சிவன் தனது ஒரு கையில் உடுக்கையை ஏந்தி நிற்கிறான். லயத்தின் தலைவன் லய வாத்தியம் வாசிக்கிறான். சமஸ்கிருதத்தின் அடிப்படை ஆதாரமான ‘மஹேஷ்வர-ஸூத்திரங்கள்’ சிவன் தனது உடுக்கையைத் தட்டுகையிலேயே ஏற்பட்டன என்று நம்பப்படுகிறது. சிவன் தனது உடுக்கையை ஒலிக்கச் செய்கையிலே, தமிழ் ஒரு பக்கமும் சமஸ்கிருதம் மற்றொரு பக்கமுமாக வெளிவந்தன என்ற அழகான ஒரு கருத்தினைத் தமிழர்கள் குறிப்பிடுவார்கள். உடுக்கையைக்கொண்டு சிவன் வெளியில் ஒலி எழுப்புகிறார், எனினும் அவர் உள்ளத்திலோ என்றும் அமைதி நிலவுகிறது – உண்மையில் சிவனது உடுக்கை ஒரு விசித்திரமான குறியீடாகும். கன்னட எழுத்தாளரான திரு டி. வி. குண்டப்பா அவர்கள் தமது ‘மங்குதிம்மன கக்க’ எனும் புத்தகத்தின் இவ்வரிகள்தான் மனதுக்கு வருகின்றது:
ಸ್ವಸ್ಥತೆಯ ಕದಲಿಸದ ಜಗದಾಸ್ಥೆಯೊಂದು ಗುಣ
ಆಸ್ಥೆಯನು ಕುಂದಿಸದ ತಾಟಸ್ಥ್ಯವೊಂದು ।
ನಷ್ಟಲಾಭಂಗಳಲಿ ಲಘುಹಾಸ್ಯನಯವೊಂದು
ಸ್ವಸ್ತಿಗಾವಶ್ಯಕವೊ – ಮಂಕುತಿಮ್ಮ ॥ 723
[உலகில் போராட்டமற்ற ஈடுபாடு
இரக்கம் குன்றாவமைதி
லாப-நட்டம் கண்டு மென்புன்முருவல்
இம்மூன்றே அமைதிக்கான அடித்தளங்கள்]
சிவனது மற்றொரு கையில் வில் அல்லது திரிசூலத்தை ஏந்தி நிற்பதால் நாம் அவனை ‘பினாகபாணி’ என்றும் ‘ஷூலின்’ என்றும் வழங்குகிறோம். ஓங்காரமே சிவனின் வில்லான பினாகம், அதனால் நாம் அதனை ‘ப்ரணவ-தனுசு’ என்றும் அழைக்கிறோம். ஓம் என்பது ‘அவஸ்தா-த்ரயங்களை’க் குறிக்கிறது என்று உபநிஷதங்கள் எடுத்துரைக்கின்றன. இம்மூன்று நிலைகளையும் கடந்து நிற்கும் சிவன் அவற்றுக்கு சாட்சியாக மாத்திரமே விளங்குகிறான். திரிசூலமோ உடல் நிலை, உணர்ச்சி நிலை மற்றும் ஆத்ம நிலை ஆகிற மூன்று நிலைகளிலும் ஏற்படுகிற அவஸ்தைகளை நிறுத்துவதற்கான குறியீடாகும். தாமாகவே தேர்வு செய்த வாழ்க்கை வாழாது, வாழ்வை அதன் போக்கிலேயே விட்டுவிடுவதால் சிவனால் அனைத்துவித துயரங்களையும் எளிதில் கடந்துவிட முடிகிறது.
சிவன் தனது மூன்றாம் கையில் பிச்சை பாத்திரம் ஏந்தி நிற்கிறான். ஜகத்துக்கே படி அளக்கும் ஈஸ்வரன் பிச்சை எடுக்கிறான். என்ன ஒரு விசித்திரமான கடவுள்! ஏனெனில், சிவன் ஒருபோதும் ‘அனைத்தும் தனதே’ என்று எண்ணுவதில்லை. அவன் உலக ஐஸ்வர்யங்களில் பற்றற்று விளங்குகிறான். இவ்வுலகிற்கு தனது செல்வங்கள் அனைத்தையும் வழங்கிவிட்டு, தன் பங்கைப் பெறுவதற்காக கை ஏந்தி நிற்கிறான். அவன் உடைமை உணர்வற்ற வளமைக்கான குறியீடாவான். அவனே மாபெரும் ‘தானி’ ஆவான்.
சிவன் தனது நான்காம் கையால் ‘சின்-முத்திரை’ காட்டுகிறான். இம்முத்திரையில் கட்டை விரல் ஆட்காட்டி விரலைத் தொட்டுக்கொண்டும், மீதமுள்ள விரல்கள் மேல்நோக்கி நீட்டப்பட்டும் காட்சி அளிக்கின்றன. ‘சின்-முத்திரை’ ஞானத்தின் குறியீடு. முத்திரை தியானத்தின் குறியீடெனில், ‘ஹஸ்தம்’ தொடர்பாடலின் குறியீடு. பரத நாட்டிய சாஸ்திரத்தின்படி ‘சின்-முத்திரை’ ‘ஹம்ஸ-ஹஸ்தத்தின்’ குறியீடு. பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் திறமை பெற்றதால், ஹம்ஸப் பறவை (அன்னப்பறவை) விவேகத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது.
அவனது இடுப்பைச் சுற்றி யானைத் தோலையும், புலித் தோலையும் காண்கிறோமல்லவா? நமக்குள்ள பொருட்களின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றினை ‘மதத்தின்’ சின்னமான யானைக் குறிக்கிறது. நாம் ஆசைப்படும் பொருட்கள் நமக்குக் கிடைக்காமல் போகும்போது நமக்கு ஏற்படுகிற ‘க்ரோதத்தின்’ சின்னமே புலி. பற்று, கோபம் ஆகிய இரண்டையும் வென்ற சிவன், தனது வெற்றியின் அடையாளமாய் அவற்றையே தனது அந்தரங்க அவயவங்களை மூடி மறைப்பதற்குப் பயன்படுத்துகிறான். தீயதை வெல்வதே நமக்கான தலைசிறந்த ஆபரணமல்லவா?
அவன் இடுகாட்டு சாம்பலை தன் உடலில் பூசிக்கொள்கிறான், ஏனெனில் இதுவே இறுதியில் எஞ்சி நிற்கப்போகிறது. இனி, மேலும் குறைக்க வழியில்லை. அறியாமை சுட்டெரிக்கப்பட்டு முற்றிலும் கரைந்தபின் எஞ்சி நிற்கிற ஞானத்திற்கான அடையாளமே இந்த இடுகாட்டுச் சாம்பல்.
சிவன் நந்தி வாகனன். குதிரை போல வேகம் இல்லாவிடினும் இது ஒரு நிலையான வாகனமாகும். எருதான நந்தி தர்மத்தின் சின்னம். ஞானத்திற்கான வாகனம் தர்மமாகத்தானே இருக்க முடியும். ஞான-சொரூபியான சிவன் தேர்ந்தெடுக்கிற வாகனம் தர்ம-சொரூபியான நந்தியைத் தவிர வேரேதும் இருக்கவும் முடியுமோ? உண்மையில் சிவன் தர்மம், அதர்மம் ஆகிய இரு நிலைகளைக் கடந்துவிட்ட போதிலும், உலக நன்மைக்கருதி அவன் தர்மத்தையே தனது வாகனமாகத் தேர்ந்தெடுக்கிறான்.
சிவன் ‘ஸ்திரமானவன்’, ஆனால் அவன் ‘நடராஜனும்’கூட. நிலையாகவும் நிற்கிறான், ஆடவும் செய்கிறான். தானாகவும் தெரிகிறான், நடிக்கவும் செய்கிறான். என்னவொரு முரண்? எவ்வாறு ஒருவனால் நிலையாக நின்று ஆடவும் முடிகிறது? ஒருவனது சித்தம் தெளிந்தபின், அவன் குதித்தாலோ, ஆடினாலோ, நடித்தாலோ அது ஒரு பொருட்டாகாது. அவனது அனைத்து செயல்களும் அவன் அந்தராத்மாவுடன் லயித்துவிடுகிறது. சிவன் நாட்டியத் தலைவன் மட்டுமல்ல. அவன் ஒரு சேனைத் தலைவனும்கூட. நாட்டியக்காரன் எவ்வாறு போர்வீரனாக முடியும்? போரிடுகையில், கண்ணுக்கெதிரில் நிற்கிற பகைவர்களை எவ்வித தயக்கமுமின்றி எதிர்கொள்கிறான். போரற்று அமைதி நிலவுகையில், தனக்குள்ளிருக்கும் கண்ணுக்குத் தெரியாத பகைவனை எதிர்கொள்கிறான். உள்ளிருக்கும் அப்பகைவனை வென்ற காரணத்தால் நடனம் ஆடுகிறான். அவன் தனது ‘பாவங்களையே’ ‘ரசானுபாவங்களாய்’ வடித்துக் காட்டுகிறான். உணர்ச்சிப் பெருக்குகளால் சலனமடையாத அவன், அவற்றை ஒரு மாபெரும் நாடகமாகவே கருதி களிப்புறுகிறான்.
சிவன் இமயமலைவாசி. பொதுவாக நாம் மலை ஏறியபின் சிறிது நேரத்திற்கெல்லாம் கீழிரங்கிவர எண்ணுவோம், ஏனெனில் பிராணவாயு மலை உச்சியில் குறைவாகவே உள்ளது. ஆனால் சிவனால் இமயமலை உச்சியிலேயே நித்யவாசம் செய்ய முடிகிறது. எப்போதும் சாந்தமானவன். என்றென்றும் உச்சநிலை வகிக்கக் கூடியவன்.
அவனது உற்றார், உறவினர்கள் யாவர்? தனது உடலின் ஒரு பாதியை அவனது மனைவி எடுத்துக்கொண்டுவிட்டதால் ‘அர்தநாரீஸ்வரனாக’க் காட்சி அளிக்கிறான். அவனது நண்பனான விஷ்ணு தனது உடலின் மற்றொரு பாதியை எடுத்துக்கொண்டுவிட்டதால் ‘ஹரிஹரன்’ ஆகிறான். அதனால் சிவனுக்கு உடலே இல்லை! மனைவியை நேசிக்கும் அதே நேரத்தில், தனது நண்பர்களை விட்டுக்கொடுக்க அவனுக்கு மனம் வரவில்லை. நண்பர்களை நேசிக்கும் அதே நேரத்தில், தனது குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கிற எண்ணமும் அவனுக்கில்லை. மனைவிக்கோ, நண்பனுக்கோ தனது உடலைத் தவிர அவனிடத்தில் கொடுக்க வேறென்ன இருக்கிறது? அவனும் இதையே செய்துள்ளான். இருப்பினும் அவன் ‘சூனியன்’ அல்ல. மாறாக அவன் ஒரு ‘பூரணன்’. சூன்யத்தில் பூரணத்துவம் காண்கிறான்.
சிவனின் பத்தினி பார்வதி. ‘சதி’யாக முற்பிறவியில் சிவனை மணந்தாள். பிடிவாதம் பிடித்து ‘தக்ஷ-யக்ஞ’த்திற்கு சென்ற அவளுடன் சிவன் உடன் செல்லவில்லை. யக்ஞத்தில் அவள் பலியானதை எண்ணி சிவன் மனம் குமுறினான். பழியும் வாங்கினான். அவள் மீண்டும் பிறவி எடுக்க காத்துக் கிடந்தான். உடலழகைக் காட்டி சிவனை மயக்க நினைத்த பார்வதியை சிவன் அலட்சியம் செய்தான். கொழுந்து விட்டெரியும் ஆசையை எரித்தும் விட்டான். இருப்பினும், கடுந்தவம் புரிந்த பார்வதியைக் கண்டு குதூகலித்தான். தவத்தால் அவள் தன்னை வென்றுவிட்டாள் என்றும் கூறினான். மனைவியின் பிடிவாதம் மற்றும் அகந்தையைப் பொருட்படுத்தாத சிவன், அவளது நல்நடத்தையால் கவரப்பட்டான். சிவனை அவளிடமிருந்து பிரிக்க இயலாது. சக்தி இல்லாமல், சிவனால் இம்மியும் அசைய முடியாது என்று ஆதி சங்கரர் கூறுகிறார்.
சிவனது புத்திரன் ‘ஸ்கந்தன்’ என்றும் போற்றப்படுகிற ‘சுப்ரமணியன்’ ஆவான். தனக்கெல்லாம் தெரியும் என்றெண்ணுகிற பல பெற்றோர்களைப் போலல்லாமல், உண்மையில் அறிந்துகொள்கிற ஆர்வத்துடன் சிவன், ஸ்கந்தனை அணுகினான். சிவனது மற்றொரு புத்திரன் ‘கணபதி’ என்றும் ‘விக்னேஷ்வரன்’ என்றும் போற்றப்படுகிற ‘கணேசன்’ ஆவான். ‘அக்ர-பூஜை’யில் என்றும் முதல் மரியாதை அவனுக்கே. தந்தையை விஞ்சிய தனையன். சிவன் இதனால் பெருந்துக்கமோ பேரானந்தமோ கொள்வதில்லை. தனது மனைவி மக்களின் மகத்துவத்தை முற்றிலுமாக அவன் ஏற்றுக் கொள்கிறான்.
கணேசனின் வாகனம் எலி. சிவன் விரும்பி சூடிக்கொள்கிற பாம்புகளின் ஆகாரம். குமரனின் வாகனமோ பாம்பினை ஆகாரமாகக் கொண்ட மயில். சிவனின் வாகனமான எருது, பார்வதியின் வாகனமான புலிக்கு ஏற்ற ஆகாரம். இவ்வெல்லாவற்றையும் கடந்து, சிவனின் குடும்பத்தில் என்றும் அமைதி நிலவுகிறது. இயற்கையுடன் இசைந்து நிற்கிறது. இங்குங்கூட ஒரு பிரம்மாண்டமான உணவு சங்கிலியைக் காண்கிறோம், இருப்பினும் எந்த ஓர் இனமும் இங்கு முற்றிலும் அகற்றப்படுவதில்லை (குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்கள் தவிர்த்து).
உயிர்களின் தலைவனான ‘பசுபதி’ என்றழைக்கப்படும் சிவனிடமிருந்து இங்கு நாம் கற்க வேண்டிய பாடம் யாதெனில், சூழலியல் சமன்பாட்டிற்கு நாம் நமது நுகர்வினைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. இச்சைகளை அடக்கி ஆளத் தெரிந்தால் இது சாத்தியப்படும். சிவனின் இந்த முரண்பாடான இயல்பினை ‘மாலவிகாக்னிமித்ரம்’ எனும் நாடகத்தின் வணக்க வழிபாட்டில் காளிதாசன் அழகாய் எடுத்துக் காட்டுகிறார்:
एकैश्वर्ये स्थितोऽपि प्रणतबहुफले यः स्वयं कृत्तिवासाः
कान्तासंमिश्रदेहोऽप्यविषयमनसां यः परस्ताद्यतीनाम् ।
अष्टाभिर्यस्य कृत्स्नं जगदपि तनुभिर्बिभ्रतो नाभिमानः
सन्मार्गालोकनाय व्यपनयतु स वस्तामसीं वृत्तिमीशः ॥
வளங்களை வாரித்தரும் சிவன், மிருகத் தோலை தரித்து நிற்கிறான்!
பத்தினிக்கு உடலின் சரிபாதியை தந்துவிட்டு, உலக நாட்டமற்று பற்றற்ற துறவியாய் நிற்கிறான்!
அஷ்ட சக்திகளால் உலகை ஆட்டிப்படைக்கும் அவன் எவ்வித அகந்தையுமற்றிருக்கிறான்!
என் அக இருளை அகற்றி, இவ்வுலக நாயகன் என்னை சன்மார்க்கத்தில் இட்டுச்செல்லட்டும்
(‘அபிக்ஞான-சாகுந்தலம்’ எனும் நாடகத்தின் ஆரம்ப வரிகளில் சிவனின் அஷ்ட சக்திகளை காளிதாசன் எடுத்துக் கூறுகிறார்.)
உண்மையில் சொர்க்கம், பூலோகம், நரகம் என்று நாம் பெயர்கொண்டழைக்கும் அத்தனையும் நமக்குள்ளேயே பொதிந்து கிடக்கின்றன. ஆனந்தமே நமது சொர்க்கமன்றோ? நமது பொறுமையே பூலோகத்தின் சின்னமன்றோ? நமது துக்கங்களும், வலிகளுமே நமது நரகங்களன்றோ? சிவனின் இப்பல பரிமாணங்களையும் காளிதாசன் தனது ‘குமாரசம்பவ’த்தில் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். ஆசைகளின் உருவகமான மன்மதன் தவறான இடத்தில், தவறான தருணத்தில் வரும்போது அவனை சிவன் எரித்துவிடுகிறான். அவனே சரியான இடத்திலும், தருணத்திலும் வரும்போது புத்துணர்வு பெறச் செய்கிறான். முடிவில் உண்மையை உணர்ந்து, தனது இச்சைகளை உயிர்ப்பிக்கிறான். அவனொன்றும் அடிப்படை உணர்வுகளுக்கு எதிரானவன் அல்ல. மாறாக, அவன் அவற்றைக் கடந்து சென்றுவிட்டான்.
பசி, தாகம், பயம், ஆசை எனும் நான்கு உணர்வுகளையுமே நமது பண்டைய சமுதாயத்தினர் மனித இனத்தோடு தொடர்புபடுத்தினர். இவ்வுணர்வுகள் சிவனிடத்திலும் காணப்பட்டன. ஆனால் அவன் அவற்றையெல்லாம் கடந்துவிட்டவன். இவ்வடிப்படை உணர்வுகளுக்கு அவன் வழிவகை செய்துகொள்கிற போதிலும், ஒரு நாளும் அவன் ‘ருதம்’ எனும் அண்ட ஒழுங்கிற்கோ, ‘தர்ம’த்திற்கோ, ‘சத்திய’த்திற்கோ புரம்பாக நடந்துகொள்வதில்லை. அனைத்து ஜீவராசிகளும் இவ்வடிப்படை உணர்வுகளையே ஆதாரமாகக் கொண்டு விளங்குவதால், இவற்றைப் புரக்கணிப்பதில் அர்த்தமில்லை. ஆசை இல்லையேல் படைப்பில்லை. படைப்பு நின்றுவிட்டால் இவ்வுலக இயக்கமும் நின்றுவிடும். அதனால், ‘ருதம்-தர்மம்-சத்தியம்’ இவற்றிற்கிணங்கியே ஆசைகளை வரையறுத்துக் கொள்ள வேண்டும் என உபநிஷதங்கள் எடுத்துரைக்கின்றன.
சிவன் ‘ஞான-சொரூபி’ மட்டுமல்ல. மனம் மற்றும் உடலின் துன்பங்களை அவன் குணப்படுத்துவதால் அவனை ‘வைத்தியநாதன்’ என்றும் வழங்குவதுண்டு. அவனே பூரண புருஷன். அவனே நமது அடைக்கலம்.
தொடரும்...
இந்த கட்டுரைத் தொடர் ‘ஷதாவதானி’ டாக்டர் ஆர். கணேஷ் அவர்கள் 2009இல் பெங்களூருவில் உள்ள கோகலே பொது விவகாரங்கள் நிறுவனத்தில் (Gokhale Institute of Public Affairs) நிகழ்த்திய கன்னட விரிவுரைகளின் ஹரி இரவிக்குமாரது ஆங்கிலத் தழுவலின் அடிப்படையில் எழுதப்பட்டது.
இதில் இடம்பெற்றுள்ள இராமாயணக் குறிப்புகள் அனைத்தும் வித்வான் ரங்கநாத ஷர்மாவினது எட்டு தொகுதிகளாலான அவ்விதிகாசத்தின் கன்னட மொழிபெயர்ப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளன (இது பெங்களூருவிலுள்ள ராமாயண பிரகாஷான ஸமிதியின் வெளியீடு).
டாக்டர் வி. விஜயலக்ஷ்மி அவர்களது விரிவான கருத்தாய்வுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.