அயோத்தியா காண்டத்தில் ராமனுக்கும் அந்நாட்டு மக்களுக்குமான பரஸ்பர அன்பு நன்றாய் புலப்படுகிறது. அவன் அவர்களை சந்தித்து அவர்களது சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்வான். அவர் சிரித்தால் தான் அகமகிழ்ந்தும், அவர் துக்கப்பட்டால் தான் துயர்வுற்றும் இருந்தான். ஒரு நாள்கூட அவர்களில் எவரையேனும் காணாமல் இருந்தால், அவர்களைக் காணவில்லையே என ஏங்குவான். அவர்களும் ராமனை ஒரு தினமேனும் சந்திக்காதிருந்தால் எதையோ இழந்துவிட்டதாகவே எண்ணுவார்கள். மொத்தத்தில் ராமன் தன் பிரஜைகளை சந்திக்காத நாளென்பதே கிடையாது; அதற்கான சாத்தியமும் குறைவானதே!
அவன் எந்தளவிற்குத் தனது பிரஜைகளைத் தன் குடும்பத்தினராகவே கருதினான் என்பது அவன் வனவாசம் செல்வதற்குமுன் அவன் அந்நாட்டவருக்கு கொடுத்துச் சென்ற பரிசுகளிலிருந்தே கண்கூடாகத் தெரிகிறது. எவரெவருக்கு எந்தெந்த பொருட்களில் அதிக நாட்டம் இருந்ததோ அதனையே அவருக்குப் பரிசாக விட்டுச்சென்றான். இந்தளவுக்கான ஈடுபாடென்பது அவன் அவர்கள்பால் வைத்திருந்த அளவுகடந்த அன்பையே எடுத்துணர்த்துகிறது. ராமனின் குடும்பநோக்குப் பார்வை வெறும் சொல்லளவில் மாத்திரம் இல்லாமல் செயலளவிலும் இருந்தது. ராமன் காட்டுக்குச் செல்கையில் அயோத்தியா நகரமே துக்கத்தில் மூழ்கியது. “தாம் பெற்ற பரிசுகளால் ஒருவர்கூட ஆனந்தம் கொள்ளவில்லை. முதல் முதலாக ஆண் மகவுபெற்ற தாய்மார்களுங்கூட சந்தோஷம் கொள்ளவில்லை”, என்கிறார் வால்மீகி.
नष्टं दृष्ट्वा नाभ्यनन्दन्
विपुलं वा धनागमम् ।
पुत्रं प्रथमजं लब्ध्वा
जननी नाभ्यनन्दत ॥
(அயோத்தியா காண்டம் 48.5)
குடும்பத்திலுள்ள எவரேனும் பிரசித்தி பெற்றுவிட்டால், அதிலுள்ள பிறர் தாழ்வு மனப்பான்மையில் தத்தளிப்பர் என்பது பொதுவான ஒரு நியதி. அதனால் உயர்நிலையிலுள்ளவரைத் தாழ்நிலையிலுள்ளோர் எட்டநின்றே பார்ப்பர். ஆனால் ராமனோ தன்னை சுற்றியுள்ள சுற்றத்தாருடன் நல்லிணக்கத்துடனே நடந்து கொண்டான். அதுவே அவனது மகத்துவம்! காளிதாசனின் ‘ரகுவம்ச’த்தில் இதனை அழகாக அவர் பதிவு செய்கிறார். வனவாசம் முடிந்து புஷ்பகவிமானத்தில் ராமன் திரும்ப அயோத்தியைக்குள் பிரவேசிக்கையில் அவன் கைகேயியை சந்திக்கிறான். அவன் அப்போது கைகேயியினிடம், “தாயே! தங்களாலேயே என் தந்தையினுடைய இரு வரங்களும் பூர்த்தி பெற்றன. முன்பே அவர் உமது தந்தையினிடத்தில் யுவராஜாவாக பரதனை நியமிப்பதாக வாக்களித்திருந்தார். ஆனால் அவர் அதனை மறந்து எனக்கு பட்டாபிஷேகம் செய்வதாக அறிவித்துவிட்டார். நல்ல வேளையாக தாங்கள் அவ்விரு வரங்களைக் கேட்ட காரணத்தால், எனது தந்தை தான் முன்பே செய்துகொடுத்த வாக்கினை நிறைவேற்றும்படி நேர்ந்தது. இதனால் ராமனின் தந்தை சொன்னசொல் தவறாதவன் என்கிற நன்மதிப்பும் அவருக்குக் கிடைத்தது!”, என்கிறான். தனக்கு கைகேயி தீங்கு விளைவித்துவிட்டதாக எண்ணித் துன்புறுவாள் என்பதை நன்குணர்ந்த ராமன் அவளுக்கு இவ்வாறாக ஆறுதலளிக்கிறான்.
ராமனின் நல்லொழுக்கம் அவனை சுற்றி இருந்தோருக்கும் ஒட்டிக்கொண்டது. தசரதரிடமிருந்து கைகேயி இரு வரங்களைப் பெற்றதற்கான மூல காரணம் மந்தரைதான் என்றறிந்ததும் ஷத்ருக்னன் அவள் முடியைப் பிடித்திழுத்து வந்து அவளைக் கொல்ல முற்படுகிறான். “நம் குடும்ப வீழ்ச்சிக்கு இவளே காரணம்!”, என்றலறுகிறான். இவ்விடத்தில் கவி மந்தரையை தோற்றத்துக்கு ஒவ்வாத ஆடை ஆபரணங்களை அணிந்திருந்த கயிற்றால் கட்டப்பட்டக் குரங்குபோல் இருந்ததாக வர்ணிக்கிறார். அப்போது பரதன் அவனைத் தடுத்து நிறுத்தி, “இவளைக் கொல்லாதே, ஷத்ருக்னா! நாம் ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டோம் என்று ராமன் கேள்விப்பட்டால், அவன் நம்முடன் பேசுவதையே நிறுத்திவிடுவான். இல்லையேல் நான் இதுவரை என் தாயை ஏன் விட்டுவைத்திருக்கிறேன் என்று நினைக்கிறாய்? நமது சகோதரன் மட்டும் இல்லாதிருந்தால் நான் அவளை என்றோ கொன்றிருப்பேன்!”, எனக் கூறுகிறான். (அயோத்தியா காண்டம் 78.21-22). மேலும் ராமனின் அஹிம்சாவாதத்தை அயோத்தியாவாசிகள் எவ்விதம் பின்பற்றி நடந்தனர் என்பதும் இவ்விதிகாசத்தில் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது.
சீதையைத் தேடி கண்டுபிடித்ததற்கு அடையாளமாய் அவளது சூடாமணியையும் எடுத்துவந்து, மேலும் ஒரே நாளிலேயே ராவண ராஜதானியான லங்கையில் பிரவேசித்து, அவனது சைன்யங்களில் ஒரு பாகத்தினரை வீழ்த்தி, அவனது சேனா ரகசியங்களை நன்கறிந்துவந்து, லங்கா நகரத்தின் ஒரு பகுதியை தீயிட்டுக் கொளுத்தி வீர சாகசங்களைப் புரிந்த ஹனுமானைக் கண்டதும் ராமனின் மனம் குளிர்கிறது. அப்பொழுது ராமன் ஹனுமானிடத்தில் “என்ன ஒரு துணிச்சலான, சாகசக்காரன் நீ! இப்பேர்பட்டவனுக்கு நான் அவசியம் ஏதாவது அன்பளிப்பைத் தந்தாக வேண்டும். இருப்பினும் அதனால் நீ நன்கொடைப் பெற்றவனாகி விடுவாய். அதனால் உன்னிடம் நான் என்றென்றைக்கும் கடன்பட்டவனாகவே இருந்துவிட்டுப்போகிறேன்”, என்கிறான். (யுத்த காண்டத்தின் முதல் சர்க்கத்தைப் பார்க்கவும்). எந்த ஒரு கடனையும் தீர்த்துவிட வேண்டும் என்று எண்ணுகிற ராமனைப் போன்றோர் இவ்விதம் கூறுவதென்பதே அரிது.
குடும்ப பாரத்தை ஒருவன் சுமக்க நேர்கையில், அவனுக்குத் தனது பலம் மற்றும் பலவீனம் தெரிந்திருப்பதோடு மாத்திரமல்லாமல் பிறரது பலாபலங்களையும் அவன் நன்குணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். அதற்காக அவன் அவர்களை குறைகூற வேண்டும் என்று அர்த்தமில்லை. ராமன் தனது பலாபலங்களையும், பிறரது பலாபலங்களையும் நன்குணர்ந்தவன். அவன் தனது வரையறைகளை நன்றாய் அறிந்திருந்தான். இருப்பினும் அவன் தனது சுய கௌரவத்தையும் பணிவையும் கைவிடாமல், என்றென்றும் புன்னகை பூத்த முகத்துடன் சிறிதளவில் பேசுபவனாகவும், புன்முறுவலுடன் உரையாடலைத் துவங்குபவனாகவும் அனைவரோடும் பழகி வந்தான்.
அவனை சுற்றி இருப்போரது திறன்களை ராமன் நன்கு புரிந்து வைத்திருந்தான். சீதையைத் தேடுவதற்காக சுக்ரீவ சேனைகள் தயாராகுகையில், ஒவ்வொரு திக்குக்கான சேனைத் தலைவர்கள் நியமிக்கப் பட்டார்கள். இருப்பினும் ராமன் இவ்வனைவரையும் விட்டுவிட்டு ஹனுமானிடத்திலேயே தன் கணையாழியைக் கொடுத்தான். அவன் நினைத்திருந்தால் பிற சேனைத் தலைவர்களினிடத்தில் காதல் கடிதங்களையாவது கொடுத்தனுப்பி இருக்கலாம். அவனுக்கு ஹனுமானின்மீது அந்தளவிற்கு அபார நம்பிக்கை. இப்பணியைத் திறம்பட முடிக்க ஹனுமானால் மட்டுமே முடியும் என்றறிந்திருந்தான். பிறர் மனம் புண்படாதபடி ராமன் சாதுர்யமாக இதனைக் கையாண்டான். அங்கதன் வந்து ராமிடத்தில் கணையாழியை ஏன் தன்னிடத்தில் தரவில்லை என்று முறையிடவில்லையே! இந்த திறமை வீட்டை வழிநடத்த மட்டுமல்லாமல் நாட்டை வழிநடத்தவும் தேவையானது.
பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டுவந்த பண்பாட்டு மரபுகளை குடும்பத்தினர் ஒரு நாளும் புரக்கணித்துவிடக்கூடாது. குடும்பத்தில் ஒரு சிலருக்கு இதில் உடன்பாடில்லாதபோதும் கூட, இதுபோன்ற சடங்குகள் குடும்பத்திலுள்ள அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கான சந்தர்ப்பங்கள். ராமனும் இதுபோன்ற சடங்கு சம்பிரதாயங்களை முறை தப்பாமல் பின்பற்றி வந்தான். காட்டுக்குள் குடிசை கட்டுகையில்கூட அவன் புதுமனைப்புகுதலுக்கான சடங்குகளான ‘வாஸ்தோஷ்பதி ஹோமம்’, ‘கிருஹபிரவேசம்’ முதலானவற்றை முறையாக செய்தான். குகனின் படகில் செல்வதற்குமுன் அவன் ‘நௌகாரோஹண மந்திரத்தை’ உச்சரித்ததாக கவி கூறுகிறார். இதுபோன்ற சடங்குகளைப் பெற்றோரே பின்பற்றவில்லையாயின் பிள்ளைகளுக்கு இவற்றை யார் சொல்லித்தருவது? சடங்குகள் என்பது உயர்நிலை தத்துவத்தை அறிவதற்கான அடித்தளங்கள். வெறும் வெற்றுநிலையில் உயரிய மெய்ப்பொருளை அறிய முடியாது. சடங்குகளே இப்பாதைக்கான முதற்படி. இவ்விஷயத்தையும் ராமன் தன் வாழ்வில் திறம்பட கையாண்டான்.
தனது குடும்பத்தினர் செய்த நல்ல செயல்களைபோற்றும் பக்குவமும் ராமனிடத்தில் இருந்தது. அவனது அறிவுறுத்தலின்பேரில் லட்சுமணன் இலைகளைக்கொண்டு குடிசை அமைத்தபோது ராமன் அவனை வெகுவாகப் பாராட்டுகிறான். அவன் லட்சுமணனிடத்தில், “என்ன அற்புதமான குடில்! உன்போன்ற தம்பி இருப்பதால்தான் நான் என் தந்தை மறைந்துவிட்டார் என்பதையும் மறந்திருக்கிறேன். உன்போன்ற சகோகரன் இருக்கையிலே இனி எனக்கு என்ன குறைச்சல்?”, என்கிறான். (அரண்யகாண்டம் 15.27-29யைக் காண்க). பாஸாவின் ‘ப்ரதிமாநாடக’த்தில் ராமன் பரதனிடம், “இதுவரை தந்தைக்கு அடங்கிய தனையனாய் நான் பெற்ற பெருமை அனைத்தும், தம்பியாகிய நீ என்மீது அளவுகடந்த மரியாதையும் அன்பையும் வைத்து என் பாதுகையை எடுத்துச் செல்லவந்த இம்மாத்திரத்திலேயே முடிவுற்றது! நீ என்னைக்காட்டிலும் மிக உயர்ந்தவன்!” என்கிறான். அன்பிற்குரியோரை அலட்சியம்செய்யாமல் அவரது நற்குணங்களைப் போற்ற வேண்டும். இதனையே ராமன் இங்கு செய்து காட்டினான். சீதையுடனான அவனது உரையாடல்களும்கூட பாசப்பெட்டகங்களாக விளங்கின.
பிறர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதும் தேவையான பண்பு. வாலியைப் பற்றி சுக்ரீவன் அவனிடத்தில் முறையிடுகையில், ராமன் அவனிடத்தில் வாலி பற்றின கோரமானத் தகவல்களைக் கேட்டறிந்து கொள்ளவில்லை. அவனைப் பொருத்தவரையில் சுக்ரீவன் உன்னதமானவன் என்றும் அதனால் அவன் சுக்ரீவனுக்கு உதவி புரிய வேண்டும் என்றும் கருதினான். மேலும் ராமன் வாலியை ஒருநாளும் குறை கூறியதில்லை. முதலில் வாலி-சுக்ரீவ யுத்தத்தின்போது, உருவ ஒற்றுமை காரணமாக அவ்விருவரில் வாலி யார் சுக்ரீவன் யார் என்று ராமனுக்குத் தெளிவாய் விளங்கவில்லை. அதனால் அப்போது அவனால் வாலிமீது அம்பெய்த முடியவில்லை. வதைபட்ட சுக்ரீவனோ வலிபொருக்கமாட்டாமல் ராமனை நிந்திக்கிறான். அதன்பிறகே சுக்ரீவனை மாலை அணிந்து செல்லுமாறு சாந்தமாய் ராமன் கூறுகிறான். வாலிவதத்திற்குப் பின்பும் அவர்களது குடும்ப ஒற்றுமையில் பங்கம் வராதபடி பார்த்துக் கொள்கிறான். அதனால்தான் தாரையும், அங்கதனும் ராமன் மீது பெரும் மரியாதை வைத்திருந்தனர். குடும்பத் தலைவனைக் கொன்ற பின்பும் அக்குடும்பத்தினர் அவனை நண்பனாக பாவித்தனர்! முதலில் தாரை அவனைத் திட்டித் தீர்த்தாலுங்கூட ராமன் எடுத்த முடிவு சரியானதே என உணர்ந்து ஆறுதல் கொள்கிறாள். சீதையைக் கண்டுபிடிக்க முடியாமல் அங்கதன் தவிக்கையிலே, தான் வெறுங்கையை வீசிக்கொண்டு சுக்ரீவனிடத்தில் செல்வதைவிட உயிரைவிடுவதே நலம் என எண்ணினான். ஒருவேளை தனது தந்தையைக் கொன்றதைப்போன்றே தன்னையும் கொல்வதற்கான சுக்ரீவனது சதித்திட்டமாக இது இருக்கலாமோ என ஒரு நொடி நினைத்தான். ஆனால் அந்த எண்ணம் நீடிக்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அங்கதனை ராவணனிடத்தில் தூதனுப்பினார்கள். அப்போது ராவணன் அங்கதனிடம், “நானும் உன் தந்தை வாலியும் சிநேகிதர்களாகப் பழகி வந்தோம். நீ ஏன் உன் தந்தையை ரகசியமாகக் கொன்ற ராமனுடனும், கொடூரமான அந்த சுக்ரீவனோடும் உறவு கொள்கிறாய்? நீ என் அணிக்கு வந்துவிடு!” என்கிறான். அப்போது அங்கதன், “இல்லை, அவர்கள் நல்லவர்கள். என் தந்தை தவறிழைத்துவிட்டான். நான் உன்னை எச்சரிக்கிறேன்-நீயும் அதே தவறை செய்துவிடாதே!”, என்று பதிலுரைக்கிறான்.
விபீஷணன் ராமனிடம் சரண் புகும்போது சுக்ரீவன் அவனை சந்தேகிக்கிறான். மேலும் விபீஷணனை நம்ப வேண்டாம் என்றும் அவனை திரும்ப அனுப்பிவிடலாம் எனவும் சுக்ரீவன் ராமனிடத்தில் கூறுகிறான். அப்போது லட்சுமணன் தன் சகோதரனான வாலிக்கு துரோகம் செய்த சுக்ரீவனே இவ்வாறு கூறுகிறான் என்கிறான். அப்போது ராமன், “எல்லா சகோதரர்களும் ஒற்றுமையாகவும், பயமற்றும், குதூகலமாகவும் இருந்து விடுவதில்லை. அதனால் எப்போதும் அவர்களிடையே வேற்றுமை உணர்வு இருந்து கொண்டிருக்கிறது. கோரமான யுத்த சத்தத்தைக் கேட்கையிலே அவனுக்கு இப்படித் தோன்றி இருக்கலாம்! விபீஷணனுக்கு நாம் அவசியம் அடைக்கலம் அளிக்க வேண்டும்! எனதருமை சுக்ரீவா, எல்லா சகோதரர்களும் பரதனைப் போன்றோ, எல்லா புதல்வர்களும் என்னைப் போன்றோ, எல்லா நண்பர்களும் உன்னைப் போன்றோ இருந்து விடுவதில்லை!”, என எடுத்துக் கூறுகிறான்.
अव्यग्राश्च प्रहृष्टाश्च
न भविष्यन्ति सङ्गताः ।
प्रणादश्च महानेष
ततोऽस्य भयमागतम् ॥
इति भेदं गमिष्यन्ति
तस्मात्प्रोप्तो विभीषणः ।
न सर्वे भ्रातरस्तात
भवन्ति भरतोपमाः ॥
मद्विधा नो पितुः पुत्राः
सुहृदो वा भवद्विधाः...
(யுத்த காண்டம் 18.14-16)
அதன்பிறகு ராமன் சுக்ரீவனிடத்தில், “விபீஷணனென்ன, ராவணனே என்னிடம் சரண் புகுந்தாலும் நான் அவனுக்கு அடைக்கலம் அளிப்பேன்”, எனக் கூறுகிறான். (யுத்தகாண்டம் 18.33-35). அப்பேற்கொண்ட பரந்த மனப்பான்மை கொண்டவன் ராமன்.
முதல்நாள் யுத்தத்தில் ராவணன் அனைத்தையும் இழந்து நின்றபோது, ராமன் அவனை, “இன்று போய் நாளை வா!” என்கிறான். விபீஷணன் அவன் அணியில் இடம்பெற்றிருப்பினும் ராமன் சகோதரரிடையே பகைமூட்டப் பார்க்கவில்லை. விபீஷணன், கும்பகர்ணனுக்கு இடையேயான பாசப் போராட்டத்தை ராமன் எட்டநின்றே பார்த்தான். அவன் ஒருநாளும் அதற்காக விபீஷணனை சந்தேகிக்கவில்லை. கும்பகர்ணனை ராவணனுடன் இணைந்து யுத்தம்புரிய வேண்டாம் என விபீஷணன் எச்சரித்தான். அதற்கு கும்பகர்ணன், “யுத்தத்தில் நான் என் அண்ணனுக்குத் தோள்கொடுப்பது எனது கடமை. ஆனால் யுத்தமென்று வந்துவிட்டால் நான் பின்வாங்காமல் எனக்கெதரே நிற்கும் அனைவரையும் கொன்று வீழ்த்திவிடுவேன். அதனால் என்னைவிட்டு விலகிநில், விபீஷணா. எங்களது ஈமச்சடங்குகளை நீதான் செய்தாக வேண்டும். ஏனெனில் நீயே சரியான பாதையில் செல்கிறாய்!” எனக் கூறுகிறான் (யுத்தகாண்டம் 67.147-55யைக் காண்க) இதைக் கேட்டு தள்ளாட்டம்கண்ட விபீஷணன் தன் கதையைப் பிடித்தபடி தலையை குனிந்துகோண்டு கண்ணீர் மல்க ஓர் ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறான். அப்போது ராமனுக்கு அது தவறாகவே படவில்லை. சகோதர பாசம் பற்றியும், இதுபோன்ற தருணங்களில் ஏற்படக்கூடிய மனக்குமுறல்கள் பற்றியும் அவன் நன்கு உணர்ந்திருந்தான்.
இவ்விதம் ராமனது குடும்பப்பாங்கான நடத்தை அனைத்தையும் கவர்ந்திருந்தது. இதனால்தான் நமது சம்பிரதாயத்தில் ராமனை வெறும் வில்-அம்பு தரித்த ஆயுதபாணியாகப் பார்க்காமல், பண்பட்ட தேர்ந்த வீரனாக, புகைப்படங்களில் சீதை, லட்சுமணன், ஹனுமான், பரதன் முதலானவர்களுடன் வீற்றிருக்கும் பட்டாபிராமனாகப் போற்றுகிறோம்.
பொதுவாகவே நமது தேசத்தில் குடும்பத்தை உயர்வாகக் கருதுகிறோம். இதனால் தேசப் பற்றைவிட குடும்பப் பற்றே மேலோங்கி இருந்து வந்துள்ளது. இருப்பினும் தற்போது நிகழ்ந்துவரும் காலமாற்றங்களால் இன்று இந்நிலையும் நாளுக்குநாள் மங்கிக்கொண்டே போகிறது. ராமாயணம் நமக்குணர்த்தும் ராமனின் வாழ்க்கை வரலாற்றை தெளிவாக புரிந்துகொண்டு நமது வாழ்வை நாம் வழிவகுத்துக் கொள்ள வேண்டும்.
தன்னலமற்றிருப்பதும், அறிவார்ந்து செயல்படுவதும், நட்பு பாராட்டுவதும், தைரியத்துடன் விளங்குவதுமே சிவ-ராம-கிருஷ்ணர்களது பொதுவான அடையாளங்கள். இந்த உள்ளார்ந்த நேர்மையினாலேயே இம்மும்மூர்த்திகளது ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு செயலும் உன்னதம் பெற்றுவிளங்குகின்றன. எப்பேற்பட்ட பிரச்சனையையும் ராமன் சாந்தமாக சமாளிக்கிறான். தேவையற்ற சண்டை சச்சரவுகளை அவன் உருவாக்குவதில்லை. உலகின் அனைத்துவிதமான ஆரவாரங்களையும் ராமன் நேர்மையான நட்பிணக்கத்துடன் அமைதியாக எதிர்கொள்கிறான்.
தொடரும்...
இந்த கட்டுரைத் தொடர் ‘ஷதாவதானி’ டாக்டர் ஆர். கணேஷ் அவர்கள் 2009இல் பெங்களூருவில் உள்ள கோகலே பொது விவகாரங்கள் நிறுவனத்தில் (Gokhale Institute of Public Affairs) நிகழ்த்திய கன்னட விரிவுரைகளின் ஹரி இரவிக்குமாரது ஆங்கிலத் தழுவலின் அடிப்படையில் எழுதப்பட்டது.
இதில் இடம்பெற்றுள்ள இராமாயணக் குறிப்புகள் அனைத்தும் வித்வான் ரங்கநாத ஷர்மாவினது எட்டு தொகுதிகளாலான அவ்விதிகாசத்தின் கன்னட மொழிபெயர்ப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளன (இது பெங்களூருவிலுள்ள ராமாயண பிரகாஷான ஸமிதியின் வெளியீடு).