார் நிந்திப்பதை ஒரு தலைவன் பொருட்படுத்தக்கூடாது. அதே நேரத்தில், அவர்கள் உதவியைநாடி அவனிடத்தில் வந்துவிட்டால் பக்கபலமாக நின்று அவர்களுக்கு தோள்கொடுக்க வேண்டும். இது எவ்வளவு கடனமானது என்பதை உணர்ந்து பார்த்தால்தான் தெரியும்!
கிருஷ்ணன் திரும்பவும் ஜராசந்தனை எதிர்க்க யாதவர்படையினை ஒன்று திரட்டினான். அவர்கள் ஜராசந்தனை விரட்டி அடித்தார்கள். ஆனால், ஜராசந்தன்போன்ற குரூரர்கள் எளிதில் அடங்கிவிட மாட்டார்கள் என்பது கிருஷ்ணனுக்கு வெட்டவெளிச்சமாய் தெரியும். ஜராசந்தன்போன்ற கழுகுகளுக்குபோரில் ஈடுபட்டு மக்களைத் துன்புறுத்துவதிலேயே அதிக நாட்டம் என்பதனை கண்ணன் நன்கறிவான். மேற்கு திசையிலிருந்து யாதவர்களைத் தாக்கிவந்த காலயவனன் என்பவன் ஜராசந்தனனது கூட்டாளி. காலயவனன் பாதி-இந்தியன், பாதி-கிரேக்கன் (அவன் யாதவ புரோகிதனுக்கும், யவனப் பெண்ணுக்கும் பிறந்தவன் என்பதுபோன்ற கதைகள் உள்ளன) என்றும், அவன் காந்தார தேசத்தைக் கடந்த ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுவந்தான் என்றும் கூறப்படுகிறது.
யாதவர்களுக்கோ போரில் ஈடுபட இச்சையில்லை. அவர்களுக்கு அமைதியான சமுதாய வளர்ச்சியே தேவையாய் இருந்தது. அதனால் கலாச்சார ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அவர்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக கிருஷ்ணன் அவர்களை துவராவதிக்கு சென்றுவிடுமாறு கூறுகிறான். பல இளைய யாதவர்களை கண்ணனைக் கோழை எனக் குறை கூறுகிறார்கள். எவ்வளவுதான் ஏச்சுப்பேச்சுக்களைக் கேட்கவேண்டி வந்தாலும், மக்களுக்கு உதவியாற்றுவதிலேயே கண்ணனது மனம் சென்றது. யமுனைஆற்றங்கரையிலிருந்து யாதவர்களை எங்கோ மேற்கு எல்லையில் இருந்த துவராவதிக்கு கண்ணன் இடம்பெயர்த்தான். என்ன ஒரு மகத்தான வெளியேற்றமிது! எவ்வளவு திரளான, மாறுபட்ட கருத்துக்களைக்கொண்ட மக்கள் கூட்டம்! இருப்பினும் கிருஷ்ணன் முன்னின்று இச்செயலை செய்தான். மக்களுக்கு உதவுவதே அவனுக்கு முக்கியமாகப்பட்டது.
குடும்பத்தில் ஏற்கனவே வழக்கத்திலுள்ள பண்பாட்டு மரபுகளைப் பின்பற்றினாலே போதுமானது. அதையே ராமன் திறம்பட செய்தான். கிருஷ்ணனோ பல புதிய மரபுகளை உட்புகுத்தினான். ஒரு புது யுகத்தை நோக்கி அவன் பயணித்தான். பழைய குதிரையிலேயே பயணித்துக் கொண்டிருக்காமல், மாறிவரும் சமூக சூழலுக்கேற்ப புதுப்புது வரையறைகளை வகுத்துக் காட்டினான்.
யாதவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி துவராவதிக்குக் கூட்டிச்சென்று நல்லாட்சி புரிந்து நிலைபெறச் செய்தான். இருப்பினும், அவர்கள் அவனுக்கேற்ப நடந்து கொண்டனரா? இல்லை. ஒருவரை ஒருவர் வீழ்த்திக் கொண்டார்கள். கிருஷ்ணனுக்கு இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் கவலை இல்லை.
பாண்டவர்கள் இந்திரபிரஸ்தம் கட்டுவதற்கென பல வளங்களையும்,
பொருட்களையும் கிருஷ்ணன் அனுப்பி வைத்தான். யாதவர்களுக்கு அவ்வளவு எளிதில் அவர்களது பொக்கிஷங்களை பிரிய மனம் வந்திருக்குமா என்ன? கண்ணனே அவர்களுக்கு சமாதானம் கூறி இருக்க வேண்டும். ஆனால் அதனை தறம்பட செய்துகாட்டினான். சாந்தமாகவும், புத்திசாலித்தனமாகவும் பேசினான்; அச்சுறுத்தி, ஆசைகாட்டி, ஆறுதலளித்து அவர்களை தன் வழிக்கு கொண்டு வந்தான். யார் இதனை சாதித்திருக்க முடியும்? கட்டாயம் இதனை ஒரு நேர்மைவாதியால் சாதித்திருக்கவே முடியாது. கோணலான புத்தியுள்ளவனாயினும், அவன் அனைவரது நலனுக்காகவும் இதை செய்ய வாய்ப்புள்ளதா? அதற்கான வழிதான் என்ன? இதற்காகவே இங்கு கிருஷ்ணன் தேவைப்படுகிறான். தைரியமான, வலுவான, படித்த, சாதுவான, சுயநலமற்ற, பற்றற்ற ஒருவனால் மட்டுமே இதனை செய்துகாட்ட முடியும். அப்பேற்பட்டவன் எது செய்தாலும், அது சரியாகவே அமையும். தர்மத்தின் பாதையில் செல்கையில் வழிதவறிப்போக வாய்ப்பே இல்லை.
தொடரும்...
இந்த கட்டுரைத் தொடர் ‘ஷதாவதானி’ டாக்டர் ஆர். கணேஷ் அவர்கள் 2009இல் பெங்களூருவில் உள்ள கோகலே பொது விவகாரங்கள் நிறுவனத்தில் (Gokhale Institute of Public Affairs) நிகழ்த்திய கன்னட விரிவுரைகளின் ஹரி இரவிக்குமாரது ஆங்கிலத் தழுவலின் அடிப்படையில் எழுதப்பட்டது.
இதில் இடம்பெற்றுள்ள இராமாயணக் குறிப்புகள் அனைத்தும் வித்வான் ரங்கநாத ஷர்மாவினது எட்டு தொகுதிகளாலான அவ்விதிகாசத்தின் கன்னட மொழிபெயர்ப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளன (இது பெங்களூருவிலுள்ள ராமாயண பிரகாஷான ஸமிதியின் வெளியீடு).