தசரதன் ராமனைக் காட்டிற்குச் செல்லும்படி அறிவித்ததை ராமன் கௌசல்யா தேவியினிடத்தில் தெரிவித்தபின் அவளை ராமன் தேற்றுகிறான். அப்போது கௌசல்யா தேவியை தகப்பனைவிட தாயே நூறு மடங்கு உயர்ந்தவளென்றும், அதனால் தன் இச்சைப்படி ராமன் அவளையும் காட்டிற்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் கூறுகிறாள். ஆனால், இவ்விதம் நிகழ்ந்துவிட்டாலோ குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுவிடும். இதனை உணர்ந்த ராமன் தார்மீகமான, சாதுரியமான வழியில் அவனது தாயைக் கையாளுகிறான். அவன் அவளிடம், “முதலில் தாங்கள் என் தந்தைக்கு மனைவி, அதன் பிறகே எனக்குத் தாய். அதனால் தாங்கள் மகனுடன் இருப்பதைவிட தங்களது கணவனுடன் வசிப்பதே சாலச் சிறந்தது. குடும்பத்தில் தந்தை ஒரு பாதி என்றால் தாய் அதன் மறு பாதி. தங்களது கணவரது வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டும். காட்டிற்கு என்னுடன் வரக்கூடாது!”, எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிடுகிறான் (அயோத்தியா காண்டம், சர்க்கங்கள் 21-25யைக் காண்க). பிற்பாடு இதனையே காரணமாகக் கூறி, சீதை ராமனுடன்கூட வனவாசம் புகுகிறாள்!
முதலில் ராமன் கைகேயியின் ஆணைக்கிணங்க தான் தனித்தே காட்டுக்குச் செல்ல நிச்சயித்திருந்தான். அவன் சீதையிடம், “நான் தனியே வனத்துக்கு செல்லும் முன் உன்னைப் பார்த்துவிட்டு செல்வதற்காக இங்கு வந்தேன். பரதன்முன் என்னை ஒரு நாளும் புகழ்ந்து பேசிவிடாதே. பொதுவாகவே பதவியில் இருப்பவர்கள் தம்முன் பிறரைப் புகழ்வதை ரசிக்க மாட்டார்கள். அதனால் அவன்முன் எனது நற்பண்புகளை எடுத்துரைப்பதைத் தவிர்க்கப்பார்”, என்கிறான்.
सोऽहं त्वामागतः द्रष्टुं
प्रस्थितो विजनं वनम् ।
भरतस्य समीपे ते
नाहं कथ्यः कदाचन ॥
ऋद्धि युक्ता हि पुरुषा
न सहन्ते परस्तवम् ।
तस्मान्न ते गुणाः कथ्या
भरतस्याग्रतो मम ॥
(அயோத்தியா காண்டம், 26.24-25)
இருப்பினும், சீதையும், லட்சுமணனும் ராமனுடன் வனவாசம் செல்கின்றனர். தான் துணையுடன் காட்டுக்கு சென்றாலுங்கூட ராமன், வீட்டில் வசிக்கும் பிறருடன் பரதன், ஷத்ருக்னன், சுமித்திரை ஆகியோர் நல்லிணக்கத்துடன் வாழ வழிவகை செய்தான்.
ராமன் எந்தளவிற்கு குடும்பத்தினர்மீது பற்று வைத்திருந்தான் என்பது இவ்விதிகாசத்தின் பிற்பகுதியில் தெள்ளத்தெளிவாகிறது. ராவணனைக் கொன்றதும் ராமன் புஷ்பகவிமானத்தில் நாடு திரும்புகிறான். நந்திகிராமத்தில் வசித்துவந்த பரதனோ, ராமன் பதினான்கு ஆண்டுகள் கடந்த பின்னர் ஒரு தினமேனும் தாமதித்து வந்தால் நெருப்பில் விழுந்து தான் இறந்து விடுவதாக சத்தியம் செய்திருந்தான். வரும் வழியில் பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்தில் ராமன் தங்க நேர்ந்ததால், அவன் ஹனுமானை பரதனிடத்தில் தூதனுப்பினான். அப்போது அவன் ஹனுமானிடத்தில், “நான் வருவதாகக் கூறுகையிலே பரதனின் முகத்தில் சிரிய சஞ்சலம் ஏற்பட்டாலும், நீ உடனே என்னிடம் திரும்ப வந்து கூறிவிடு”, என்கிறான். உண்மையில் பரதன், ராமனில்லாமல் தான் பதினான்கு ஆண்டுகள் அரசாளப் போவதில்லை என்று கூறி, ராமனது பாதுகையை அரியணையில் வைத்தே அரசாண்டு வந்தான். ஆனாலும் பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டிருந்ததால் ஒரு வேளை அவனது அபிப்பிராயம் மாறிவிட்டிருக்கலாம் என்று ராமன் கருதினான். ஒரு வேளை பரதனுக்கு அரசாள்வதில் ஆனந்தம் ஏற்பட்டிருந்து, அதனால் ராமன் திரும்ப நாட்டுக்கு வருவது அவனுக்கு துக்கத்தை விளைவித்தால், தான் நாடு திரும்பத் தேவையே இல்லை என்றும் வேறெங்காவது சென்றுவிடலாம் என்றும் ராமன் கருதி இருந்தான். அவன் குடும்ப ஒற்றுமைக்கு அந்தளவு முக்கியத்துவம் வழங்கி இருந்தான். உறவை நிலைநாட்டுவதைக் காட்டிலும் அவனது தியாகம் ஒன்றும் அவ்வளவு பெரிதாக அவனுக்குப் படவில்லை. பரதனது நேர்மையிலோ எள்ளளவும் மாற்றமில்லை. நந்திகிராமத்திற்கு சென்ற ஹனுமானும் திரும்ப வராததால், ராமன் அங்கு என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை ஊகித்துக் கொண்டான்.
தனது குடும்ப ஒற்றுமை மாத்திரமல்லாது, பிறரது குடும்பத்திலும் பிளவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் ராமன் உறுதியாக இருந்தான். சுக்ரீவனின் அமைதிப் பேச்சுவார்த்தை ஏதும் வாலியினிடத்தே பலிக்காத காரணத்தால், வாலியை வதம்புரியவேண்டி வந்தது. ஆனால் அதற்குப் பிறகு அக்குடும்பத்தாரிடையே மேலும் குழப்பம் ஏதும் எழாமல் ராமன் பார்த்துக் கொண்டான். தாரை அவனை திட்டித் தீர்த்தபோது, ராமன் அவளிடம் கடினமாக நடந்துகொள்ளாமல் அவளைத் தேற்றினான். அங்கதனை யுவராஜாவாக நியமிக்கும்படி சுக்ரீவனுக்கு ஆணையிட்டான். அதன்பின் தாரை சுக்ரீவனை மணந்ததால் அக்குடும்பம் மேலும் வலுப்பெற்றது. சுக்ரீவன் தனது அண்ணனுக்கு ஈமக்கடன்களை செலுத்துகையில் ராமனும் அதே உணர்ச்சிப்பெருக்குடன் இணைந்து அவற்றில் ஈடுபடுகிறான். ராவணனின் துஷ்ட நடத்தைகளை பொறுக்கமாட்டாமல் விபீஷணன் ராமனிடம் சரண் புகுந்ததும், அனுதாபம்கொண்டு ராமன் அவனை ரக்ஷிக்கிறானே அன்றி, லங்கா ராஜ்ஜியத்தைப் பிரிக்க ராமன் ஒருநாளும் முற்படவில்லை. ராவணன் இறந்த பிறகு, அந்த துஷ்டனுக்கு ஈமக்கிரியைகளை தான் செய்யமாட்டேன் என விபீஷணன் பிடிவாதமாய் கூறுகையிலே ராமன் அவனிடம், “இறந்தபின் பகைமை ஏது! நீ ராவணனது ஈமக்கடன்களை நிறைவேற்றாவிட்டால், அவனை என் அண்ணனாக பாவித்து நானே அவற்றை நிறைவேற்றுவேன்!” என்கிறான்.
मरणान्तानि वैराणि
निर्वृत्तं नः प्रयोजनम् ।
क्रियतामस्य संस्कारो
ममाप्येष यथा तव ॥
(யுத்தகாண்டம் 112.26)
அப்பேற்பட்ட பரந்தக் குடும்பக் கண்ணோட்டம் கொண்டவன் ராமன்! இறப்பை வெல்வதரிது, இருப்பினும் இங்கிருப்பவர்களது வாழ்வு கசந்துவிடக்கூடாது என்பதை ராமன் உணர்ந்திருந்தான். ‘சீதை-பரித்தியாக’ அத்தியாயத்தில், தம்மக்கள் ஒருவரை ஒருவர் சந்தேகித்து விடக்கூடாது என்கிற காரணத்தால், சீதை சிதையில் ஏறுவதைத் தடுக்காமல்நின்று, தன் குடும்பத்தையே சிதைத்துக் கொள்கிறான். உயரிய சமுதாய நல்லிணக்கத்திற்காக தனதருமை மனைவியையே தியாகம் செய்யத் துணிகின்றான்.
எவரையும் ராமன் தனது குடும்ப அங்கத்தினராக ஏற்றுக்கொள்கிறான். முதலில் படகோட்டியான குகனிடத்தில், “இதுவரையில் நாங்கள் நான்கு சகோதரர்கள். இனி உன்னையும் சேர்த்து நாம் ஐவர்”, என்கிறான். பின் சுக்ரீவனிடம், “இதுவரையில் நாங்கள் ஐவர். இனி உன்னுடன் சேர்த்து நாம் அறுவர்”, என்கிறான். அதன்பின் விபீஷணனிடம், “இதுவரையில் நாங்கள் அறுவர். இனி உன்னுடன் சேர்த்து நாம் எழுவர்”, என்கிறான். ஆனால் இவை வெறும் வார்த்தை ஜாலங்களல்ல. உண்மையிலேயே ராமன் இவ்வனைவரையும் (குகன், சுக்ரீவன், ஹனுமான், விபீஷணன் போன்றோரை) தன் உடன் பிறந்த சகோதரர்களாகவே பாவித்தான். அதனால்தான் ராமனது துன்பத் தருணங்களிலும் இவர்கள் அவனுக்குத் துணை நின்றார்கள். மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் வெவ்வேறு பின்னணியைச் சார்ந்தவராவர். ராமன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவன். குகனோ வேட்டுவர் சமுதாயத்தை சேர்ந்த ‘நிஷாத’ மன்னன். சுக்ரீவனும், ஹனுமானும் குரங்கினத்தை சேர்ந்த மன்னர்கள். விபீஷணனோ ஒரு ராக்ஷஸ ராஜா. பொதுவாக உயரிய அரச பரம்பரையைச் சேர்ந்த எவரும் தன்னைவிடத் தகுதி குறைந்தவர்களிடத்தில் தோழமை பாராட்ட மாட்டார்கள். ஆனால் ராமனோ அவ்வாறு எண்ணுபவனல்லன். அவன் அனைவரையும் சமமாகவே பாவித்தான். யுத்தத்திற்குப் பிறகு, பல்லக்கில் பவனிவந்த சீதையைக்காண குரங்குகளும், ராக்ஷஸர்களும் முந்திக்கொண்டு வருகையில் விபீஷணன் (இன்றுள்ள இஸட் பிரிவு பாதுகாவலர்களைப் போன்று) அவர்களைத் தடுக்க முற்பட்டான். இதைக் கண்டு ராமன் வருத்தம் கொள்கிறான். அவன் விபீஷணனிடம், “நீ ஏன் என்னை மீறி இவ்வனைவரையும் துன்புறுத்துகிறாய்? உடனடியாக உன் பலவந்தத்தை நிறுத்து! இவரனைவரும் என் மக்களே!” என்கிறான்.
किमर्थं मामनादृत्य
कृश्यतेऽयं त्वया जनः ।
निवर्तयैनमुद्योगं
जनोऽयं स्वजनो मम ॥
(யுத்தகாண்டம் 117.25)
ராமன் ‘க்ஷத்திரிய-தர்மம்’ எனும் தனது பண்பாட்டு மரபினைக் கடைபிடிப்பதில் பெரும் நாட்டம் கொண்டிருந்தான். தன் குடும்பத்தினர் இதுவரையில் காப்பாற்றிவந்த தர்மத்தை மதித்து, தானும் அவற்றை குறைவின்றி அனுசரிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தான். அவர்கள் வனவாசத்தில் இருக்கையில் சீதை அவனிடத்தில், தமக்கு தீங்கு விளைவிக்காத பட்சத்தில் ரிஷிகளுக்காக தாங்கள் ஏன் அரக்கர்களை கொல்ல வேண்டும் என வினவுகிறாள் (அரண்யகாண்டத்தின் சர்க்கம் 9இன் பிரபலமான வசனமான “स्नेहाच्च बहुमानाच्च स्मारये त्वां न शिक्षये | न कथञ्चन सा कार्या गृहीत धनुषा त्वया” இங்குதான் வருகிறது). ராமன் அதற்கு அவளிடம், “நீ கூறுவது உண்மைதான். அரக்கர்கள் நமக்கு இதுவரையில் விசேஷ கெடுதி ஏதும் விளைவித்து விடவில்லை. மேலும் வனவாசத்தில் இருப்பதால் நாம் நிராயுதபாணிகளாய் துறவறத்தை கடைபிடிக்க வேண்டியதும் அவசியமே. இருப்பினும் பிறப்பால் முதலில் நான் ஒரு க்ஷத்திரியன். அனைவரையும் ஆதரித்து, காத்து, ரக்ஷிக்க வேண்டியது எனது முதற்கடமை”, என்கிறான். (அரண்யகாண்டம் சர்க்கம் 10யைப் பார்க்கவும்).
ஒரு க்ஷத்திரியனாக தான் அனைவருக்கும் கொடுக்கலாமே அன்றி தான் ஏதும் பெறக்கூடாது என்பதை உணர்ந்திருந்தான். குகன் தனக்கு விருந்தோம்பல் வழங்குகையில், அதனைப் பெற மறுத்து ராமன் தன் குதிரைகளுக்கு அன்னபானம் வழங்குமாறு தெரிவித்துவிடுகிறான். மேலும் வெறும் நீரைப் பருகிவிட்டு ராமன் உறங்கி விடுகிறான். அரண்யகாண்டம் (5.33)யில் ஷரபங்க முனிவர் தமது புண்ணியங்கள் அனைத்தையும் ராமனுக்கு தத்தம்கொடுக்க முன்வரும்போது, அதனை மறுத்து விடுகிறான். மேலும், அவர்தமது புண்ணிய பலன்களால் உயரிய சொர்க்கத்தை எய்துவார் எனவும் கூறுகிறான்.
ராமன் வாக்கு தவறாதவன். பதினான்கு வருடங்கள் வனவாசம் செய்வதாக வாக்களித்துவிட்டதால், அதனை அவ்வாறே நிறைவேற்றினான். நினைத்திருந்தால் அவனால் அயோத்தியையிலிருந்து கானகம் புகுந்ததும் தனது மாமனாரான ஜனகர் ஆட்சிபுரியும் விதேஹ தேசத்துக்குச் சென்று உல்லாசமாய் காலத்தைக் கழித்திருக்க முடியும். ஜனகரும், சீதையும் கூட இதனால் ஆனந்தம் அடைந்திருப்பார்கள். எனினும் ராமன் அவ்வாறு செய்யவில்லை. அவன் சொன்னசொல் தவறாதவன். சத்தியத்துக்கு சமரசமேது? கிஷ்கிந்தைக்கு அவனைக் கூட்டிச்செல்ல சுக்ரீவன் முன்வந்தபோதும் அதனை மறுத்துவிட்டு காட்டிற்குள் ஒரு சிறிய குகையிலே வசித்து வந்தான் ராமன். சுக்ரீவ பட்டாபிஷேகத்துக்கும் ராமன் செல்லவில்லை. அவன் லட்சுமணனை மாத்திரம் அனுப்பி வைத்தான். இதேபோன்றே விபீஷண பட்டாபிஷேகத்துக்கும் லட்சுமணனை மாத்திரம் லங்கைக்கு அனுப்பி வைத்தான். ஏனெனில் லட்சுமணன் தானாகவே முன்வந்து ராமனுடன் காட்டுக்குச் சென்றான், ஆகையால் அவன் எந்த வாக்கிற்கும் கட்டுப்பட்டிருக்கவில்லை. அதனால் எவரும் தன்னை கவனித்துக்கொண்டிருக்காவிடினும் ராமன் சத்தியத்தின் பாதையையே கடைபிடித்தான். அவனுக்கு அதன்றி வேறெந்த வழியும் தெரியாது.
கணவன் மனைவிக்கு இடையேயான புரிதல் குடும்ப வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவை. உலகிலுள்ள அனைத்து தம்பதிகளுக்கும் ஏற்ற உதாரணம் ராமன்-சீதை தம்பதியினர். இவ்வன்பை சிவன்-பார்வதி தம்பதியினரிடையேயும் நாம் காண்கிறோம். ஒருவரையொருவர் அடைவதற்கென அவரிருவரும் கடுந்தவம் புரிந்தனர். அர்தநாரீசுவரராக இணைந்து பூரணத்தின் சரி பாதிகளாய்த் திகழ்ந்தனர். அதனால் அவர்களும் ஆதர்ச தம்பதிகளே. எனினும் ராமன்-சீதை ஜோடியிலேதான் நாம் குடும்ப லட்சணத்திற்கான அம்சத்தைக் காண்கிறோம். சிவன்-பார்வதி ஜோடி தத்துவார்த்தமானது, எனில் ராமன்-சீதை ஜோடியோ யதார்த்தமானது. ராமாயணத்திலே நாம் பல உணர்ச்சிப் பெருக்குகளையும், ரசாபாசங்களையும், ஏற்ற-இறக்கங்களையும் காண்கிறோம். ஆனால் ராமன் இவ்வனைவற்றையும் கடந்து நிற்கிறான். அனசூயையினிடத்தில் சீதை தன் சுயம்வரத்தை விளக்கிக் கூறுகையில், தனது கணவனின் சிறப்பையும் எடுத்துக் கூறுகிறாள். அவள் ராமனைப் பற்றி அனசூயையினிடத்தில், “புலன்களை வென்றவர், இரக்க சுபாவமுடையவர், தர்மசீலர், என்மீது அளவற்ற அன்புடையவர், சத்தியம் தவறாதவர்; எனது பெற்றோரைப் போன்றே என்னை ரக்ஷித்து வருகிறார்!” என்று கூறுகிறாள்.
किं पुनर्यो गुणश्लाघ्यः
सानुक्रोशो जितेन्द्रियः ।
स्थिरानुरागो धर्मात्मा
मातृवर्ती पितृप्रियः ॥
(அயோத்தியாகாண்டம் 118.4)
சீதையின் தாய்-தந்தையரைப்போன்று ராமன் அவளைப் பரிபாலித்து வந்தான்-என்ன ஒரு மகத்தான மனிதன்!
அயோத்தியாகாண்டத்தில், ராமன் சமையல் செய்வதைப் பற்றின குறிப்புகளும் உள்ளன. அவன் வேட்டையாடிய மிருகத்தை நெருப்பிலிட்டுப் பக்குவமாக சீதைக்காக உணவு படைக்கிறான். அதனை ஆசையாசயாய் அவளுக்கு பரிமாறுகிறான். (அயோத்தியாகாண்டம் 96.1-2யைக் காண்க. இதற்கு முன்னிரு சர்க்கங்களில் வால்மீகி சித்திரகூடத்தையும், கங்கையையும் அழகாக வர்ணிக்கிறார்.) ஒரு பூவை சீதை ஆசையாக ஏறிட்டாலுங்கூட ராமன் அதனைப் பறித்து அவளிடத்தில் ஒப்படைப்பான். அடர்த்தியான கானகத்தில் அவள் அழகைக் கண்டு ரசிக்க எவரும் வரப்போவதில்லை என்பதை அறிந்திருந்துங்கூட, அதைப்பற்றியெல்லாம் ராமனுக்குக் கவலை ஏதுமில்லை. அவள் கேட்காமலேயே அவளது இச்சைகளை பூர்த்தி செய்துவிட வேண்டும் என்றெண்ணினான்!
“சிறு குருவியை வீழ்த்த பிரம்மாஸ்திரம்” என்பதுபோன்ற ஒரு பழமொழி தமிழில் உண்டு. இதற்கு எடுத்துக்காட்டாக, சீதையை வதைத்த, காக்கை போன்ற உருவம்கொண்ட காகாசுரனை வீழ்த்த ராமன் ஆயுதங்களில் தலையாய பிரம்மாஸ்திரத்தையே பயன்படுத்தினான். அந்தளவிற்கு சீதையின்பால் அளவுகடந்த அன்பை ராமன் வைத்திருந்தான்.
தொடரும்...
இந்த கட்டுரைத் தொடர் ‘ஷதாவதானி’ டாக்டர் ஆர். கணேஷ் அவர்கள் 2009இல் பெங்களூருவில் உள்ள கோகலே பொது விவகாரங்கள் நிறுவனத்தில் (Gokhale Institute of Public Affairs) நிகழ்த்திய கன்னட விரிவுரைகளின் ஹரி இரவிக்குமாரது ஆங்கிலத் தழுவலின் அடிப்படையில் எழுதப்பட்டது.
இதில் இடம்பெற்றுள்ள இராமாயணக் குறிப்புகள் அனைத்தும் வித்வான் ரங்கநாத ஷர்மாவினது எட்டு தொகுதிகளாலான அவ்விதிகாசத்தின் கன்னட மொழிபெயர்ப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளன (இது பெங்களூருவிலுள்ள ராமாயண பிரகாஷான ஸமிதியின் வெளியீடு).
டாக்டர் வி. விஜயலக்ஷ்மி அவர்களது விரிவான கருத்தாய்வுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.