பொது வாழ்க்கை பல முரண்பாடுகள் நிரம்பியது. தன்னைப்பற்றி பிறர் என்ன கூறுகிறார்கள் என்பதை லட்சியம் செய்யத் தேவையில்லை. இருப்பினும் தன் மேல் சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தே ஆக வேண்டும். ஏனெனில் நற்பெயர்தானே பொது வாழ்க்கைக்கான அஸ்திவாரம். கிருஷ்ணனது வாழ்வில் ‘சியமந்தகமணி’ அத்தியாயமே இதற்கான சிறந்த உதாரணம். அதை அணிந்துச் சென்ற சத்ரஜித்தின் சகோதரன் இறந்து கிடந்தான். அதற்காக திருடன், கொலைகாரன் என்று கண்ணன்மீது பழி சுமத்தினான் சத்ரஜித். உடனே கண்ணன், இன்னும் இருபத்தோரு நாட்களில் தான் அந்த நகையைக் கண்டுபிடிக்காவிட்டால் தான் மீண்டும் துவாரகைக்குத் திரும்பி வரப்போவதில்லை என சபதம் செய்தான். ஒரு தேர்ந்த துப்பறிவாளன் அதனைத் தேடிக் கண்டுபிடித்தான். இதற்காக முதலில் தேர்த் தடங்களின் பின்பற்றி, பின் சிங்கத்தின் கால்தடங்களைப் பின்தொடர்ந்து, அதன்பின் ஒரு சிங்கத்தின் இறந்த சடலத்தைக் கண்டு, அதற்கப்பால் ஒரு கரடியின் கால்தடங்களைப் பின்தொடர்ந்து நேரே ஜாம்பவானின் குகைக்குள் பிரவேசித்தான். நகையை அங்கிருந்து மீட்டெடுத்து அதனை சத்ரஜித்திடம் ஒப்படைத்தான். சத்ரஜித் அவனை மன்னித்துவிடுமாறு கேட்டுக்கொண்டு, கண்ணனே அந்த நகையை வைத்துக்கொள்ளலாம் எனக் கூறினான். கண்ணன் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டான். கண்ணன், “நான் இந்த நகையைப் பெறுவதற்காகத்தான் இவ்வாறு செய்தேன் என்றாகிவிடும். எனக்கு அது தேவையில்லை. நகையை நீயே வைத்துக்கொள்”, என்று கூறிவிட்டான். நகையின் மதிப்பைப் பற்றியெல்லாம் அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
நெடுநாட்களுக்குப்பின் அக்ரூரர் ‘சியமந்தகமணி’யை எடுத்துக்கொண்டு யாத்திரைக்கு சென்றுவிட்டார். மீண்டும் அதனை கண்ணன்தான் திருடினன் என அவன்மீது பழி சுமத்தப்பட்டது. அக்ரூரர் இருந்த காசிக்குச் சென்று, அது அவரிடம்தான் உள்ளது என்பதை உலகம் அறிய எடுத்துக்காட்டச் சொன்னான் கண்ணன். அக்ரூரரும் அவ்வாறே செய்தார். இவ்வாறு இரண்டாம் முறை தன் மீது ஏற்பட்ட களங்கத்தையும் துடைத்தெறிந்தான் கண்ணன். அந்தளவுக்கு தன் மீது சுமத்தப்பட்ட களங்கங்களை உடனுக்குடன் களைந்தெறிந்துவிட வேண்டும் என்பதில் கண்ணன் முனைப்பு காட்டினான். ஒரு சிறந்த அரசியல்வாதிக்கு இத்தகுதி இன்றியமையாதது. தனது பலத்தை எளிதில் உலகிற்குப் பறைசாற்றிவிடலாம், ஆனால் தனது பற்றின்மையைப் பறைசாற்றுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
கண்ணனின் வாழ்வில் மற்றொரு சுவாரசியமான அத்தியாயம் ராஜசூய யாகத்தின் அக்ர பூஜையை கண்ணனுக்கே முதலில் வழங்கியாக வேண்டும் என பீஷ்மர் அறிவித்தபோது நடந்தது. சிசுபாலன் இதனை எதிர்த்துத் தலைகால் புரியாமல் கிருஷ்ணனைத் திட்டித் தீர்த்தான். கண்ணனோ அவன் நிந்தனையை நிறுத்துமாறு சாந்தமாகக் கூறினான். இருப்பினும் சிசுபாலன் எல்லைமீறிப் போனதும் ஒரு க்ஷணங்கூடத் தாமதிக்காமல் அனைவரின் மத்தியிலும் அவனைக் கொன்று வீழ்த்தினான் கண்ணன். ஓர் அரசியல்வாதிக்கு பொறுமை அவசியம் தேவை என்றாலுங்கூட தொல்லை தருவோரைக் களைந்தெறியவும் தெரிந்திருக்க வேண்டும்.
இவ்வத்தியாயத்தை உற்று நோக்கையில் நமக்கு இன்னொரு உண்மை புலப்படும். சிசுபாலன் கண்ணனைத் தாறுமாறாகத் திட்டித் தீர்த்தாலும், ஓர் இடத்தில்கூட அவனை பெண்பித்தன் என்றோ பெண்களை வசியம் செய்பவன் என்றோ குறை கூறவில்லை. கண்ணன் செய்யாத தவறைக்கூட செய்ததாகக் கூறுகிறவன் சிசுபாலன். அப்படி இருக்க, கண்ணன் பெண்களிடத்தில் தகாதவிதத்தில் பழகி இருந்தால் அதனை அவன் உடனே சுற்றிக்காட்டி இருப்பான். ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை. அக்கால வழக்கத்துக்கிணங்க கிருஷ்ணனுக்கு பல மனைவிகள் இருந்தனர். ஆனால் அது அவனது புகழைக் குலைத்ததாக ஒன்றும் தெரியவில்லை.
யக்ஞத்தை அழிக்க சிசுபாலன் முற்படுகையில், கிருஷ்ணன் அவனது தலையைக் கிள்ளி எறிந்தான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த துரியோதனன் போன்றோருக்கு அச்சம் உண்டானது. ஓர் அரசியல்வாதிக்கு சரியான நேரத்தில் சரியான விதத்தில் நிலைமையைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
அர்ஜுனனும், துரியோதனனும் ஒரே நேரத்தில் அவனிடம் உதவிகேட்டு வருகையில், எவ்வளவு சாமர்த்தியமாக நிலைமையைக் கையாண்டான் கிருஷ்ணன்! அர்ஜுனனும், துரியோதனனும் மகாபாரதப்போரில் எதிரெதிர் அணியில் இடம் பெறுகின்றனர். உதவிகேட்டு வருகையிலே, துரியோதனன் கண்ணனின் தலைமாட்டிலும், அர்ஜுனன் கண்ணனின் கால்மாட்டிலும் நின்றுகொண்டு கண்ணன் விழித்துக்கொள்வதற்காகக் காத்திருக்கிறார்கள். கண்ணன் எழுந்தவுடன் முதலில் அர்ஜுனனையேக் காண்கிறான். போரில் அவன் யார் பக்கம் என்பது இங்கே ஒருமாதிரி தெரிந்துவிடுகிறது. இருப்பினும் அவன் அவ்விருவருக்குமே உதவி செய்வதாகக் கூறுகிறான். உதவிகேட்டு வந்தவர்களை ஒரு நாளும் புறக்கணித்துவிடக்கூடாது என்பதும் ஒரு சிறந்த அரசியல்வாதிக்கான அடையாளம்.
யாதவர்களில் ஒரு சிலர் கிருஷ்ணனுக்கு எதிரானவர்கள் என்பதை அவன் நன்கறிவான். சிலர் பலராமனுக்கும், இன்னும் சிலர் துரியோனனுக்கும் ஆதரவளித்து வந்தனர். அதனால் அவர்கள் அனைவரையும் கிருதவர்மனின் கீழ் எதிரணியில் இடம்பெறுமாறு செய்தான் கண்ணன். உள்ளிருந்து குழப்பம் விளைவிப்பதைவிட, இவர்கள் எல்லோரும் எதிரணியில் இடம்பெறுவதே நலம் என்றெண்ணினான். இதனை நாம் வியூகம் என்பதா விசால மனம் என்பதா? இரண்டும் கலந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்தையும் தாங்கும் மனவலிமை கிருஷ்ணனிடம் இருந்தது என்றே நாம் கூற வேண்டும். முடிவில், அர்ஜுனனும் துரியோதனனும் தாம் வந்த காரியம் நிறைவேறியதாக எண்ணி களிப்புற்றனர்!
ஒரு கைதேர்ந்த அரசியல் நிபுணனாக கிருஷ்ணன் எவ்வளவு அழகாக சாம, தான, பேத, தண்டம் எனும் நான்கு உபாயங்களையும் கையாண்டான். யுதிஷ்டிரனின் தூதுவனாக சென்றபோது திருதிராஷ்டிரன் இடத்தில், “அவர்களுக்கு நியாயமாகச் சேரவேண்டிய பங்கினைக் கொடுத்துவிடு”, என்கிறான். இது சாமோபாயம். துரியோதனன் அதைத் தர மறுத்ததும் அவனிடம், “முழு ராஜ்ஜியத்தை தராவிட்டாலும், இந்திரப்ரஸ்தம், ஜயந்தப்ரஸ்தம், வாரணாவத போன்ற ஐந்து கிராமங்களையாவது அவர்களிடத்தில் தரலாமே. இதனால் அவர்கள் ஆறுதல் பெறுவர்”, எனக் கேட்டுப் பார்க்கிறான். இது தானோபாயம். இதற்கும் அவன் சம்மதிக்காததால், அதர்மத்தின் பாதையில் செல்லும் துரியோதனனுக்கு ஆதரவு அளிப்பதாக பீஷ்மரையும், துரோணரையும் குறை கூறுகிறான். இதனால் அவர்கள் சஞ்சலம் அடைகிறார்கள். இது பேதோபாயம். இந்த உபாயமும் கைகொடுக்காததால், “உங்களுக்குப் போர்தான் வேண்டுமென்றால், அப்படியே ஆகட்டும்”, என்கிறான் கிருஷ்ணன். தண்டோபாயம்.
போர் நடந்தே தீரவேண்டும் என்றாகிவிட்டது. இருப்பினும் அவன் மன ஓட்டத்தைப் பாருங்கள். போர் துவங்கவிருக்கிறது. கீதோபதேசமும் செய்தாகிவிட்டது. அப்போது பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் ஷல்யர் ஆகியவர்களிடமிருந்து ஆசிபெறுவதற்காகப் பாண்டவர்கள் வெறுங்காலுடன் வருகிறார்கள். அவர்களிடம், “நாங்கள் உங்களை எதிர்த்துப் போரிடப் போகிறோம். எங்களை தயவுகூர்ந்து மன்னித்து, எங்களுக்கு ஆசி வழங்குங்கள்”, என்கிறார்கள். அதற்கு அவர்கள், “மிக்க நல்லது. அப்படிச் செய்யாவிடின், எங்களுக்கு மன வறுத்தம் ஏற்பட்டிருக்கும்”, எனக்கூறி,”விஜயீ பவ!”, என்று நல்லாசியும் வழங்குகிறார்கள். போரின்போது அவர்களை பாண்டவர்கள் எவ்விதத்தில் வீழ்த்த முடியும் என்கிற ரகசியத்தையும் வழங்குகிறார்கள்.
கிருஷ்ணன் அவர்களுடன் செல்லவில்லை. பெரியவர்களின் மனத்தைக் கனியச்செய்ய பாண்டவர்களை அனுப்பிவைத்தாலே போதுமானது! தனக்கு வேறு வேலை இருப்பதாக கண்ணன் மனத்துக்குப்பட்டது. அவன் நேரே கர்ணன் இருக்கும் இடத்துக்குச் செல்கிறான். பீஷ்மர் போர்களத்தில் படைத்தளபதியாக இருக்கும்வரையில் தான் போரிடப்போவதில்லை என கர்ணன் முன்பே சபதம் செய்திருந்தான். கண்ணன் கர்ணனிடம் சென்று, “நீதான் பீஷ்மர் வீழ்த்தப்படும்வரை அவர் அணியில் போரிடப்போவதில்லை என்றாயே. அதுவரை நீ எங்கள் அணியல் இடம்பெற்றுப் போரிடலாமே!”, என்கிறான். கர்ணனுக்கு இது எப்படிப் பட்டிருக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்! பாசங்கலந்த இவ்வழைப்பால், அவன் மனமுருகி அதனை ஒருவேளை ஏற்றுக்கொண்டிருக்கலாம். நடக்கப்போவதை யாரறிவார்? முயற்சித்துப் பார்ப்பதில் ஒன்றும் தப்பில்லையே? கிருஷ்ணனது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அப்பேற்பட்டது! தன்னால் முடிந்த அத்தனைப் பிரயத்தனங்களையும் மனச்சோர்வின்றி, விடாப்பிடியாகச் செய்துபார்த்தான் கண்ணன்.
போரில் வென்றபின் யுதிஷ்டிரனுக்கு மணிமுடி சூடவேண்டிய வேளை சமீபித்துவிட்டது. அப்போது யுதிஷ்டிரனிடத்தில் சென்று கிருஷ்ணன், “உத்தராயண புண்யகாலத்தில் உயிர் துறப்பதற்காக பிதாமகர் பீஷ்மர் காத்துக்கிடக்கிறார். ஒரு யுகத்திற்கான ஞானம் அனைத்தையும் சேர்த்து வைத்திருப்பவர் அம்புப் படுக்கையில் வீற்றிருக்கிறார். அந்த ஞான ஒளி மறைந்துவிடுவதற்குமுன், நாம் அவரிடமிருந்து அதனைப்பெற்றுவிட வேண்டும்”, எனக் கூறுகிறான். அறிவுச் சுரங்கத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் கண்ணன் உறுதியாக இருந்தான். பீஷ்மர் அனைத்துக் கோட்பாடுகளிலும் கைதேர்ந்தவர். அவற்றை பயிற்சித்து வந்தாரா என்பது வேறு விஷயமாயினும், பல வருட ஞானமும் அவரிடத்தில் தேங்கிக்கிடந்தது. கிருஷ்ணன் விரும்பியபடி, அதனை யுதிஷ்டிரன் பீஷ்மரிடமிருந்து பெறுகிறான் என்பதை “சாந்தி பர்வத்திலும்”, “அனுஷான பர்வத்திலும்” பார்க்கிறோம். இவ்வனைத்து ஞானத்தையும் யுதிஷ்டிரன் கற்றறிந்தால், அவற்றை தக்க நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றெண்ணினான் கிருஷ்ணன். சூழலுக்குத் தக்கவாறு வினையாற்றுவதைக் காட்டிலும், அதனை அனுசரித்து நடப்பதே சாலச் சிறந்தது என்பதே கண்ணனது சித்தாந்தம்.
மகாபாரதம் முழுவதிலும் ஒரே ஓர் இடத்தில் மாத்திரம்தான் கிருஷ்ணன் வாய்விட்டு அழுகிறான். துரியோதனன் மடிந்தபின் திருதிராஷ்டிரனும் காந்தாரியும் கதறி அழுகையில், அவனும் அவர்களது கரம்பற்றிச் சேர்ந்து அழுகிறான். பேரிடி விழுந்துவிட்டது. அவர்களுடன் சேர்ந்து அவனும் அழுவதால் அவர்கள் ஆறுதல் கொள்ளலாம். அதற்காக அவன் அழுகிறான்.
காந்தாரி அவனுக்கு சாபம் இடுகிறாள். அதையும் அவன் சாந்தமாகவே கையாளுகிறான். அவன் அவளிடம், “உனது பேராசையாலும், பேராணவத்தாலும்தான் உன் மகன் மடிந்தான். உன் நூறு மருமகள்களும் விதவை ஆனதற்காக அழுகிறாயே, இப்போரினால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளானார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தாயா? உண்மையில், எம்மக்களும் உத்தமர்களல்ல. அவர்களது முடிவும் நெருங்கிவட்டது. உனது இந்த சாபத்தினால் அவர்கள் மடியப்போகிறார்கள்”, என்கிறான். ‘நாங்கள்’, ‘அவர்கள்’ என்றெல்லாம் வித்தியாசப்படுத்திப் பார்க்காமல், கிருஷ்ணன் அனைவரையும் ஒரே விதமாகவே கையாண்டான்.
வேதங்களில் நாம் ஒருவருக்கும் கடன் பாக்கி வைக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணனும் கடன் பாக்கி வைக்கவில்லை. ராமாவதாரத்தில் மரத்திற்குப் பின்னால் நின்றுகொண்டு அவன் வாலியை வீழ்த்தினான். கிருஷ்ணாவதாரத்தில் மரத்திற்குப் பின் நின்ற வேடுவன்ஒருவன் உணவென நினைத்து அம்பெய்தி கிருஷ்ணனை வீழ்த்தியபோது, அக்கடன் கழிந்துவிட்டது.
பகவத்கீதையில் கிருஷ்ணன், தானே அனைத்தையும் வியாபித்து நிற்கும் பரம்பொருள் என்கிறான். உயிருள்ள, உயிரற்ற அனைத்திற்கும் அந்தராத்மா அவனே.
अहमात्मा गुडाकेश
सर्वभूताशयस्थितः।
अहमादिश्च मध्यं च
भूतानामन्त एव च॥
பகவத்கீதை 10.20
அதனால் கிருஷ்ணனுக்கு வழங்கப்படும் அனைத்தும், பரம்பொருளைச் சென்று சேர்கிறது.
உண்மையில், சிவனே ராமன், ராமனே கிருஷ்ணன், கிருஷ்ணனே சிவன் ஆகிறார்கள். இருப்பினும் அவர்களது மேலோங்கிய தன்மையை நாம் தனி மனிதனுக்கான, குடும்பத்துக்கான, சமுதாயத்திற்கான வரையறைகளாக அடையாளம் காணலாம். அவர்களது வழிகாட்டல் நமது வாழ்நாள் முழுமைக்கும் போதுமானது. சிவ-ராம-கிருஷ்ணர்கள் இனி வருங்காலங்களிலும் நம்மை வழிநடத்தட்டும்!
முற்றும்.
இந்த கட்டுரைத் தொடர் ‘ஷதாவதானி’ டாக்டர் ஆர். கணேஷ் அவர்கள் 2009இல் பெங்களூருவில் உள்ள கோகலே பொது விவகாரங்கள் நிறுவனத்தில் (Gokhale Institute of Public Affairs) நிகழ்த்திய கன்னட விரிவுரைகளின் ஹரி இரவிக்குமாரது ஆங்கிலத் தழுவலின் அடிப்படையில் எழுதப்பட்டது.
இதில் இடம்பெற்றுள்ள இராமாயணக் குறிப்புகள் அனைத்தும் வித்வான் ரங்கநாத ஷர்மாவினது எட்டு தொகுதிகளாலான அவ்விதிகாசத்தின் கன்னட மொழிபெயர்ப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளன (இது பெங்களூருவிலுள்ள ராமாயண பிரகாஷான ஸமிதியின் வெளியீடு).