[மைலாப்பூரிலுள்ள Madras Sanskrit College நிறுவனர் தினத்தன்று 26 பெப்ரவரி 1940 அன்று ஆற்றிய உரையிலிருந்து]
dātavyam-iti yad-dānaṃ
dīyate’nupakāriṇe|
deśe kāle ca pātre ca
tad-dānaṃ sāttvikaṃ smṛtam||
– Bhagavad-gītā 17.20
[பிறருக்கு அளிக்கவேண்டியது
தனது கடமை எனக்கருதி,
எதையும் திரும்பப் பெற எதிர்பாராமல்,
சரியான இடத்தில், சரியான தருணத்தில்,
எந்த பதிலுதவியும் செய்ய முடியாத
தகுந்த நபருக்கு அளிப்பது,
சத்வ குணமுள்ளோரது தன்மையாகும்.
– பகவத்-கீதை 17.20]
இந்த நன்கொடை இந்நிறுவனரது உள்ளத்தின் பெருந்தன்மையை மாத்திரமல்லாது பண்டைய பாரத கல்விமுறை மீதுள்ள அவரது ஈடுபாட்டையும் அபிமானத்தையும் எடுத்துக்காட்டுகிறது. எனினும், சமஸ்கிருத மொழியை போற்றி வளர்க்க ஏற்கனவே இருந்துவந்த மிக குறைந்த எண்ணிக்கையில் செயல்பட்டுவந்த கல்லூரிகளில் மேலும் ஒன்றாக அவர் இதனை நிறுவவில்லை. காலமாற்றத்தையும் சூழ்நிலையையும் மனதிற்கொண்டு நவீன பாட திட்டங்களை உட்புகுத்தி சமஸ்கிருதத்தை போதிக்க அவர் எழுப்பிய கல்லூரி வளாகங்கள் இவை. சமஸ்கிருத மொழி மற்றும் அதன் இலக்கியத்தை பிறவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து, நவீன வல்லுநர்கள் இம்மொழியில் பொதிந்துள்ள பல அறிய பண்புகளை கண்டறிந்துள்ளனர். இந்த நவீன கண்ணோட்டத்துடன் பண்டிதன் ஆக விரும்பும் ஒரு மாணவன் இதனை அணுகாது போனால் அது பெரும் குறைபாடு ஆகிவிடும். இக்குறைபாட்டை போக்க விரும்பியே மொழியியல் மற்றும் சமஸ்கிருத வரலாறு உள்ளிட்ட பாடங்களை இக்கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். இதன்மூலம், ஒரு பண்டிதனுக்கு தேவையானதை பரந்த கண்ணோட்டத்துடன் பயில்வதுடன், நவீன கிழக்கத்திய பாண்டித்தியத்தையும் அவன் பெறுகிறான். பழம் பண்டிதர்களது நேர்த்தியான ஆழ்ந்த சாஸ்திர ஞானமும், தெளிவான சிந்தனையும், துல்லியமான வெளிப்பாடும் நிகரற்றவை. இருப்பினும், வரலாற்று கண்ணோட்டத்துடன் இவர்கள் இம்மொழியை அணுகாததால், கருத்துக்களாக முன்வைக்கப்பட்ட சமஸ்கிருத சித்தாந்தங்கள் பலவும் இயல்பாகவே அவ்வண்ணம் இடம்பெற்றன என்றிவர்கள் எண்ணிவிடக்கூடும். அடிப்படை உண்மைகள் மாறுவதில்லை; எனினும், ஞானம் எப்போதுமே மாற்றத்துக்கு உட்பட்டது. Yathottaraṃ munīnāṃ prāmāṇyam – எவ்வளவுக்கு எவ்வளவு முனிவர் பிற்காலத்தவரோ, அவ்வளவுக்கவ்வளவு அவர் சொல்லின் தரம் உயர்கிறது – என்று இலக்கண வல்லுநர்கள் கூறுவதுபோல, மொழியானது தலைமுறைக்குத் தலைமுறை மாறுதல் அடைகிறது. அதனால், ஒரு மொழியின் இலக்கணத்தை கால இடைவெளிவிட்டு திருத்தி எழுதாவிட்டால் அம்மொழி காலாவதி ஆகிவிடுகிறது. மொழியின் ஒரு சில கிளைகளிலேனும் பண்டைய பாரதத்தார் இவ்வுண்மையை உணர்ந்து செயலாற்றினர் என்றே தெரிகிறது. இருப்பினும், காலப்போக்கில் இவ்வளர்ச்சி மறைந்துபோனது. நவீன பாடத்திட்டத்தில் இதன் சேர்க்கையால் பண்டிதர்கள் பெரிதும் பயன் பெறுவர். சம்ஸ்கிருத பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாரம்பரிய கல்விமுறையுடன் நவீன பாடத்திட்டங்களையும் உட்புகுத்த ஆரம்ப நாட்களில் பெரிதும் சிரமப்பட்டனர் என்பது பலருக்கு தெரியாது. இந்த சீர்திருத்தத்தை கொண்டுவந்த முன்னோடிகளிடத்தே நாம் பெரிதும் கடமை பட்டிருக்கிறோம். பெருமதிப்பிற்குரிய மைசூர் மகாராஜா பல்கலைக்கழகத்தார் அவர்கள் இதே நேரத்தில் இதனை அங்கும் துவக்கி வைத்தனர்.
ஆசிரியர்களும் மாணவர்களும் கல்லூரி வளாகத்திலேயே தங்கிக்கொள்ள வசதி செய்து கொடுத்தது இந்நிறுவனத்தாரை பாராட்டுவதற்குரிய மேலும் ஒரு விஷயம். படாடோப வாழ்க்கை முறை உயர் சிந்தனைக்கான அடிப்படை என்று தற்போது நிலவிவரும் கருத்தை தகர்த்தெறிந்து, இது மாதிரியான எளிய வாழ்க்கை முறையை கையாண்டு உயர் கல்வியையும் போதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. என்ன இருந்தாலும், சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கிவந்து, காலத்தை வென்ற இதுபோன்ற நிறுவனங்கள் குறித்து மேலும் கூறுவதற்கு என்ன இருக்கிறது. அதனால் இதுபோன்ற கல்லூரிகளில் பாடம் பயிலவரும் நவீன யுக பண்டிதர்களுக்கு நான் ஓரிரு ஆலோசனைகள் மட்டும் சொல்ல விரும்புகிறேன். சுமார் இருபது முப்பது வருடங்களுக்கு முன் இருந்த நமது பண்டிதர்கள் தான் தேர்ந்தெடுத்த பாடத்தை மட்டும், அதிலும் குறிப்பிட்ட ஒருசில நூல்களை மட்டுமே கற்றுத்தேர்ந்தனர். அவர்கள் இதனை பரிபூரணமாக கற்றுத் தேர்ந்தனர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை; சொல்லப்போனால், இந்நூல்களின் முதல் ஆசான்களுக்கு ஒப்பான ஞானம் பெற்றிருந்தனர். எனினும் இக்குறுகிய பாட திட்டத்தால் ஏற்படுகிற தேர்ச்சி முழுமையான தேர்ச்சிக்கு என்றும் வித்திடாது. சிலநேரங்களில் இம்மாதிரியான புத்தகங்கள் மாணாக்கரை பரீக்ஷிக்க உதவினாலும், நமது இந்திய சமுதாயத்தில் பொதிந்து கிடக்கும் பல ஆழமான கருத்துக்களை முன்வைப்பதில்லை. உதாரணத்துக்காக, பொது கவிதை புத்தகமாக Pratāparudrīya நூலை பயில்வித்து வந்தனர் – இது இப்பாடத்துக்கு ஒவ்வாத ஒன்றாகவும், மேலும் வசந்த காலத்தில் செழித்து வளரும் செடியைப்போலல்லாமல், தாவரவியல் அருங்காட்சியகத்தில் உள்ள சாறற்ற விதையைப்போல் விளங்கிற்று. இக்குறைபாடு ஆரம்பகால சமஸ்கிருத பாடதிட்டத்தில் அமைந்திருக்கவில்லை என்பது மேலும் வருத்தத்திற்குரியது. அச்சிடும் இயந்திரங்கள் வந்துவிட்டதால் இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிகரமான ஒருவிஷயம்; இதனால் தான் தேர்ந்தெடுத்த பாடத்தில் பரந்த ஞானம் பெற்றதோடு மட்டுமல்லாது அதனுடன் தொடர்புடைய அனைத்து பாடங்களையும் ஒரு நவீன பண்டிதனால் பயில முடிந்தது. இதனை அவன் தற்போது கீழ்திசைவாணர்களது உழைப்பால் கண்டறியப்பட்ட பொக்கிஷங்களால் மேலும் விரிவாக்கிக்கொள்ள முடியும். நம் இந்திய பாடத்திட்டத்தில் பொதிந்து கிடந்த பல பொக்கிஷங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. மண்டன மிஷ்ரா இயற்றிய Brahma-siddhi நூல் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்நிறுவனத்தின் முதல் மேலாளரும் புகழ்பெற்ற அறிஞருமான Mahāmahopadhyāya பேராசிரியர் குப்புஸ்வாமி சாஸ்திரியார் இந்நூலை தற்போது பிரசுரித்துள்ளார்.
தொடரும்...
மொழிபெயர்ப்பு: ஸ்ரீபிரியா ஸ்ரீநிவாசன்
This is the first part of a three-part Tamil translation of Prof. M Hiriyanna's "The Value of Sanskrit Learning and Culture" from his anthology Popular Essays in Indian Philosophy. Thanks to Shankar Venkataraman for his thorough review and valuable inputs.