...
 

சிவ-ராம-கிருஷ்ணன்: கிருஷ்ணனின் பிறப்பு

This article is part 6 of 10 in the series சிவ-ராம-கிருஷ்ணன்


முன் அத்தியாயங்களில் நாம் இதுவரையில், சிவன் எவ்வாறு ஒரு தனி நபருக்கான அடையாளமாகவும், ராமன் எவ்வாறு ஒரு குடும்பஸ்தருக்கான அடையாளமாகவும் விளங்கினார்கள் என்பதைப் பற்றிப் பார்த்தோம். நாம் இப்போது கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றையும், அவன் எவ்வாறு ஒரு சமூகப் பிரதிநிதியாக தன்னை முன்னிலைப் படுத்தினான் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

பொதுவாகவே கலைஞர்கள் சிவன், ராமன், கிருஷ்ணன் அல்லது காளி, துர்கை, ஸ்கந்தன், கணேசன் ஆகியோரை வரைகையிலே, அவர்களை ஆயுதபாணிகளாகவே வரைகின்றனர். சிவன் கையில் த்ரிசூலமும், ராமன் கையில் வில்-அம்பும், கண்ணன் கையில் சுதர்சன சக்கரமும் ஏந்தி நிற்கிறார்கள். இது ஒரு சிலருக்கு மன சஞ்சலத்தை விளைவிப்பதாகத் தெரிகிறது. ராமன் கையில் வில்லைப் பார்த்ததாலோ, கண்ணன் ஒரு சிலரை வீழ்த்துவதாலோ நாம் ஏன் வெட்கமோ, வருத்தமோ படவேண்டும்?  ராமன் சீதையின் கணவன் மாத்திரமல்ல, அவன் ராவணனையும் கொன்று வீழ்த்தியவன். குடும்ப நலனுக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூக நலனுக்காகவும் ராமன் குரூரனான ராவணனைக் கொன்று வீழ்த்தினான். குழலூதும் கண்ணன் கோகுலத்தில் மாடு மேய்ப்பவன் மட்டுமல்ல, அவன் கம்சன் போன்ற பல கொடிய அரக்கர்களைக் கொன்று வீழ்த்தியவன்.

இந்திய பண்பாடு வீரம் செறிந்தது, கோழைகளுக்கு அதில் இடமில்லை. சுய கட்டுப்பாடும், தீங்கிழைக்காத மனோபாவமும் இங்கு பெருவாரியாகப் போற்றப்பட்டு வந்தாலும், மறு கன்னத்தைக் காட்டுவது இங்கு போற்றப்படுவதில்லை. இதை உணர்த்தும் விதமாக, “நம்மை எதிர்ப்போரது கழுத்தையும், நாம் எதிர்ப்போரது கழுத்தையும் அறுத்துவிடலாம்!”, என்கிறது கிருஷ்ணயஜுர்வேதத்தின் தைத்திரியசாகையின் ஒரு பிரபலமான வரி.

योऽस्मान् द्वेष्टि यं च वयं द्विष्म इदमस्य ग्रीवा अपि कृन्तामि
பௌதாயன ஷ்ரௌதசூத்ரம் 4.2.110

“தீயோரை தண்டித்தல், நல்லோரை கெளரவித்தல், நியாயமான வழிமுறைகளில் அரச கஜானாவை நிறப்புதல், வழக்காளிகளை நடுநிலையாகக் கையாளுதல், ராஜ்ஜியத்தைப் பாதுகாத்தல் ஆகியவையே ஒரு அரசன் கடைபிடிக்கவேண்டிய அத்தியாவசிய பண்புகளான பஞ்ச மகாயக்ஞங்களாகும்”, என ராஜதர்மம் விதிக்கின்றது.

दुष्टस्य दण्डः सुजनस्य पूजा
न्यायेन कोशस्य च सम्प्रवृद्धिः।
अपक्षपातोऽर्थिषु राष्ट्ररक्षा
पञ्चैव यज्ञाः कथिता नृपाणाम्॥
ஆத்ரேய தர்மசாஸ்திரம் 28

(நாம் இவ்வரிகளையே வராஹமிஹிரரின் யோகயாத்திரை 2.33யிலும், விக்ரம-சரிதையிலும் காண்கிறோம்)

அபலைகளை ரக்ஷிப்பதும், துஷ்டர்களை சிக்ஷிப்பதுமே க்ஷத்திரிய தர்மமாகும். க்ஷத்திரியர்களது இவ்வடையாளம் நமது பண்டைய சிந்தனையாளர்களாலும், தத்துவவாதிகளாலும் வெகுவாகப் போற்றப்பட்டு வந்தது. பிரம்மத்துவமும், க்ஷத்திரியத்துவமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையே சனாதன தர்மம் வலியுறுத்தி வந்துள்ளது. முன்னது அறிவுசார் ஆன்மீகத் தேடலைக் குறிக்கையிலே, பின்னது உடல்வீரம்சார் தற்காப்பைக் குறிக்கின்றது. இதை உணர்த்தும் விதத்திலேயே நமது ஆண் மற்றும் பெண் தெய்வங்கள் அனைவரும் பூ, நகை, அணிகலன்கள், ஆபரணங்கள் மற்றும் வாத்தியங்கள் ஆகியவற்றை சுமக்கின்ற அதே வேளையில் ஆயுதங்களையும் ஏந்தி நிற்கிறார்கள். அழகான கவித்துவமான அம்சத்தையும், மதிப்பிற்குரிய போர்வீரர்களுக்குண்டான அச்சமூட்டும் அம்சத்தையும் பெற்று விளங்குகின்றனர் நம் தெய்வங்கள்.

பல பழைய மற்றும் புதிய சிந்தனையாளர்கள் கண்ணனை ஏமாற்றுபவனாகவும், மோசடியாளனாகவும், நயவஞ்சகனாகவும் நினைப்பதுண்டு. இதைவிட தவறான எண்ணம் ஒன்று இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு திடமான தன்னலமற்ற ஞானி எவ்வாறு நடப்பினும் அது தவறாகாது என்றே நமது பண்டைய பகுத்தறிவாளர்கள் கருதி வந்தனர். ஓர் அதிகாரமுள்ள தைரியசாலி, அனைத்தையும் கற்றுத்தேர்ந்த தர்மசீலன், தன்னலமற்ற தகைமை உடையவன் எது செய்தாலும் அது நியாயமாகவே இருக்கும். அவன் தப்பிழைக்க வாய்ப்பே இல்லை. கண்ணன் அப்பேற்பட்டவன்.

சாந்த சொரூபியான ஆத்மாராமனாக விளங்குவதால் சிவனை சம்பு என்றும் சோமன் என்றும் அழைக்கிறோம். அனைவரும் நேசிக்கும் ரமணீயனாக ராமனை வழங்குகிறோம். குடும்பப்பாங்கானவன். ‘க்ருஷ்ணா’ எனும் சொல் ‘கர்ஷதி இதி க்ருஷ்ணா:’ (कर्षति इति कृष्णः) என்கிற சமஸ்கிருத வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது. ‘கர்ஷதி’ என்றால் ‘ஈர்ப்பது’ என்று பொருள். மேலும், ‘க்ருஷ்ணா’ என்ற சொல்லுக்கு ‘கருமை’, ‘இருட்டு’ எனும் பொருளும் உண்டு. அவனது பெயரிலேயே மறைமுகமான பொருள் ஒன்று இருப்பதை உணர முடிகிறது.

ராமனும், க்ருஷ்ணனும் விஷ்ணுவின் இரு அவதாரங்கள். பிறப்பிலிருந்தே இவ்விருவருக்கிடையே பல வேற்றுமைகளை நம்மால் உணர முடிகிறது. ராமன் சித்திரை மாதம், வசந்த காலத்தில் (வசந்த ருது), வளர்பிறை (சுக்லபக்ஷ), உத்தராயணத்தில் பகல் நேரத்தில் பிறந்தான். கண்ணன் பாத்ரபத மாதம், பருவமழைக் காலத்தில் (வர்ஷ ருது), தேய்பிறை (க்ருஷ்ணபக்ஷ), தக்ஷிணாயணத்தில் இரவு நேரத்தில் பிறந்தான். பல கொண்டாட்ட குதூகலங்களுக்கிடையே அரண்மனையில் தலைப்பிள்ளையாக ராமன் பிறந்தான். பயங்கரமான மரண அச்சுறுத்தலுக்கிடையே சிறைச்சாலையில் எட்டாவது பிள்ளையாக கண்ணன் பிறந்தான்.

ராமன் பிறந்ததோ பிரகாசமான காலைப் பொழுதில். கண்ணன் பிறந்ததோ இருட்டான புயல் இரவில். மேகமூட்டம் நிலவை மூடி மறைத்தன. மின்னல் மழை துவங்குகையில் பாயுமே ஒழிய பலத்த மழையின்போது மின்னல் பாய்வதில்லை. பலத்த மழையின்போது அக்னிமூட்டவும் முடியாது. சூரியன் இல்லை, சந்திரன் இல்லை, மின்னல் இல்லை, நெருப்பில்லை; வெளிச்சம் என்பதே கிடையாது.

பிறப்பால் எவ்வளவுதான் வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், ராமனுக்கும் கண்ணனுக்கும் பிறப்புண்டு. ஆனால் சிவனுக்கு அப்படியா? அவன் பிறப்பற்றவன். ‘நான்’ என்னும் அகங்காரம் எப்போது தோன்றுகிறது? ஒரு குடும்பம் தோன்றுவதையோ, சமூகம் தோன்றுவதையோ நம்மால் கணித்துக் கூறிவிட முடியும். ஆனால் அந்தராத்மாவின் தோற்றத்தைப்பற்றி ஒருவராலும் கணித்துக் கூறிவிட முடியாது. நான் பிறக்கும்போதுதான் எனக்கு ஞானமும் பிறக்கிறது. ஆனால் இந்த ஞானத்தின் பிறப்பிடம் எது? நான் பெற்றிருக்கும் ஞானத்தை வைத்து என்னால் என் பிறப்பை, அதாவது இந்த ஞானத்தின் பிறப்பிடத்தை ஊகித்துவிட முடியுமா? இது அசாத்தியமானது;  நம் முதுகில் நாமே ஏறி உட்கார நினைப்பது போன்றது! இவ்வகையில் பார்த்தால், சிவன் பிறப்பற்றவன்.

ராமனின் பிறப்பு பிரமாதமானது. அயோத்தியையில், ஒரு பெரிய அரண்மனையில், பல கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஒரு மகத்தான மன்னனது மைந்தனாக அவன் பிறந்தான். நமக்குங்கூட நமது குடும்ப வாழ்க்கை இம்மாதிரி பிரகாசமாக, ஆனந்தமாக, குதூகலமாக, தெள்ளத் தெளிவானதாக அமைய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதல்லவா? குடும்ப வாழ்க்கையில் இக்கட்டுப்பாடுகளை நாம் விதித்துக் கொள்ளலாம். ஆனால் சமூகம் என்று வரும்போது இந்நிலை மாறிவிடுகிறது. ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் ஒற்றுமையாகவும், குதூகலமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஒரு சமுதாயத்திலுள்ள பிரஜைகள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்துவிடுவதென்பது சாத்தியமானதா? க்ருஷ்ணனின் பெயரும், பிறப்பும் சமுதாயத்தில் நாம் காணும் இந்த ஏற்றத்தாழ்வினைக் குறிக்கிறது. தமோ குணம் செறிந்த இரவு வேளையில் ஒட்டுமொத்த உலகையும் இருள் சூழ்ந்து நிற்கையிலே, ஒரு கரிய குழந்தை உதித்து உலகிற்கு வெளிச்சம் அளிக்கிறான் – இதுவே கண்ணனின் தோற்ற ரகசியம். கவிநடையிலே கூறுவதாயின், என்ன ஒரு வியப்புமிகு ‘விரோதாபாஸம்’ இது! சிறைச்சாலையில் பிறந்த குழந்தை ஒன்று சமூகப் பூட்டுக்களைக் களைந்தெறிந்தது!

ராமன் தனது மனைவி சீதையை ராவணனின் பிடியிலிருந்து விடுவித்து, குடும்பத்தைப் பராமரித்து, வெற்றிகரமாக அரசாண்டு வந்தான். ஆனால் கண்ணன் அப்படியா? அவனால் முடிந்தவரையில் சமூகத்தைக் காப்பாற்ற முயன்றான், இறுதியில் தோல்வியைத் தழுவினான். ராமாயணத்தின் ராமன், ராவணனை வென்றதால் பெருமிதம் கொண்டான். மஹாபாரதத்தின் தர்மராஜனது நிலைபாடோ வேறாக இருந்தது. போரின் முடிவில் தர்மன், “இந்த வெற்றிகூட எனக்குத் தோல்வியாகவே படுகிறது”, என்கிறான்.

जयोऽयमजयाकारो भगवन् प्रतिभाति मे।
சாந்திபர்வம்1.15

ஒரு முடிவு எடுக்கும்போது அது சமுதாயத்திலுள்ள சிலருக்கு சாதகமாகவும், வேறு சிலருக்கு பாதகமாகவும் அமைந்து விடக்கூடும். ஒரு  சிலர் அவற்றை வெற்றியாகவும், வேறு சிலர் அவற்றை தோல்வியாகவும் பாவிப்பது இயல்பே. ஒரு குடும்பத்துக்கு எது நல்லது எது கெட்டது என்பதை நம்மால் வரையறுக்க முடியும். ஆனால் ஒரு சமூகம் என்று வரும்போது எதை வைத்து வரையறுப்பது?

இதுவே கண்ணனது வாழ்வில் ஒரு பெரிய இடர்பாடு. எந்த உயர் நிலையையும் வகிக்காமல், பதவி மீது ஆசை வைக்காமல் அனைவரின் நலனுக்காகவும் அவன் பொதுவாகப் பாடுபட்டான். உலக நன்மை ஒன்றே அவனது குறிக்கோளாக இருந்தது.

ஒரு குடும்பத்திற்கென குடும்பத்தலைவரை நியமிப்பது எளிது. ஒட்டுமொத்த குடும்பத்துக்கான முடிவுகளையும் அவனோ/அவளோ எடுத்து, அக்குடும்பத்தைக் கட்டுக்கோப்பாக வழிநடத்திச் செல்ல முடியும். ஆனால், ஒரு சமூகத்தலைவனைத் தேர்ந்தெடுப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமா? மக்களை வழிநடத்தும் ஒருவர் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். ஒரு நல்ல தலைவருக்குப் பக்கபலமாக இருப்பதே ஆகச்சிறந்த நடைமுறை. க்ருஷ்ணன் ஒருபோதும் அரசாண்டதில்லை. மாறாக அவன் தலைசிறந்த மன்னர்கள் பலருக்கு பக்கபலமாக இருந்தான். அவன் நல்லோருக்குத் தோள்கொடுத்தான். எப்போதும் அவன் பொதுமக்களுக்காகவே பாடுபட்டான்; அவன் போற்றியது உலகப் பொதுமறை ஒன்றையே.

பிறக்கும்போதே சொந்த தாய்-தந்தையரைப் பிரிய நேர்ந்தது. தான் மாற்றான் தாய்-தந்தையரால் வளர்க்கப்பட்டுவந்த ரகசியம் பருவப் பிராயத்தில்தான் அவனுக்குத் தெரிய வந்தது. அதனால் அவன் மனம் தளரவில்லை. சமூகத்தின்பாலும், உலகின்பாலும் அக்கறைகொண்ட ஒருவன் குடும்ப பாரத்தால் உணர்ச்சிவசப்படக் கூடாது என்பதற்கான சிறந்த உதாரணமாவான் க்ருஷ்ணன்; அவன் அவற்றைக் கடந்து சென்றாக வேண்டும். ராமனுக்கோ தன் பெற்றோர்மீது அளவுகடந்த அக்கறை.

தான் செய்யவேண்டிய காரியங்களை கண்ணன் எவ்வித பந்தங்களுக்கும் கட்டுப்படாமல் செவ்வனே செய்து முடித்தான். பதின்மூன்று-பதிநான்கு வயதிருக்கும்போது அவன் தனது பிறவி தாய்-தந்தையரான வசுதேவனையும், தேவகியையும் சந்தித்தான். அவர்களை சந்தித்தபிறகும் அவன் அவர்களிடத்தில் பரிவன்புடனே பழகி வந்தான். இருப்பினும் அவன் உணர்ச்சிவசப் படவில்லை. அவன் வளர்ப்புத் தாய்-தந்தையரான யசோதை மீதும், நந்தகோபர் மீதும் அவன் பெரும் மதிப்பு வைத்திருந்தான். ஆனாலும், நேரம்வரும்போது அவர்களைவிட்டுப் பிரிந்து சென்றான். இதனால் அவன் நன்றி கெட்டவனாகிவிடுவானா? கிடையவே கிடையாது. அவர்கள்மீது அன்பும், பாசமும் வைத்திருந்தான், இருப்பினும் க்ருஷ்ணன் பந்தபாசங்களுக்கெல்லாம் கட்டுப்படாதவன். உறவுகளுக்காக அவன் தன்னைத்தானே வீழ்த்திக் கொள்ளவில்லை.

ராமனது வாழ்விலோ இதுபோன்ற பல தருணங்களை நாம் பார்க்கலாம். பெரும்பாலான தருணங்களில் அவன் இவரிவருக்காக தான் இவ்வாறு நடந்துகொண்டதாகக் குறிப்பிடுகிறான். ராமன் பொறுப்புகளால் மாத்திரமல்லாமல் உணர்ச்சிகளாலும் வழிநடத்தப்பட்டான். இதனை நாம் க்ருஷ்ணனிடத்தில் காண முடியாது. உண்மையில் அவன் பாண்டவர்கள் பக்கத்திற்காக அரும்பாடுபட்டாலும், பாண்டவர்களது புதல்வர்களான அபிமன்யுவோ, கடோத்கசனோ அல்லது த்ரௌபதியின் ஐந்து மைந்தர்களோ இறக்கின்ற தருவாயில் துக்கத்தையோ, சோகத்தையோ வெளிப்படுத்தவில்லை. இதனால் அவன் பாண்டவர்களின்பால் மட்டுந்தான் அக்கறை வைத்திருந்தான் என்று கூறிவிட முடியுமா? அவர்களுங்கூட அவனுக்கு முக்கியமானவர்களல்ல. அவனைப் பொருத்தவரையில்,  இருப்பவர்களுக்குள் அவர்களை சிறந்தவர்களாகக் கருதினான்.

 

தொடரும்

இந்த கட்டுரைத் தொடர் ‘ஷதாவதானி’ டாக்டர் ஆர். கணேஷ் அவர்கள் 2009இல் பெங்களூருவில் உள்ள கோகலே பொது விவகாரங்கள் நிறுவனத்தில் (Gokhale Institute of Public Affairs) நிகழ்த்திய கன்னட விரிவுரைகளின் ஹரி இரவிக்குமாரது ஆங்கிலத் தழுவலின் அடிப்படையில் எழுதப்பட்டது.

இதில் இடம்பெற்றுள்ள இராமாயணக் குறிப்புகள் அனைத்தும் வித்வான் ரங்கநாத ஷர்மாவினது எட்டு தொகுதிகளாலான அவ்விதிகாசத்தின் கன்னட மொழிபெயர்ப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளன (இது பெங்களூருவிலுள்ள ராமாயண பிரகாஷான ஸமிதியின் வெளியீடு).

Series Navigation << சிவ-ராம-கிருஷ்ணன்: உலகம் ஒரு குடும்பம்சிவ-ராம-கிருஷ்ணன்: தர்மத்திற்குத் தோள்கொடுத்தல் >>
Sripriya Srinivasan Krishna சிவ-ராம-கிருஷ்ணன்: கிருஷ்ணனின் பிறப்பு sripriya

Sripriya Srinivasan

Sripriya Srinivasan is a Computer Science Engineer with a deep interest in literature, philosophy, science, and translation. She has translated two books into Tamil: Dr. A P J Abdul Kalam and Dr. Y. S. Rajan’s'Scientific Indian' (as கலாமின் இந்தியக் கனவுகள்) as well as 'The New Bhagavad-Gita' by Koti Sreekrishna and Hari Ravikumar (as பகவத்கீதை தற்காலத் தமிழில்). Tamil being her mother tongue, she hopes to contribute to its literature.
Sripriya Srinivasan Krishna சிவ-ராம-கிருஷ்ணன்: கிருஷ்ணனின் பிறப்பு sripriya