சிவனை வர்ணிக்கையிலே, நாம் அவனது பண்பு மற்றும் வடிவினை எடுத்து விளக்காமல், அவனது உருவகங்களையே எடுத்து விளக்கினோம். ஏனெனில் மனித இயல்பினைப் புரிந்துகொள்வதென்பது சுலபமான காரியமல்ல. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பொதுவான பல தன்மைகளைக் காண முடிகிறது.
நமது சம்பிரதாயங்களில், சிவன் ‘அவதாரம்’ ஏற்பதில்லை. மாறாக, விஷ்ணுவோ பல அவதாரங்கள் ஏற்று வருகிறான். இதற்கென்ன காரணம்? நாம் குடும்பத்திலோ அல்லது ஓர் அமைப்பிலோ வெவ்வேறு கதாபாத்திரங்களாக அங்கம் வகிக்கிறோம். ஆனால் ஒரு தனி நபராக, நாமே நம்மிடத்தில் நடிக்க வேண்டிய தேவையில்லை. தனி மனித லட்சணத்திற்கான அவ்வடையாளமாய் சிவன் விளங்குகிறான்.
ராமன் குடும்பஸ்தன் என்பது ராமனின் கதையைப் படித்துப் பார்க்கும்போதே தெள்ளத் தெளிவாகிறது. சராசரி மனிதரிடையே ராம சரிதை பிரபலமடைந்துவிட்டதைப்போல, சிவன் மற்றும் கண்ணனின் சரிதங்கள் அவ்வளவாக பிரபலமடையவில்லை என்றே கூறலாம். உதாரணத்துக்கு, நம்மில் எவ்வளவு பேர் ராமாயணம் பாராயணம் செய்கின்றோம் என்பதனை எண்ணிப் பாருங்கள். இதனை மஹாபாரதம் பாராயணம் செய்பவரின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். முன்னதைக்காட்டிலும் பின்னது மிகக் குறைந்த அளவிலேயே பாராயணம் செய்யப்படுகிறது. மேலும், மஹாபாரத ஏடு முழுதுமுள்ள வீடுகளில் சண்டை சச்சரவுகள் எழக்கூடும் என்ற தவரான அபிப்பிராயமும் இங்கு நிலவி வருகிறது. பாகவத பாராயணம் செய்யப்பட்டு வந்தாலும், நாம் பாகவதத்தில் காணும் கண்ணன் ஒரு விளையாட்டுப் பிள்ளை. நாம் கருத்தில் கொள்ளவேண்டியது மஹாபாரதக் கண்ணனின் கதாபாத்திரத்தையே.
நம்மவர்களிடத்தில் பொதுவாகவே, நாட்டைப் பற்றின அக்கறையைவிட வீட்டைப் பற்றின அக்கறையே மேலோங்கி நிற்கிறது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இச்சிந்தனை மேலும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். உதாரணத்துக்கு, இந்தியாவிலுள்ள வம்சாவளி அரசியலை ஆராய்ந்து பாருங்கள். மேலை நாட்டவரோ குடும்ப நலனைவிட சமுதாயம் மற்றும் நாட்டு நலனில் பெருங்கவனம் செலுத்துவதாகக் கருதுகிறேன். ஆனால் நமக்கு அனைத்திலுமே அக்கறை வேண்டும். ஒன்றிற்காக மற்றொன்றினைப் புரக்கணித்துவிடக் கூடாது.
பொதுவாகவே, ராமன் அளவிற்கு நம் மனதை கண்ணன் கவரவில்லை என்றே கூற வேண்டும். அதிலும் நாம் வெண்ணை திருடிய கண்ணனையும், புல்லாங்குழலூதும் காதல் கண்ணனையும் எண்ணிப்பார்க்கிறோமே அன்றி, பாரதப்போரில் தர்மத்துக்கு தோள்கொடுத்த மதிநுட்பம் வாய்ந்த அரசியல் சூத்திரதாரியான கண்ணனை எண்ணிப்பார்ப்பதே இல்லை. ஒருவேளை இதுவேகூட கடந்த காலங்களில் நாம் காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடம் பெருந்தோல்விகளை சந்தித்துவந்ததற்கான காரணமாக இருக்கலாம். அதனால் நமக்கு கண்ணனைப் பற்றின விழிப்புணர்வான ‘கிருஷ்ண-பிரக்ஞை’யும் அவசியம் தேவை.
ராமாயணத்தில், குடும்பம் குறித்த ராமனது பரந்த கண்ணோட்டம் தெளிவாகிறது. இது அவனது பிறப்பிலிருந்தே துவங்குகிறது. பல எதிர்ப்பார்ப்புகளுக்கும் காத்திருப்புகளுக்கும் பிறகு, ரகுவம்சத்தின் குலம் தழைத்தோங்கப் பிறக்கிறான். ராமாயணத்தில், தசரதன் தனக்குப் பிறகு அயோத்தியை மன்னனற்று போய்விடுமே என்றெண்ணி வருந்துவதைவிட தனக்கு புத்திரனில்லை என்பதனை எண்ணியே மனம் குமுறுகிறான். சமூக உணர்வைவிட குடும்ப உணர்வு மேலோங்கியதால், வம்ச விருத்திக்காக ‘புத்திர-காமேஷ்டி யாகம்’ மேற்கொள்கிறான். உண்மையில், குடும்பம் தழைக்க ஆண் மகவு தேவை என்பதே இவ்விதிகாசத்தின் பிரதானமான கருத்தாக உள்ளது.
இதனைக் கண்ணனது கதையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். நந்தகோபனிடத்தில் தனது புத்திரனை சென்று கொடுக்க வேண்டுமே என்றெண்ணி வசுதேவனோ, தேவகியோ மனம் தளரவில்லை. மாறாக அதனை தமக்கு நிர்ணயிக்கப்பட்ட விதியாகவும், தமது கடமையை தாம் நிறைவேற்றுவதாகவுமே கருதினர். கண்ணனும், பெற்ற தாய் தந்தையர் உயிருடன் இருக்கையிலே மாற்றான் தாய் தந்தையர் தம்மை வளர்க்கின்றனரே என்றெண்ணி மனம் குமுறவில்லை. ராம லட்சுமணர்களின் உதவிநாடி விசுவாமித்திரர் அவர்களை அழைத்துச் செல்ல வரும்போது தசரதனுக்கு ஏற்படுகிற பரிதவிப்போடு இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். தன் தந்தை தனக்கென தேர்ந்தெடுத்த மனைவியை மணந்ததால் ராமன் களிப்புற்றான். சீதையைக் கண்டு தனது பெற்றோர்கள் பேரானந்தம் அடைந்ததை எண்ணி குதூகலித்தான். இந்திய கலாசாரத்தில் மணப்பெண்ணை மணமகனின் பெற்றோர் தேர்ந்தெடுக்கும் இந்த ‘பிரம்ம-விவாஹம்’ எனும் சடங்கு மிகப் பிரபலமானது. ராமன் பெற்றோரிடத்தே மரியாதை செலுத்தியும், தம்பிகளிடத்தே பாசத்தைப் பொழிந்தும் வந்தான்.
பலராமனிடத்தில் கண்ணன் மரியாதை செலுத்திவந்தாலும், இவ்விருவரிடையே பலத்த பாசப்பிணைப்பை நம்மால் காண முடிவதில்லை. இவ்விருவரிடையே பல கருத்து பேதங்களை காண முடிகிறது. ஆனால் ராமனது தம்பிமார்களோ அவன்மீது பெரிதும் பாசம் செலுத்தி வந்தனர். ராமனும் அதற்குத் தக்கவாறு நடந்து வந்தான். கைகேயி தசரதனிடத்தில் இரு வரங்களைக் கேட்கையில், ராமன் மனச்சோர்வு கொள்ளவில்லை. பரதனும் அரசாளத் தகுதி படைத்தவன் என்றே கருதினான். தந்தையின் வாக்கு பொய்த்துவிடக்கூடாது என்பதே அவனது ஆழ்மனச் சிந்தனையாக இருந்தது. மேலும், கைகேயியும் மகிழ்ச்சி காண வேண்டும் என்றெண்ணினான்.
இப்பகுதியை நாம் கூர்ந்து கவனிக்கையில், இதற்கான சமுதாயக் கண்ணோட்டமும் நமக்குப் புலப்படுகிறது. மன்னவன் வாக்கு தவறிவிட்டான், அதிலும் தனது பிரியமான மனைவியின் ஆணையை நிறைவேற்றத் தவறினான் என்றறிந்தால் மக்கள் அவன் மீதுள்ள நம்பிக்கையை இழப்பார்கள். அரசின் மீதுள்ள நம்பிக்கை சிதைக்கப்படுமாயின், அந்நாட்டு மக்களும் பொது நலத்தைப் புரக்கணித்து தத்தமது சுயநலனைப் பாதுகாப்பதிலேயே அக்கறை செலுத்துவார்கள். குடும்ப நிலையில் தேர்ச்சி பெற்றவனே, சமூக நிலையிலும் தேர்ச்சி பெறுவான் என்பதனை ராமன் நன்கு உணர்ந்திருந்தான். அதனால் ராமாயணத்தில், சமுதாயக் கண்ணோட்டத்துடன் குடும்பம் முன்னிலை படுத்தப்பட்டது.
ராமன் இரக்கமுள்ளவனாயினும் உறுதியானவன். ராமன் காட்டிற்கு உண்மையில் செல்வானா என கைகேயி சந்தேகமுற்றதும், “அரசியாரே! எனக்கு செல்வம் முக்கியமல்ல. எனக்கு மக்கள் நலனே முக்கியம். தர்மத்தை மாத்திரமே கடைபிடிக்கும் ரிஷியைப் போன்றவன் நான்!” என்று ராமன் அவளிடம் மிருதுவாக எடுத்துக் கூறுகிறான்.
नाहमर्थपरो देवि
लोकमावस्तुमुत्सहे ।
विद्धि मामृषिभिस्तुल्यं
केवलं धर्ममास्थितम् ॥
(அயோத்தியா காண்டம் 19.20)
ஓரிரவு தாய் தந்தையரோடு அரண்மனையில் உல்லாசமாய் தங்கிவிட்டு, மறு தினம் கானகம் செல்லலாம் என தசரதன் கூறுகையில், “இவ்வனைத்து குதூகலங்களும் இன்று எனக்குக் கிடைத்துவிட்டாலும், நாளையிலிருந்து இவற்றுக்கு நான் எங்கு செல்வேன்? இங்கிருந்து இப்போதே சென்றுவிடுவதே நலம்”, என்று ராமன் பதிலுரைக்கிறான்.
प्राप्स्यामि यानद्य गुणान्
को मे श्वस्तान्प्रदास्यति ।
अपक्रमणमेवातः
सर्वकामैरहं वृणे ॥
(அயோத்தியா காண்டம் 34.40)
மனது நிலையற்றது என்று ராமன் அறிந்திருந்தான். ஓரிரவு அரண்மனையில் தங்கிவிட்டால், நாளை செல்கையில் மனம் தடுமாற்றம் கண்டுவிடுமோ என்றஞ்சினான்.
ராமன் காட்டிற்கு சென்றுவிட்டான் என்றறிந்ததும், பரதன் அவனை அழைத்துச் செல்ல ஓடோடி வருகிறான். ராமன் மறுத்துவிடுகிறான். மேலும் அவன் பரதனிடம், “எனதருமை தம்பியே! பாசத்தாலோ, பேராசையாலோ உனது தாய் இவ்விதத்தில் நடந்துகொண்டுவிட்டாள். ஆயினும் நீ அவளைக் கோபிக்கக்கூடாது! நீ அவள்மீது மரியாதை செலுத்தி அவள் நலனில் அக்கறைகொள்ள வேண்டும். உனது கடமையைப் புரக்கணித்துவிடாதே!”, என்று கூறி அனுப்புகிறான்.
कामाद्वा तात लोभाद्वा
मात्रा तुभ्यमिदं कृतम् ।
न तन्मनसि कर्तव्यं
वर्तितव्यं च मातृवत् ॥
(அயோத்தியா காண்டம் 112.19)
மேற்கொண்டு அவன் பரதனிடம் இவ்வாறு கூறுகிறான், “உனது தாய் கைகேயியை ரக்ஷி! அவள்மீது கோபம் கொள்ளாதே! ரகுகுலத்தின் வழித்தோன்றலே, இது என் மீதும், சீதையின் மீதும் ஆணை!”
मातरं रक्ष कैकेयीं
मा रोषं कुरु तां प्रति ।
मया च सीतया चैव
शप्तोऽसि रघुसत्तम ॥
(அயோத்தியா காண்டம் 112.28)
இங்குங்கூட, ராமனின் குடும்பப் பற்றும், உறவுகளின் பிணைப்பின்மீது அவனுக்குள்ள அக்கறையும் நன்கு விளங்குகிறது. நடந்துவிட்ட அனைத்தையும் எண்ணி அவன் துக்கம்கொண்டிருந்தாலும், அதனை வெளிப்படுத்தவில்லை. பரதனையும், அவன் தாயார்களையும் உளம் தேர்த்தினான். மேலும் பதினான்கு ஆண்டுகள் கடக்கும்வரையில் தான் திரும்பி வரப்போவதில்லை என்று நிச்சயமாக எடுத்துரைத்து, அவர்களை ராமன் வழியனுப்பி வைத்தான். அவனது தந்தை மரணித்துவிட்டதால், அவரது வாக்கை மறந்துவிட முடியாது எனக் கருதினான். இந்த ‘சர்க்க’த்தில் வால்மீகி, “அவனது தாய்மார்கள் கண்ணீர் சிந்தினர். ராமனை பிரிகிர துக்கத்தால் அவர்கட்கு பேச்செழவில்லை. அவர்களிடத்தே வணக்கமாய் விடைபெற்றுக்கொண்டு, குடிசைக்குள் செல்கையில் ராமன் விம்மி அழலானான்”, என்று கூறி முடிக்கிறார்.
…स त्वेव मातॄरभिवाद्य सर्वा
रुदन्कुटीं स्वां प्रविवेश रामः ॥
(அயோத்தியா காண்டம் 112.31)
அடிப்படையில், ராமனும் பரதனும் செய்ததென்ன? அவர்தமது பெற்றோரினது குறைகளை அமைதியாகத் திருத்திக் காட்டினார்கள். குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றினார்கள். இவ்விருத்தாந்தத்தை இவர்கள் பொது பிரச்சினை ஆக்கவில்லை. உண்மையில், ராமனைக் காட்டுக்கு அனுப்பிவைத்த காரணத்தால் பரதன் தனது தாயைத் தனிமையில் சென்றுதான் கடிந்துகொள்கிறான். தனது தந்தையின் நிர்ணயம் குறித்த தனது எண்ண ஓட்டத்தை ராமன் பொதுவில் சென்று அறிவிக்கவில்லை. ராமாயணத்தை முற்றிலுமாகப் புரட்டிப் பார்க்கையில் ஒரே ஓர் இடத்தில் மட்டுந்தான் ராமன் முக்கியமான அந்த கட்டத்தில் தனது தந்தையின் அந்நடத்தையை சுட்டிக்காட்டுகிறான். கானகத்தில் முதலிரவில் தன் தம்பி லட்சுமணனிடம், “ஒரு நேர்மையான, சாதுவான, மரியாதையான, தர்மம் பேணும் என்னைப்போன்ற ஒரு புதல்வனையே என் தந்தை புரக்கணித்துவிட்டாரெனில், தர்மத்தைவிட செல்வ வளங்களும், காமமுமே பெரிதெனப்படுகிறது! இவ்வுலகில் இதுபோன்ற ஆசாபாசங்களற்ற மனிதர்களும் இருக்கின்றனரோ!”, என்று கூறுகிறான். (அயோத்தியா காண்டம், 53ஆம் சர்க்கத்தைப் பார்க்கவும்). இதிலிருந்து ராமன் தனிமையில் மனம் குமுறித் தவித்தாலும், அவனது பெற்றோரின் நற்பெயரை சிதைக்க முற்படவில்லை என்பது தெளிவாகிறது.
சிவன் எப்படி நடந்து கொண்டான்? தனது வாழ்வை அவன் விதிகளின்படியே வாழ்ந்துகாட்டிய சுய பிரகாசனவன். தக்ஷ யக்ஞத்திற்காக தாக்ஷாயனி அவனை அழைத்தபோது, அவன் வர மறுத்தான். அவள் நிர்பந்தப்படுத்துகிறாள். ஆனால் அவனோ அவள் தனிச்சையாக செயல்படலாம் என்றும் அவள் விரும்பினால் அவள் தனித்து செல்லலாம் என்றும் கூறுகிறான். முரட்டுத்தனமாக நடந்துகொண்ட அவனது மாமனாரைக் கொன்றும் விடுகிறான். இதுபோன்ற தருணங்களில் சிவன் பிடிவாதமான உறுதியுடன் இருக்கிறான்.
கௌசல்யா தேவிக்குப் பிறந்த ராமனோ சுமித்திரையையும், கைகேயியையும் தனது தாயைப்போலவே பாவிக்கிறான். அவர்களை வேறுபடுத்திப் பார்க்காத அவன், அவர்களின் புதல்வர்களை சொந்த தம்பிகளாகவே பாவிக்கிறான். கோதாவரி நதிக்கரையில் பஞ்சவடியில் இருக்கையிலே, லட்சுமணனிடம் அவன், “குளுரெடுக்கிறதே! பரதன் நந்திகிராமத்தில் எவ்வாறு இருக்கிறானோ? அங்கு இதைவிட குளிர் அதிகமாய் இருக்குமே! அவன் இளகியவன். இக்கடுங்குளிரை எவ்வாறு தாங்குகிறானோ?”, என்கிறான். பதிலுக்கு லட்சுமணன், “பரதன் உண்மையில் உன்னதமானவன்தான். இருப்பினும் இப்பேற்பட்ட உத்தமனுக்கு இப்படி ஒரு கொடூரமான தாயா என்பதை எண்ணி நான் வியக்கிறேன்”, என்கிறான். உடனே ராமன், “உன் மாமியைப் பழிக்காதே; உன் தம்பியை மெச்சு”, என்கிறான். இங்கும் ராமன் உறவுகளுக்கிடையே எழக்கூடிய பகைமை உணர்வையும், தவறான புரிதல்களையும் தவிர்க்கப் பார்க்கிறான் என்பது தெளிவாகிறது.
பால காண்டத்தில், விசுவாமித்திரர் ராமனுக்கு பல்வேறு ஆயுதங்களில் பயிற்சி அளிப்பதைப் பற்றிப் படிக்கிறோம். லட்சுமணனுக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதைக்குறித்த தகவல்கள் தெளிவாக வழங்கப்படவில்லை; ஒருவேளை அவனுக்கு பயில்விக்கப்படாமலும் இருந்திருக்கலாம். ஆனால், ராமாயணத்தின் பிற்பகுதியில், ராமன் கற்றுத்தேர்ந்த அனைத்திலுமே, லட்சுமணனும் தேர்ச்சி பெற்றிருந்தான் எனத் தெரிய வருகிறது. பெரும்பாலும் ராமனே இப்பயிற்சியினை வழங்கி இருக்கக்கூடும். தான் விசுவாமித்திரரிடம் பயின்ற அனைத்தையும் தனது தம்பிக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றெண்ணுவது ராமனது இயல்பான சிந்தனையே. அதுபோலவே, கோசல தேசத்து அரசனாக தசரதன் ராமனைத் தேர்வு செய்ததாகக் கூறியதும் ராமன் லட்சுமணனிடத்தில், “உண்மையில் இந்த ராஜ்ஜியம் உனக்கும் சொந்தம். நாம் நால்வரும் ஒன்றிணைந்து இதனை ஆளலாம்!” என்கிறான். இச்செய்தியை தனது தாயாரான கௌசல்யா தேவியினிடத்தில் தெரிவிப்பதற்காக விரைந்தோடுகிறான். நற்செய்தியை கேள்விப்பட்டு அவளும் குதூகலிக்கிறாள்.
தொடரும்…
இந்த கட்டுரைத் தொடர் ‘ஷதாவதானி’ டாக்டர் ஆர். கணேஷ் அவர்கள் 2009இல் பெங்களூருவில் உள்ள கோகலே பொது விவகாரங்கள் நிறுவனத்தில் (Gokhale Institute of Public Affairs) நிகழ்த்திய கன்னட விரிவுரைகளின் ஹரி இரவிக்குமாரது ஆங்கிலத் தழுவலின் அடிப்படையில் எழுதப்பட்டது.
இதில் இடம்பெற்றுள்ள இராமாயணக் குறிப்புகள் அனைத்தும் வித்வான் ரங்கநாத ஷர்மாவினது எட்டு தொகுதிகளாலான அவ்விதிகாசத்தின் கன்னட மொழிபெயர்ப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளன (இது பெங்களூருவிலுள்ள ராமாயண பிரகாஷான ஸமிதியின் வெளியீடு).
டாக்டர் வி. விஜயலக்ஷ்மி அவர்களது விரிவான கருத்தாய்வுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.